சென்னை: ‘பழைய காதலியைப் பார்க்க செல்வதைப் போல இருந்தது’ என்று நெடுநாட்களுக்குப் பிறகு தி,நகர் சென்று வந்த அனுபவம் குறித்து இயக்குநர் வசந்தபாலன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘அங்காடித் தெரு’. சென்னை, தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் வேலை செய்பவர்களின் அவல வாழ்வு நிலை குறித்து பதிவு செய்த இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ‘பழைய காதலியைப் பார்க்க செல்வதைப் போல இருந்தது’ என்று நெடுநாட்களுக்குப் பிறகு தி,நகர் சென்று வந்த அனுபவம் குறித்து இயக்குநர் வசந்தபாலன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
புதிய திரைப்படத்தின் ஆடை அலங்காரப்பொருட்கள் வாங்குவதற்காக வேறு வழியின்றி 13 வருடங்களுக்கு பிறகு பழைய காதலியைப் பார்க்க செல்வதைப் போல இன்று ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்தேன். அரை மணி நேரத்தில் சுடிதார் தைத்து தருகிறோம் என்கிற பெண்களின் குரல் என்னை வரவேற்றது.
வீட்டுக்குள் வானம் என்று விற்பனை செய்கிற ராஜாவையும், சமோசா விற்கும் பெரியவரையும், கர்ச்சீப் விற்கும் அப்துலையும் கண்டேன். மனம் அங்காடித்தெரு சூட்டிங் நாட்களை புரட்டிப் பார்த்தது. இன்று ரங்கநாதன் தெருவில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இளநீர் குடிக்க நான் முகக்கவசத்தை கழட்டும் போது ஓரிருவர் கண்டு கொண்டு, ஜெயில் வெளியீடு பற்றி விசாரித்தார்கள்.
ஒரு ஜவுளிக்கடையில் கதாநாயகிக்கு சுடிதார் வாங்க நின்றபோது மானேஜர் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண்களை சகட்டுமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தார். வசவு சொற்களைக் கேட்க சகிக்காமல் தெருவை விட்டு வெளியே வந்தேன். கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா என்ற அங்காடித்தெரு பாடல் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.