நடிகர் விஷாலுக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் ஆக. 29 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. யோகிடா பட விழாவில், நடிகை சாய் தன்ஷிகா இதனைத் தெரிவித்தார்.
யோகி டா பட விழாவில் விஷால் தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஷாலும் தானும் காதலித்து வருவதாகவும், பெற்றோர் சம்மதத்துடன் ஆக. 29-ல் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் கூறினார்.
நடிகர் சங்க தலைவரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டடத்தைக் கட்டி முடித்த பிறகே திருமணம் என அறிவித்திருந்தார்.
அவர் அறிவித்து 9 ஆண்டுகள் ஆன நிலையில், நடிகர் சங்க கட்டடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆக. 15ஆம் தேதி நடிகர் சங்கக் கட்டடம் திறக்கப்படவுள்ளது.
இதனால், விஷாலின் திருமணம் குறித்த பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலா வந்தன. இந்நிலையில், யோகிடா பட விழாவில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சாய் தன்ஷிகா.
விழா மேடையில் சாய் தன்ஷிகா பேசியதாவது,
''இந்த மேடை எங்கள் திருமண தேதியை அறிவிக்கும் மேடையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள் என்பதையே வெளியே சொல்லிக்கொள்ளலாம் என பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், காலையில் செய்தித்தாளில் எங்கள் திருமணம் குறித்த தகவல்களைப் படித்ததும், இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனத் தீர்மானம் செய்தோம். நாங்கள் இருவரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம்'' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த விஷால் முகத்தில் வெட்கம் நிறைந்திருந்தது.
மேலும் சாய் தன்ஷிகா பேசியதாவது, ''15 ஆண்டுகளாக விஷாலை எனக்குத் தெரியும். நாங்கள் சந்தித்துக்கொண்ட பொது இடங்களில் எப்போதுமே மரியாதையாகவே நடந்துகொண்டார். எனக்காக பல இடங்களில் குரல் கொடுத்துள்ளார். வேறு எந்தவொரு நாயகனும் எங்கள் வீட்டிற்கு வந்ததில்லை. பிரச்னையின்போது கூட, எங்கள் வீட்டிற்கு வந்து துணையாக உடன் நின்றார்.
இருவரும் சமீபகாலமாகத்தான் பேசிவருகிறோம். எங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் உணர்வை பரிமாறிக்கொண்டோம். பரஸ்பரமாக ஏற்றுக்கொண்டோம். இது கல்யாணத்தின் தொடக்கமாகதான் இருக்கப்போகிறது என்பதை தெரிந்துகொண்டோம். இனி ஏன் தாமதம்? ஒரே விஷயம்தான், எனக்கு அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஐ லவ் யூ'' எனக் குறிப்பிட்டார்.
பட விழாவில் பங்கேற்ற பலரும் புதுமணத் தம்பதியாகவுள்ள இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இணையத்திலும் இவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிக்க | சாய் தன்ஷிகாவைத்தான் திருமணம் செய்வேன்: விஷால்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.