நடிகர் கமல்ஹாசன் குறித்து சிவராஜ்குமார் உருக்கமாக பேசியுள்ளார்.
கன்னட திரையுலகின் நட்சத்திர நடிகரான சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடமும் பெரிதாகப் பிரபலமானார். பின், நேரடி தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதற்கிடையே, அவர் நடித்த கோஸ்ட், பைரதி ரணகல் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தொடர்ந்து, தன் சிறுநீர் பையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் அதற்காக சிகிச்சை எடுக்க அமெரிக்கா செல்ல உள்ளதையும் சிவராஜ்குமார் தெரிவித்தார்.
இது ரசிகர்களிடம் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பின், அங்கு சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பினார். தற்போது, தன் 131-வது படத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடித்து முடித்த ’45’ படத்தின் புரமோஷன் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய சிவராஜ்குமார், “நடிகர் கமல்ஹாசன் படங்களை முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடும் அளவிற்கு அவரின் மிகப்பெரிய ரசிகன் நான். ஒருமுறை என் வீட்டிற்கு கமல் வந்தபோது என் அப்பாவிடம் என்னை யார் எனக் கேட்டார். நான் அவரைப் பார்த்து உங்களை ஒருமுறை கட்டிப்பிடித்துக்கொள்ளவா எனக் கேட்டேன். அவர் கட்டியணைத்தார். அந்த மகிழ்ச்சியில் மூன்று நாள்கள் நான் குளிக்கவில்லை.
என்னைப் பொறுத்தவரை நடிகர் என்றால் அவர்தான். மிக அழகானவர். நான் பெண்ணாகப் பிறந்திருந்தால் கமல்ஹாசனைத்தான் திருமணம் செய்திருப்பேன். நான் புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது கமல்ஹாசன் அழைத்துப் பேசினார். அப்போது, பெரிய தைரியமாக இருந்தது. எனக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்ததும் கண்கலங்கியதாகத் தெரிவித்தார். அதைக் கேட்டதும் நானும் எமோஷனலாகிவிட்டேன்” எனக் கூறினார்
இதையும் படிக்கள்: நானும் சுந்தர்.சியும் 15 ஆண்டுகள் இணையாததற்கு இதுதான் காரணம்: வடிவேலு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.