முகப்பு
செய்திகள்

காதல் கசப்பா? இனிப்பா? ஸ்வீட் ஹார்ட் - திரை விமர்சனம்!

ஸ்வீட் ஹார்ட் திரைப்பட விமர்சனம்...

Updated On : 14 மார்ச், 2025 at 2:26 PM
பகிர்:
Updated On : 14 மார்ச், 2025 at 1:39 PM

நடிகர் ரியோ ராஜ் நடித்த ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் காதல் இனிப்பாகவும் அதற்கு இணையாக சலிப்பாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த தலைமுறைக்கு காதல் என்றாலே, ’என்றென்றும் நம் அன்பு நிலைத்திருக்கும்’ என்கிற வலுவான எண்ணங்கள் அதிகமாகவே இருந்தன. ஆனால், இப்போது பெரும்பான்மையான காதல்களில் அப்படி ஒருவருக்கு ஒருவர் காலம் முழுக்க அன்பு செலுத்திக்கொண்டிருப்பது முடியாத காரியம் எனப் பேசி பிரிவை நோக்கிச் செல்ல முடிவெடுக்கின்றனர்.

ஸ்வீட் ஹார்ட் திரைப்படத்தில் நாயகன் அப்படித்தான் ஒரு முடிவை எடுக்கிறார். நாயகனான ரியோ ராஜுக்கு இளவயதிலேயே அவருடைய தாய், தன் தந்தையை, சகோதரியை, தன்னை விட்டுவிட்டு இன்னொருவருடன் சென்றுவிட்டார் என்கிற ஆதங்கம் உறுத்திக்கொண்டே இருக்கிறது. கடந்த காலம் இப்படியிருக்க, நாயகி எல்லாரும் உன் அம்மா மாதிரியே இருக்க மாட்டார்கள்; இறுதிவரை இணைந்து வாழும் தம்பதிகளும் இருக்கின்றனர் என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் காதலனை மாற்ற முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்.

Advertisement

ஆனால், நாயகனோ அப்படியெல்லாம் இருக்க முடியாது, ஒருவருக்கு ஒருவர் சலிப்பு வந்தே தீரும்; திருமணம், குடும்பம் என்பதே பெரிய சுமை என வசனங்களாகப் பேசி ஒருகட்டத்தில் காதலை முறிக்கிறார். நாயகி துரத்தித் துரத்தி நாயகனைத் தேடி வந்தாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார். இறுதியாக, இருவருமே பிரிந்துவிடலாம் என்கிற மனநிலைக்கு வரும்போது ‘ஒரு சம்பவம்’ நடக்கிறது. அது என்ன சம்பவம்? உண்மையிலேயே உறவுகள் கசப்பனதா இல்லை இனிப்பானதா? காதலும் திருமணமும் வேண்டாம் என ஓடும் நாயகன் மனம் திருந்தினாரா? என்பதே ஸ்வீட் ஹார்ட் கதை.

Updated On : 14 மார்ச், 2025 at 2:21 PM

சில குறைகளை நீக்கிப்பார்த்தால், தமிழ் சினிமாவிற்கு ஸ்வீட் ஹார்ட் நல்ல வரவாகவே இருக்கிறது. காரணம், இப்படம் உறவுகளைக் கைவிட்டு செல்பவர்களைத் தவறானவர்களாக சித்திரிக்காமல், சென்றவர்களுக்கு உறவுகளில் ஏற்பட்ட கசப்புகளையும் காட்டியுள்ளனர்.

குறிப்பாக, ஆரம்பக் காட்சிகளில் நாயகனின் அம்மா - அப்பா இருவருக்குமிடையே ஏற்படும் வாக்குவாதங்கள் காட்டப்படுகின்றன. அதற்குக் காரணம், நாயகனின் தந்தை தொடர்ந்து மது அருந்திக்கொண்டே இருப்பது. இப்படி, அனுதினமும் குடிகார கணவனின் அடிகளையும் பேச்சையும் சகித்துக்கொண்டு எத்தனை நாள் வாழ்வது? அந்தக் காட்சி நாயகனின் அம்மாவுக்கு ஆதரவாகவே எழுதப்பட்டுள்ளது. இதுபோல், படத்தின் இயக்குநர் ஸ்வீனித் எஸ். சுகுமார் பல இடங்களில் குடும்பங்களுக்குள் நிகழும் சண்டைகள் குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை மிக கவனமாக எழுதியிருக்கிறார். காதல் வெறும் காமத்திற்கான தேவை மட்டுமல்ல அது மிக உணர்வுப்பூர்வமாக மாறும் இடமும் உண்டு என்பதை கதாபாத்திர வளர்ச்சியில் கொண்டுவந்ததும் நன்றாக இருந்தது.

இன்றைய இளைஞர்களுக்காகவே கதை எழுதப்பட்டுள்ளதால், நவீன காதல்களில் ஏற்படும் குழப்பங்கள், சிக்கல்கள், பிரிவின் எடை உறவின் எடையைவிட அதிகம் என்பதை மறைமுகமாகப் பேசியது என ஒரு அறிமுக இயக்குநராக ஸ்வீனித் எஸ். சுகுமார் கவனம் ஈர்க்கிறார். மிக முக்கியமாக, நாயகனின் பிறந்த நாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாட நாயகி அழைத்து வரும் காட்சியில் நல்ல விஷயம் ஒன்று பேசப்பட்டிருக்கிறது. அதற்காகவே, இயக்குநருக்கு தனி பாராட்டுகள்.

தொகுப்பாளராக இருந்து நடிகராக வளர்ந்த ரியோ ராஜ், ஜோ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார். அப்படத்தைத் தொடர்ந்து ஸ்வீட் ஹார்ட் படமும் அவருக்கு வெற்றியைத் தரும் என்றே தெரிகிறது. ’என் அம்மா இன்னொருத்தன்கூட போனதுக்கு ஆயிரம் நியாயமான காரணம் இருக்கலாம். ஆனால், போனதுக்கு அப்பறம் ஒருமுறைகூட என்னை வந்து பாக்காததற்கு எந்தக் காரணமும் இருக்க முடியாது” என தன் கதாபாத்திரத்தின் குணங்களை இறுதிவரை கடத்தியது சிறப்பாக இருந்தது. ஆனால், இன்னும் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

Updated On : 14 மார்ச், 2025 at 2:21 PM

நாயகி கோபிகா ரமேஷுக்கு நிறைய காட்சிகள் வழங்கப்பட்டுள்ளன. காதல், பிரிவு, ஏக்கம் என காட்சிக்கு தேவையான முகபாவனைகளையும் உடல்மொழிகளையும் அருமையாக வெளிப்படுத்தி கதையின் பலமாக மாறுகிறார். அதேபோல், துணை நடிகர்களான ரெஞ்சி பணிக்கர், அருணாச்சலேஸ்வரன், ஃபௌசி உள்ளிட்டோரும் கதையின் போக்கிற்கு சுவாரஸ்யமான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்துத் துறைகளிலும் சரியான வேலையை வாங்கிய இயக்குநர் நான் லீனியர் கதை சொல்லல் முறையில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. முதல்பாதியில் திரைக்கதை கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் மாறிமாறி வருவதால் சில இடங்களில் தொடர்ச்சிகள் அறுபடுகின்றன.

இருப்பினும், ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலேயே அக்குறைகள் இருப்பதால் கதையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அழுத்தமான காதல் கதையுடன் உணர்வுப்பூர்வமான மற்றொரு விஷயமும் இணைந்ததால் நல்ல படம் என்கிற எண்ணத்தையே ஸ்வீட் ஹார்ட் தருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.