செய்திகள்

வடிவேலு பிறந்த நாள்: தமிழர்கள் உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் கைப்புள்ள!

ச. ந. கண்ணன்

சிவாஜி கணேசனுக்குப் பிறகு வடிவேலு தான் அசலான நடிகர் என நினைக்கிறேன்.

- இயக்குநர் வெற்றிமாறன்.

தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருப்பவர் வடிவேலு. அவர் திரையில் பேசிய பல வசனங்களை இன்று இயல்பாக நம் பேச்சில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் பெருமை வேறெந்த நகைச்சுவை கலைஞனுக்கும் கிடைத்ததில்லை. இன்று வடிவேலுவின் பிறந்த நாள்.

தமிழில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்கள் பலர் இருந்துள்ளார்கள். ஆனால் சிவாஜியின் நடிப்புத்திறமையுடன் ஒப்பிடும் அளவுக்குப் பெயர் பெற்றவர் வடிவேலு. 

தடை, தடங்கல்கள் எல்லாம் முடிந்து மீண்டும் நடிக்க வந்துவிட்டார் வடிவேலு. லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் நாய் சேகர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் ஆறு படங்களில் மட்டுமே நடித்துள்ளார் வடிவேலு. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக அவர் நடித்து ஒரு படமும் வெளிவரவில்லை. (கடைசியாக மெர்சல் வெளிவந்தது.) ஆனாலும் ரசிகர்கள் அவரை மறப்பதாக இல்லை.

ஆச்சர்யமான அறிமுகம்

வடிவேலுவின் அறிமுகமே ஒரு சினிமாவுக்கு நிகரானது.

சினிமாவில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த ராஜ்கிரண், கதாநாயகனாக அறிமுகமான படம் - என் ராசாவின் மனசிலே. 

இந்தப் படத்தின் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்க கவுண்டமணி, செந்திலை ஒப்பந்தம் செய்திருந்தார்.

அடுத்த நாள் முதல், கவுண்டமணி நடிக்க வரவேண்டும். ஆனால் அன்றிரவு புரொடக்சன் மேனஜேரிடமிருந்து ராஜ்கிரணுக்குத் தகவல் வருகிறது. சம்பளம் தொடர்பாக கவுண்டமணி பிரச்னை செய்கிறார், படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார். 

ஒரு படைப்பாளியாக வித்யாகர்வம் வருகிறது ராஜ்கிரணுக்கு. நாமே ஒரு நகைச்சுவை நடிகனை உருவாக்குவோம் என்று வடிவேலுவை அழைக்கிறார். 

வடிவேலுவை ராஜ்கிரணுக்கு எப்படித் தெரியும்?

அது ஒரு தனிக்கதை.

ராஜ்கிரணுக்கு ஒரு ரசிகர் இருக்கிறார். எப்போதும் கடிதம் எழுதுவார். தன் திருமணம் ராஜ்கிரண் தலைமையில் தான் நடக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார். ரசிகரின் பெற்றோரும் ராஜ்கிரணிடம் கேட்டுக்கொண்டதால் அத்திருமணத்துக்காக மதுரைக்குச் செல்கிறார் ராஜ்கிரண். திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். காலையில் திருமணம் முடிந்தது. இரவில் தான் ரயில். அதுவரை என்ன செய்வது?

என் நண்பன் ஒருவன் இருக்கிறான், அவனிடம் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது என்று வடிவேலுவை ராஜ்கிரணுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார் ரசிகர். அதேபோல ராஜ்கிரண் வடிவேலை அழைத்துக்கொண்டு தான் தங்கியிருந்த விடுதிக்குச் செல்கிறார். பல மணி நேரம் தன் நகைச்சுவைப் பேச்சால் ராஜ்கிரணை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் வடிவேலு. நேரம் நன்கு கழிந்தது. இரவில் விடைபெற்றுக்கொண்டு சென்னைக்குத் திரும்புகிறார் ராஜ்கிரண்.

அந்த வடிவேலுவின் நகைச்சுவை திறமை இக்கட்டான நேரத்தில் ராஜ்கிரணுக்கு ஞாபகத்துக்கு வருகிறது. உடனே வடிவேலை அழைத்துவந்து நடிக்க வைக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் இருப்பதோ ஓர் இரவு தான். ரசிகர், வடிவேலு என இருவரின் போன் நம்பர்களும் இல்லை.

உடனே ஞாபகம் வருகிறது. ரசிகர்கள் எழுதிய கடிதங்களை அடங்கிய சாக்குமூட்டையை அள்ளி கீழே கொட்டச் சொல்கிறார். மதுரை ரசிகரின் கடிதத்தில் மட்டும் முகவரி சீல் அடித்து இருக்கும். இதனால் அந்த சீல் அடித்த கடித்தத்தைத் தேடி எடுக்கிறார் ராஜ்கிரண். அதில் போன் நம்பர் இருக்கிறது. உடனடியாக மதுரைக்கு போன் செய்து, அடுத்த நாள் காலை சென்னைக்கு வடிவேலு வந்துவிட வேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கிறார் ராஜ்கிரண்.

வடிவேலுவும் அடித்துப்பிடித்துக்கொண்டு சரியான நேரத்தில் சென்னைக்கு வந்துவிடுகிறார்.

இங்குதான் இன்னொரு திருப்புமுனை.

ஹாய் என்று அடுத்த நாள் காலையில் வழக்கமான நேரத்துக்குப் படப்பிடிக்கு வந்துவிடுகிறார் கவுண்டமணி!

ராஜ்கிரணுக்கு பக்கென்று ஆகிவிடுகிறது. வாங்கண்ணே என்று வரவேற்று தனியாக அழைத்துப் பேசுகிறார். 

அண்ணே, நீங்க வரமாட்டீங்கனு சொன்னீங்களாம், சம்பளத்துல உடன்பாடு இல்லையாமே எனக் கேட்கிறார்.

எவன் சொன்னான், நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்கிறார் கவுண்டமணி.

கவுண்டமணி, வடிவேலு என இருவருமே படப்பிடிப்பில் இருக்கிறார்கள். என்ன செய்வது? புரொடக்‌சன் மேனேஜர் கவுண்டமணியைப் பற்றி எதற்காக அப்படியொரு தவறான தகவலைச் சொன்னார் என்று இன்றுவரை ராஜ்கிரணுக்குத் தெரியாது. ஆனால் அவர் அப்படி அளித்த தகவல் தான் வடிவேலுவுக்கு ஒரு வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது.

கவுண்டமணியை வழக்கம்போல அவருடைய வேடத்துக்கு நடிக்கச் சொல்லிவிட்டு, சிறிய வேடமொன்றில் நடிக்க வடிவேலுக்கு வாய்ப்பு தருகிறார் ராஜ்கிரண். கிளி ஜோசியக்காரர் வடிவேலுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் காட்சி. அதுதான் வடிவேலு நடித்த முதல் காட்சி. காக்கை போல தலையை அங்கும் இங்கும் ஆட்டி ஆட்டி வடிவேலு நடித்ததை மிகவும் ரசித்திருக்கிறார் ராஜ்கிரண். அடுத்து கவுண்டமணியுடன் இணைந்து நடித்த காட்சியில், வடிவேலுவைப் புரட்டி அடிக்கிறார் கவுண்டமணி. அண்ணே, படாத எடத்துல படப்போவுதுண்ணே எனச் சொந்தமாக வசனம் பேசுகிறார் வடிவேலு. இதையும் ரசித்த ராஜ்கிரண் ஒரு முடிவு எடுக்கிறார். 

காட்சிகள் எல்லாம் எடுத்து முடித்த பிறகு ஊருக்குக் கிளம்பத் தயாராகிவிட்டார் வடிவேலு. ஊருக்குப் போய் என்ன செய்யப் போறே என்று கேட்கிறார் ராஜ்கிரண். ஊரில் புகைப்படங்களுக்கு ஃபிரேம் போடும் கடையில் தொடர்ந்து வேலை பார்க்கவுள்ளதாகக் கூறியுள்ளார் வடிவேலு. அதெல்லாம் வேண்டாம், இனிமேல் என் அலுவலகத்திலேயே தங்கிக் கொள். இங்கேயே இரு என்கிறார் ராஜ்கிரண்.

வடிவேலு என்கிற கலைஞனுக்குத் திரைத்துறை தனது வாசலைத் திறந்த தருணம் இது. 

1991-ல் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரண் உள்பட பல அறிமுகங்கள். டைட்டில் கார்டில், அறிமுகம் - மதுரை வடிவேலு எனப் பெயர் வருகிறது. அதற்கு முன்பு, 1988-ல் வெளியான என் தங்கை கல்யாணி படத்தில் ஒரு காட்சியில் தோன்றியிருக்கிறார் வடிவேலு. படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வடிவேலுவை அழைத்து சிறிய காட்சி ஒன்றில் நடிக்கவைத்திருக்கிறார் டி.ஆர்.

1992-ல் சிங்காரவேலன், தேவர் மகன் படங்கள் வடிவேலுவின் முகத்தை மெல்ல மெல்ல ரசிகர்களின் மனத்தில் பதியவைக்கின்றன. தொடர்ந்து பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்த வடிவேலுவுக்கு ஷங்கர் இயக்கிய காதலன் படம் பெரிய திருப்புமுனையாக அமைகிறது. அதற்கு முன்னால் அப்படியொரு பிரமாண்டமான படத்தில் பல காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு வடிவேலுக்குக் கிடைத்ததில்லை. பேட்ட ராப் பாடலில் முழுக்க வருவார். இதனால் இந்த ஒரு படம் வடிவேலுவை நட்சத்திர நகைச்சுவை நடிகராக மாற்றியது.

வடிவேலு வாழ்க்கையில் மகத்தான படங்கள் என மூன்றைச் சொல்லலாம்.

வெற்றிக்கொடி கட்டு, வின்னர், இம்சை அரசன் 23-ம் புலிகேசி

2000-ம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிக்கொடி கட்டு படத்தின்போது தமிழ் ரசிகர்களிடம் நன்கு அறிமுகமாகியிருந்தார் வடிவேலு. படங்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியிருந்த நேரம். இப்படத்தில் துபாய் ரிடர்னாக வடிவேலு நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடிய அளவுக்கு இப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் அபாரமாக அமைந்தன. வடிவேலுவும் பார்த்திபனும் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசி மகத்தான நகைச்சுவை விருந்து படைத்தார்கள். துபாய் குறுக்குச் சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய் என்கிற முகவரியை யாரால் மறக்க முடியும்?

நகைச்சுவை நடிகரால் ஒரு படத்தை வெற்றி பெற வைக்க முடியும், காலம் முழுக்கப் பேசவைக்க முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணம் - வின்னர். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவராக இப்படத்தில் அதகளம் செய்திருந்தார் வடிவேலு. 

வின்னர் படத்துக்காக வடிவேலுவை நடிக்க அழைக்க சுந்தர்.சி சென்றபோது அவருக்குக் கால் உடைந்து கட்டுப் போடப்பட்டிருந்தது. நடக்க முடியாத நிலைமையில் இருக்கும்போது நடிக்க அழைக்கிறீர்களே என்று கேட்டுள்ளார் வடிவேலு. அதனால் என்ன, முதல் காட்சியிலேயே உங்களுக்குக் கால் உடைவது போன்ற ஒரு காட்சியை வைத்துவிடுவோம். அதன்பிறகு நொண்டி நொண்டி நீங்கள் நடந்தால் தவறாகத் தெரியாது என்று யோசனை கூறி அப்படியே செய்திருக்கிறார் சுந்தர்.சி

இந்தப் படத்தில் வடிவேலும் பேசும் அத்தனை வசனங்களும் ரசிகர்களுக்கு அத்துப்படி.

வலிக்குது, வேணா நான் அழுதுருவேன்...

வலிக்காத மாதிரியே எவ்வளவு நாளைக்கு தான் நடிக்கிறது...

அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இத்தனை காயம்னா... அடிவாங்கினவன் உயிரோட இருப்பானு நினைக்கிறியா?

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கிட்டானுங்க!

இந்த ஊரு இன்னுமா நம்பள நம்பிட்டு இருக்கு...!

இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குது....


என அத்தனை வசனங்களையும் மனப்பாடம் செய்து, அவ்வப்போது அதைப் பயன்படுத்தி, கைப்புள்ளையைக் கொண்டாடி வருகிறார்கள் தமிழ் ரசிகர்கள்.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இமான் அண்ணாச்சி இவ்வாறு கூறினார் - வின்னர் போன்ற ஒரு படத்தில் நடித்துவிடவேண்டும் என்பது என் லட்சியம். அதைப் போன்று நகைச்சுவைக் காட்சியால் தான் படம் வெற்றி பெற்றது என்கிற பெயர் வாங்கவேண்டும் என்றார்.

2006-ல் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் முதல்முறையாகக் கதாநாயகனாக நடித்திருந்தார் வடிவேலு. அவருடைய முழு நடிப்புத்திறமையையும் வெளிப்படுத்திய படம் என்று சொல்லலாம். வடிவேலுவை சிறந்த நடிகர்களுக்கு இணையாகப் பேசவைத்த படம் இதுதான். படத்தின் வெற்றியும் வடிவேலுக்குக் கிடைத்த பாராட்டுகளும் அவரை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியது.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்துக்குப் பிறகுதான் வடிவேலு அதற்கு முன்பு நடித்த படங்களில் வெளிப்படுத்திய நடிப்பும் வெளிச்சத்துக்கு வந்தது. வடிவேலுக்கு இப்படியொரு படம் இனிமேல் அமையுமா என்பது சந்தேகம் தான். 

தேர்தல் பிரசாரத்தில் வடிவேலு


2011-க்குப் பிறகு மிகக்குறைவான படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் வடிவேலுவின் புகழ் இன்னும் குறையவில்லை. சமுகவலைத்தளங்களில் வடிவேலு இல்லாமல் மீம்ஸ் இல்லை என்றாகிவிட்டது. எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அதற்குப் பொருத்தமான வடிவேலு நடித்த காட்சி ஒன்று இருந்துவிடுகிறது. இதனால் படங்களில் பார்க்க முடியாமல் போனாலும் தினமும் மீம்ஸ் வழியாக வடிவேலுவைத் தினமும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் ரசிகர்கள். இனிமேல் இந்தக் குறையில்லை. திரையிலேயே விரைவில் வடிவேலுவைக் கண்டு ரசிக்கலாம். எனக்கு எண்டே கிடையாது என்று தான் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பிலும் கூறியிருக்கிறார் வடிவேலு. அது நிஜம் தான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக வேட்பாளா் ஆ.ராசாவை ஆதரித்து பல்சமய நல்லுறவு இயக்கம் பிரசாரம்

வாக்கு எண்ணும் மையத்தில் 285 சிசிடிவி கேமராக்கள்: 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு

ஐஏஎஸ் தோ்வு: திருப்பூரைச் சோ்ந்த இளம்பெண் தோ்ச்சி

காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் பறக்கும் படையினா் தீவிர வாகனத் தணிக்கை

மக்களவைத் தோ்தல்: ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT