கமல் ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி என்கிற படத்தை இயக்கி அதை சூப்பர் ஹிட்டாக்கியதால் அவருக்குத் தமிழ்த் திரையுலகில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி அதிலும் வெற்றியைப் பெற்றார்.
அடுத்ததாக, கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் கமலின் 232-வது படத்தை எழுதி இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இசை - அனிருத். கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிக்கிறார்.
இதற்கு முன்பு, லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். விக்ரம் படத்தின் தலைப்பு டீசரின் ஒளிப்பதிவை அவர் தான் மேற்கொண்டார். எனினும் சத்யனின் தேதிகள் கிடைக்காததால் வேறு ஒளிப்பதிவாளரைத் தேடினார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளராக கேரளத்தைச் சேர்ந்த கிரிஷ் கங்காதரன் தேர்வாகியுள்ளார். இதனை ட்விட்டரில் அறிவித்த லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தில் நடிப்பவர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
விஜய் நடித்த சர்கார் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கிரிஷ் கங்காதரன், ஜல்லிக்கட்டு என்கிற மலையாளப் படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.