ஹிந்தி திணிப்பு தொடர்பாக விமான நிலையத்தில் நேர்ந்த அனுபவத்தை வெளிப்படுத்தினார் இயக்குநர் வெற்றிமாறன். இதையடுத்து ஹிந்தித் திணிப்புக்கு எதிராகப் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது தமிழ்த் திரையுலகம்.
சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு இயக்குநர் வெற்றிமாறன் பேட்டியளித்திருந்தார். அதில், 2011-ல் தனக்கு ஹிந்தி தெரியாததால் தில்லி விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறினார். இதையடுத்து ஹிந்தி திணிப்புக்கு எதிரான டி ஷர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் தமிழ்த் திரையுலகினர்.
சனிக்கிழமையன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் மெட்ரோ படத்தில் நடித்த ஷிரிஷ் சரவணனும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன. ஐ ஆம் ஏ தமிழ் பேசும் இந்தியன் (I am a தமிழ் பேசும் Indian), ஹிந்தி தெரியாது போடா (Hindi theriyathu Podaa) என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட டி ஷர்ட்களை இருவரும் அணிந்திருந்தார்கள்.
இதையடுத்து இதே வாசகங்கள் கொண்ட டி ஷர்ட்களை நடிகர் ஷாந்தனுவும் அவருடைய மனைவியும் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளருமான கிக்கி விஜய்யும் அணிந்து அதன் புகைப்படங்களை வெளியிட்டார்கள்.
பிறகு, ஹிந்தி தெரியாது போடா டி ஷர்ட்டை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படம் வெளியானது.
நடிகர் உதயநிதி ஸ்டாலினும் ஹிந்தி தெரியாது போடா டி ஷர்ட்டை அணிந்துகொண்டு, அதன் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார்.
இதன்மூலம் ஹிந்தி தெரியாது போடா என்கிற ஹேஷ்டேக் சமூகவலைத்தளங்களில் பிரபலமாகி, இதுகுறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.