செய்திகள்

''என் தம்பி சிலம்பரசன்...'': 'மாநாடு' படத்தை விமர்சித்த சீமான்

மாநாடு படம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

DIN

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள மாநாடு திரைப்படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், ''அன்புத் தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச் செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்தி செல்கிறது. 

மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவைமிக்க கலைப் படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருந்திருக்கிறார் தம்பி வெங்கட் பிரபு. இஸ்லாமிய மக்கள் குறித்து பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிற போக்கில் பேசி, அவர்கள் குறித்து பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறான பிம்பத்தை தகர்த்தெறியும் விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப்பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும். சொல்ல வந்த செய்தியை மகிச் சரியாக காட்சிப்படுத்தி, அதனைத் திரைமொழியில் மக்களுக்கு விருந்தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள தம்பி வெங்கட் பிரபுவின் கலைத்திறன் இத்திரைப்படத்தின் மூலம் மென்மேலும் மெரூகேறியிருக்கிறது. 

எனது தம்பி சிலம்பரசன் தனது துடிப்பான நடிப்பாற்றலாலும், மக்களின் மனம் கவரும் வகையிலான தனித்துவமிக்க திரைமொழி ஆளுகையினாலும், நுட்பமான உடல் மொழியாலும், உயிரோட்டமான வசன உச்சரிப்புகளாலும் மீண்டுமொரு முறை முத்திரை பதித்திருக்கிறார். கலையுலகப் பயணத்தில் அவரது வளர்ச்சி குறித்து பெரும் அக்கறை கொள்கிறேன். அவரது உயரத்தை எண்ணி மனமகிழ்வடைகிறேன். 

அன்புச் சகோதரர் எஸ்.ஜே.சூர்யா எதிர்மறை கதாப்பாத்திரத்தைத் தாங்கியிருந்தாலும், தனக்கே உரித்தான மொழி நடையாலும், எவரையும் சுண்டியிழுக்கும் வகையிலான அளப்பெரும் நடிப்புத் திறனாலும் படத்தையே தாங்கி நிற்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் யாவற்றையும் பெரிதும் விரும்பி ரசித்தேன். தம்பி யுவன் ஷங்கர் ராஜாவின் பலமிக்க பின்னணி இசையும், தம்பி கே.எல்.பிரவீனின் நேர்த்தியான படத்தொகுப்பும் படைப்புக்குப் பெரிதும் துணை நிற்கின்றன. 

காலத்திற்கேற்ற அரசியலைப் பேசும் சாலச்சிறந்த படைப்பாகவும், மாறுப்பட்ட திரைக்கதை அமைப்புகொண்ட நல்லதொரு திரைப்படமாகவும் வெளிவந்திருக்கும் இதனை தயாரித்து பெரும் சிரமங்களையும் இடையூறுகளையும் எதிர்கொண்ட போதும் சற்றும் தளராது நின்று வென்று காட்சி, வெற்றிப் படைப்பாக நிலைநாட்டிய ஆருயிர் இளவல் எனது பாசத்துக்குரிய தம்பி சுரேஷ் காமாட்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையான இன்னும் பல படைப்புகளைத் தந்து, அவர் மென்மேலும் வளர்த்து உச்சம் தொட வேண்டுமென என வாழ்த்துகளையும்  அன்பையும் தெரிவிக்கிறேன். 

எனது தம்பிகள் தங்களது அயராத உழைப்பின் மூலம் ஈட்டிய அளப்பெரும் வெற்றியைக் கண்டு உள்ளம் பூரிப்பு அடைகிறேன். நானே வெற்றி பெற்றதாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். இப்படைப்புக்காக உழைத்திட்ட அத்தனை பேருக்கும் எனது வெற்றி வாழ்த்துகளையும், உளப்பூர்வமான பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT