2025 ஆம் ஆண்டில் வெளியாகி கவனம் ஈர்த்த சிறந்த மலையாளத் திரைப்படங்களின் பட்டியல்.
ஒவ்வொரு ஆண்டும் மலையாள சினிமாவிலிருந்து வெளியாகும் திரைப்படங்களின் தரம் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. மனித மன ஊசல்களைப் பதிவு செய்யும் படங்கள், சஸ்பென்ஸ், கிரைம், ஹாரர், ஃபேண்டசி என அனைத்து பிரிவுகளிலும் அசத்தி வருகின்றனர்.
2025-ல் மலையாளத்தில் இதுவரை 184 திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், 20 சதவீதத் திரைப்படங்களே லாபரகமான வணிகங்களைச் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், விமர்சனம் மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்ற சிறந்த திரைப்படங்களின் பட்டியல்.:
லோகா
நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்த இப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு மலையாளத்தின் முதல் ரூ. 300 கோடி திரைப்படமானது. யட்சி கதையை நவீன ஹாரர் திரில்லர் கதைபோல் எடுத்திருந்தனர்.
இயக்குநர் டோமினிக் அருண் இயக்கிய இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிகர்கள் மம்மூட்டி, துல்கர், டொவினோ தாமஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
ஓடிடி - ஹாட்ஸ்டார்
ஹிருதயப்பூர்வம்
நடிகர் மோகன்லாலுக்கு சிறப்பான ஆண்டாகவே 2025 அமைந்திருந்தது. எம்புரான், துடரும், ஹ்ருதயப்பூர்வம் என அடுத்தடுத்த தொடர் வெற்றிப்படங்கள் அமைந்தன. இதில், சத்யன் அந்திகாட் இயக்கத்தில் வெளியான ஹிருதயப்பூர்வம் ஃபீல் குட் படமாக அமைந்ததுடன் நெகிழ்ச்சியான காட்சிகளால் ரசிகர்களைக் கவர்ந்தது.
இதயம் மாற்று சிகிச்சையால் உயிர்பெற்ற மோகன்லாலின் குணங்கள், உணர்வுகள் சூழல்களால் எப்படியெல்லாம் மாறுகின்றன என்பது ஈர்க்க வைத்தது. ரூ. 100 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்தது.
ஓடிடி - ஹாட்ஸ்டார்
ரேகா சித்திரம்
நடிகர் ஆசிஃப் அலி, அனஸ்வரா ராஜன் ஆகியோரது நடிப்பில் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமான ரேகா சித்திரம் பலரையும் கவர்ந்தது. காரணம், சஸ்பென்ஸ் திரில்லராகவும் உணர்வுப்பூர்வமாகவும் எடுக்கப்பட்ட இப்படத்தில் அனஸ்வரா கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
மம்மூட்டியின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரேகா என்கிற இளம்பெண் சந்தேக மரணத்திலிருந்து ஆரம்பமாகும் கதை, இறுதியில் நிறைவடையும் வரை பரபரப்பான திரைக்கதையை வைத்து வெற்றியைப் பெற்றது. இளவயது மம்மூட்டிக்கான ஏஐ காட்சிகள் அபாரமான இருந்தது கதையின் நம்பகத்தன்மைக்கு பெரிதும் உதவியது. இதனை ஜோபின் டி. சாக்கோ இயக்கியிருந்தார்.
ஓடிடி - சோனி லைவ்
பொன்மேன்
அறிமுக இயக்குநர் ஜோதிஸ் சங்கர் இயக்கத்தில் நடிகர் ஃபாசில் ஜோசஃப் நடித்த இப்படம் மலையாளத்தின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்கிற அளவிற்கு அழுத்தமான கதையம்சத்துடன் வந்ததுடன் தங்கம் மனித வாழ்வில் எந்த அளவுக்கு குரூர பூதமாக இருக்கிறது என்கிற எதார்த்தததையும் முன்வைத்த திரைப்படம்.
இதில், ஃபாசில் ஜோசஃபின் நடிப்பு பெரிதும் பாராட்டுகளைப் பெற்றதுடன் ஓடிடி வெளியீட்டில் இந்தியளவில் கவனிக்கப்பட்டது. ரூ. 3 கோடியில் தயாராகி ரூ. 18 கோடி வரை வசூலித்தது.
ஓடிடி - ஜியோ ஹாட்ஸ்டார்
எகோ
சஸ்பென்ஸ் / கிரைம் திரில்லர் சினிமாக்களை உருவாக்குவதில் மலையாளிகள் கில்லாடிகள் ஆகிவிட்டனர். இப்போதெல்லாம், சாதாரண பழிவாங்கல் கதைக்குப் பின் கிளைக்கதைகளைத் தேடிச் செல்வதில் மிகுந்து ஈடுபாடு காட்டுகின்றனர். அப்படி, இந்தாண்டில் பலரின் புருவங்களையும் உயர்த்திய திரைப்படம் எகோ.
நாய்களுக்கும் மனிதர்களுக்குமான கதையில் இறுதியில் நிகழும் திருப்பம் நல்ல திரையனுபவத்தை வழங்கியது. கிஷ்கிந்தா காண்டம் படத்தை இயக்கிய தின்ஷித் அய்யதன் இதனை இயக்கியிருந்தார். எழுத்தாளர் பாகுல் ரமேஷ் கதை, திரைக்கதை எழுதியதுடன் ஒளிப்பதிவும் செய்தார். இப்படம் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்து சிறப்பான வெற்றிப்படமாக அமைந்தது.
ஓடிடி - நெட்பிளிக்ஸ் (டிச. 31 வெளியீடு)
ஆழப்புழா ஜிம்கானா
இயக்குநர் கலித் ரஹ்மானின் தொடர் ஹிட் படங்களின் பட்டியலில் ஆழப்புழா ஜிம்கானாவும் இணைந்திருக்கிறது. ஊரில் ஜாலியாக இருக்கும் நண்பர்கள் குழு, வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் தேட வேண்டுமென குத்துச்சண்டை பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
முதிரா இளம் பருவத்திற்கு உண்டான சேட்டைகள், நகைச்சுவைகள், குத்துச்சண்டை என நல்ல திரையரங்க அனுபவமாக அமைந்த படம். வசூலிலும் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
ஓடிடி - சோனி லைவ்
ரோந்த்
காவல்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தரவான இயக்குநர் ஷாகி கபீரின் இரண்டாவது திரைப்படம். இரவில் ரோந்து செல்லும் ஒரு உயரதிகாரிக்கும் காவலருக்குமான உரையாடல்கள், இரவு குறித்த பார்வை, அதிகார வரம்புகள் மீதான கேள்விகள் என இரவு சாதாரணமானது அல்ல என சைரன் ஒலியுடன் பதைபதைப்பை ஏற்படுத்தும் காட்சிகளுடன் படம் உருவாக்கப்பட்டிருந்தது.
கிளைமேக்ஸில் காவல் அதிகார அமைப்பு நிஜ குற்றவாளிகளைவிட எவ்வளவு ஆபத்தாக செயல்படுகிறது என்பது சொல்லப்பட்டிருக்கும். நடிகர்கள் திலீஷ் போத்தன் மற்றும் ரோஷன் மாத்யூ நடிப்பும் கவனிக்க வைத்தன.
ஓடிடி - ஜியோ ஹாட்ஸ்டார்
அவிகிதம்
ஒரு நள்ளிரவில் திருமணமான பெண், பக்கத்துவீட்டு இளைஞருடன் ஒன்றாக இருப்பதை ஊரில் இருக்கும் சில ஆண்கள் பார்த்துவிடுகின்றனர். இப்போது, அப்பெண்ணையும் இளைஞனையும் கையும் களவுமாகப் பிடித்து ஒரு குடும்பப் புகையை ஊதித் தீயாக்க ஒரு கூட்டம் முயல்கிறது.
இறுதியில் ஒரு டிவிஸ்டுடன் கதை முடிந்தாலும் அழுத்தமான சில விஷயங்களை மிக நகைச்சுவையான பாணியில் இப்படம் பேசியது. சிறிய கிராமம், நடித்தார்களாக உண்மையில் வாழ்ந்தார்களா எனத் தெரியாத 20க்கும் குறைவான கதாபாத்திரங்கள், பாதி படம் முழுவதும் இரவிலேயே எடுத்த விதம் என சுவாரஸ்யமானத் திரைப்படமாகவே வந்து வெற்றியையும் பெற்றது. சென்னா ஹெக்டே இயக்கியிருந்தார்.
ஓடிடி - ஜியோ ஹாட்ஸ்டார்
சுமதி வளவு
விஷ்ணு சசி ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜுன் அசோகன், மாளவிகா மனோஜ் நடித்த சுமதி வளவு இந்தாண்டின் அதிக லாபமீட்டிய படமாகவே கருதப்படுகிறது. கொலைசெய்யப்பட்ட சுமதி என்கிற இளம்பெண் பேயாக பழிவாங்கும் கதையான இதில் நகைச்சுவையுடன் கூடிய அமானுஷ்ய காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
கதையின் போக்கிற்கு ஏற்ப பின்னணி இசைகளும் பிரமாதமாக இருந்ததால் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. நடிகர் அர்ஜுன் அசோகன் நடித்த ரோமாஞ்சம், பிரம்மயுகம், சுமதி வளவு ஆகிய மூன்று ஹாரர் திரைப்படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓடிடி - ஜீ5
நாராயணிண்டே மூணு ஆண்மக்கள்
தொலைதூரத்திலிருக்கும் சகோதரர்கள் மரணப்படுக்கையிலிருக்கும் தங்கள் தாயை நல்லவிதமாக வழியனுப்ப ஒன்றிணைகின்றனர். ஆரம்பத்தில் சகோதரர்களின் அன்பு பரிமாற்றங்கள் நடைபெற்றாலும் காட்சிகள் செல்லச் செல்ல சில அதிர்ச்சியான விஷயங்கள் தெரிய வர, சகோதரர்கள் என்ன ஆகிறார்கள் என்பதே கதை.
சிக்கலான உணர்வுகளைச் சமூக கண்ணோட்டத்தில் பேசியதால் இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக சிறந்த படம் என்கிற பெயரைப் பெற்றது. சரண் வேணுகோபால் இயக்கிய இப்படத்தில் ஜோஜூ ஜார்ஜ், சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஓடிடி - அமேசான் பிரைம்
இவை போக, இந்தாண்டு எம்புரான், துடரும், டீயஸ் ஈரே, களம் காவல் என பல வெற்றிப்படங்களும் இருக்கின்றன. சில கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களின் விருப்பமான படங்களின் பட்டியலில் இவை இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.