பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை இந்த வருடம் திருமணம் செய்யவுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
2011 டிசம்பரில் நடிகர் கே. நட்ராஜின் மகளான ரஜினியைக் காதலித்துத் திருமணம் செய்தார் நடிகர் விஷ்ணு விஷால். 2017-ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 2018 நவம்பரில் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். ஜுவாலா குட்டா, பாட்மிண்டன் வீரர் சேதன் ஆனந்தைத் திருமணம் செய்து, 2011-ல் விவாகரத்து செய்தார்.
விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள். கடந்த வருடம் செப்டம்பர் 7 அன்று இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் நிச்சயமானதை உறுதி செய்தார்கள். இந்நிலையில் இந்த வருடம் ஜுவாலாவைத் திருமணம் செய்யவுள்ளதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விஷ்ணு விஷால் கூறியதாவது:
இந்த வருடம் ஜுவாலா குட்டாவைத் திருமணம் செய்யப்போகிறேன். திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகின்றன. நான் திரையில் வந்து 826 நாள்கள் ஆகிவிட்டன. நீண்ட நாள் கழித்து படம் வெளிவரப் போகிறது. இருந்தும் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வந்தேன். என்னுடைய வெற்றிக்கு முக்கியக் காரணம் ஊடகங்கள். எனக்கு விவாகரத்து ஆனபோது கூட யாரும் என்னைப் பற்றி தவறாக எழுதவில்லை.
எனக்கும் ஜுவாலா குட்டாவுக்கும் பரஸ்பரம் மரியாதை இருந்தது. நிறைய பேர் இது காதல் என நினைக்கிறார்கள். எனக்குக் காதலில் நம்பிக்கை போய்விட்டது. ஒருமுறை காதலித்துப் பார்த்துவிட்டேன். 4 வருடம் காதல், 7 வருடம் திருமண வாழ்க்கை. இதற்கு மேல் காதலைத் தேடி நான் போகவில்லை. என்னுடைய கடினமான காலகட்டத்தில் ஜுவாலா குட்டா துணையாக இருந்தார். நேர்மறை எண்ணங்கள் கொண்டவர். அப்படியே பேசுவார். அதுதான் எனக்கு அவரிடம் பிடித்தது. அவருடைய அகாதமி பணிகளில் துணையாக இருக்க விரும்புகிறேன் என்றார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள காடன் படம் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.