முகப்பு
செய்திகள்

சூர்யாவுக்குத் தேசிய விருது கிடைக்காவிட்டால் நான் போராடுவேன்: பிரபல தயாரிப்பாளர்

இந்த வருட தேசிய விருது உங்களுக்கானது. இல்லையென்றால் அதற்காக நான் போராடுவேன். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

சூரரைப் போற்று படத்துக்காக சூர்யாவுக்குத் தேசிய விருது கிடைக்காவிட்டால் அதற்காக நான் போராடுவேன் பிரபல தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் கூறியுள்ளார்.

இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.

கடந்த புதன் அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சூரரைப் போற்று படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தைப் பாராட்டி பிரபல தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் கூறியதாவது:

எல்லாத் துறைகளிலும் படம் உயரப் பறந்துள்ளது.

கோபக்கார இளைஞனாகவும் தொழில்முனைவோராகவும் அன்பான கணவராகவும் என எல்லாக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார் சூர்யா. தான் நடித்துள்ள எல்லாக் காட்சிகளிலும் முத்திரை பதித்துள்ளார் அபர்ணா முரளி. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகித்தின் ஃபிரேம்கள் ஓவியம் போல உள்ளன. கலை இயக்குநர் ஜாக்கி, படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா ஆகிய இருவரும் மேலும் பல நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

ஊர்வசி மேடம் அருமையாக நடித்துள்ளார்.

இது சூரரைப் போற்று அல்ல. சூர்யாவைப் போற்று. மாறாவாக வாழ்ந்துள்ளார். இந்த வருட தேசிய விருது உங்களுக்கானது. இல்லையென்றால் அதற்காக நான் போராடுவேன். 

தொலைநோக்கு எண்ணம் கொண்டவர் இயக்குநர் சுதா கொங்கரா. இப்படத்தில் வெளிப்பட்ட உங்கள் திறமையினால் துல்லியத்தைச் சாதித்துள்ளீர்கள். சல்யூட் என்று கூறியுள்ளார்.  

அறம், ஐரா, குலேபகாவலி, தும்பா, க/பெ. ரணசிங்கம் போன்ற படங்களை கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பாகத் தயாரித்தவர் ராஜேஷ். சமீபத்தில், பாஜகவின் தமிழகத் தலைவா் எல். முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.