படம் - www.facebook.com/rajkiran.raj.370 
செய்திகள்

என் வளர்ப்புப் பெண்ணின் கணவனாகலாம், எனக்கு மருமகனாக முடியாது: ராஜ்கிரண்

இன்றிலிருந்து, இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

DIN

தனது வளர்ப்பு மகள் திருமணம் குறித்த செய்திகளுக்கு அளித்துள்ளார் பிரபல நடிகர் ராஜ்கிரண்.

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியாவை நடிகர் சண்முகராஜாவின் தம்பியும் நடிகருமான முனீஸ்  ராஜா பதிவுத் திருமணம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாதஸ்வரம், முள்ளும் மலரும் தொடர்களில் நடித்துள்ளார் முனீஸ் ராஜா. சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது வளர்ப்பு மகளின் திருமணம் குறித்த தகவல்களுக்கு நடிகர் ராஜ்கிரண் விளக்கம் அளித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் கூறியதாவது:

என் மகளை ஒரு தொலைக்காட்சி தொடர் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும் உண்மையை விளக்க வேண்டியது என் கடமை. எனக்கு திப்பு சுல்தான் நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத் தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை ''வளர்ப்பு மகள்'' என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன். முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட தொலைக்காட்சி நடிகர், என்னென்ன முறையிலோ அந்தப் பெண்ணை தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்த விஷயம் என் காதுக்கு வந்ததும், அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், எனக்கு இருக்கும் நல்ல பெயரைப் பயன்படுத்தி, திரைப்படத் துறையில் வாய்ப்புகளைப் பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள். இதையெல்லாம் பலவிதமாக
விசாரித்து தெரிந்து கொண்ட நான், என் வளர்ப்புப் பெண்ணிடம் சொன்னேன். அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை. அவரைத்தான் கட்டிக்கொள்வேன் என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டோம் என்றும் அந்தப்பெண் சொல்லியிருந்தார். 

அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி, அந்தப் பெண்ணிடம் அழுது மன்றாடி, மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, ''சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்'' என்று சொல்ல, நாங்களும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தோம். 

இந்தச் சூழ்நிலையில்தான், என் மனைவியின் தோழியான லட்சுமி பார்வதியைப் பார்த்துவிட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு, இந்தப் பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன, இன்னும் எங்கள் வீட்டுக்குத் திரும்பவில்லை. இந்த நிலையில்தான், இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. 

இந்த விஷயத்தில் நான் கோபப்பட்டபோது கூட, என்னைச் சமாதானப்படுத்தி, அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து பேசி இன்று வரை அந்தப் பெண்ணுக்கு
உறுதுணையாக நிற்பது என் மனைவி மட்டும் தான். 

என் வளர்ப்புப் பெண், ஒரு தரமான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாகக் கட்டிக்கொடுத்திருப்பேன். ஆனால், தன் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம். 

இதன் மூலம் நான் எல்லோரிடமும் சொல்லிக்கொள்வது, என்னவென்றால், என் பெயரைப் பயன்படுத்தி இவர்கள் உங்களை எந்த வகையிலாவது அணுகினால், அதனால் ஏற்படும் எந்தப் பிரச்னைக்கும் நான் பொறுப்பல்ல என்பது தான்.

இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காகப் பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தத் தொலைக்காட்சி நடிகர், என் வளர்ப்புப் பெண்ணிற்குக் கணவனாகிக் கொள்ளக்கூடும். ஆனால், எந்தக் காலத்திலும் எனக்கு மருமகனாக முடியாது. 

இன்றிலிருந்து, இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நேர்மையும், சத்தியமுமே என்றும் வெல்லும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT