வாடிவாசலை நம்பும் சூர்யா - கார்த்தி!
நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் காளையை வைத்து உருவாகும் படத்தில் நடிக்கின்றனர்.
இந்தியளவில் வெற்றிப்பெற்ற சகோதர நடிகர்கள் சூர்யா - கார்த்தி. திரைத்துறைக்கு வந்த இருவருமே இன்று வரை வணிக வெற்றியாளர்களாக இருக்கின்றனர்.
நடிகர் சூர்யா இந்தியளவில் அறியப்படும் நடிகர். கார்த்திக்கு அந்த இடம் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்திருப்பவர்.
தற்போது, சூர்யா கங்குவா படத்தில் நடித்து முடித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் கார்த்தி மெய்யழகன், வா வாத்தியார் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில், மெய்யழகன் படத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில், கார்த்தி காளை ஒன்றை வளர்த்து வருகிறார். இதனால், இப்படத்தில் வாடிவாசலில் காளையை அடக்கும் காட்சி இருக்கலாம் என்றே தெரிகிறது.
அதேபோல், நடிகர் சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்காக, சூர்யாவும் ஓய்வு நேரங்களில் காளை அடக்கும் பயிற்சியில் இருப்பதாகத் தகவல்.
அண்ணன், தம்பி இருவருக்கும் காளைகளை அடக்கும் காட்சிகள் இருப்பதால் இந்த ஒற்றுமை ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.