திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு கவனம் பெற்ற மரியா திரைப்படம் கடந்த அக். 3 ஆம் தேதி தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியானது.
இளமையும் அழகும் கொண்ட கன்னியாஸ்திரியான மரியா தனக்குக் கிடைத்த விடுமுறையில், சென்னையிலுள்ள தன் தங்கை வீட்டிற்கு வருகிறார். அங்கு சில நாள்கள் இருந்துவிட்டுச் செல்லலாம் எனத் திட்டம். தங்கையோ தன் காதலனுடன் ஒரே அறையில் வசிக்கிறார். இருவருக்குமான காதல் கதையைச் சொல்லும் தங்கை, அக்காவான மரியாவிற்கு ஓரிடத்தைக் கொடுத்து உறங்கச் சொல்கிறார். நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் தங்கையின் அறையிலிருந்து நெருக்கமான சப்தங்கள் வருகின்றன. மரியா அதை ஆர்வத்துடனும் பதற்றத்துடனும் கேட்டு, தனக்குள் எழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயேசு முன் மண்டியிட்டு கண்ணீர் வழிய பிரார்த்தனை செய்கிறார்.
அடுத்த நாள் இரவும் அதேபோல் சப்தங்கள் கேட்க, தானும் யாருடனாவது உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என மரியாவுக்கு ஆவல் எழுகிறது. உணர்ச்சிகள் தடுமாறும் நேரத்தில், தங்கையின் காதலன் ஓரிரவில் குடிபோதையில் மரியாவின் அழகை வர்ணிக்க, இருவருக்குமான இடைவெளியை உடைத்து மரியாவே அவனைக் கட்டிப் பிடிக்கிறாள். இனி, தூய கன்னியாஸ்திரியான அவளின் வாழ்க்கை என்னென்ன வழிகளில் செல்கிறது என்பதே மரியா படத்தின் கதை.
அறிமுக இயக்குநர் ஹரி கே. சுதன், கிறிஸ்துவத்தின் அடிப்படைவாதத்தைக் கேள்வி கேட்கிறேன் என கன்னியாஸ்திரியின் உணர்வுகளைத் தொட்டு கிறிஸ்துவம் சுதந்திரத்தைப் பறிக்கும் மதம் என்கிற எண்ணத்தில் ஒரு கதையை எழுதியிருக்கிறார். இதில், பெண் சுதந்திரம், மதம் உண்மையில் பரிசுத்தத்தைத் தருகிறதா என்கிற கேள்விகள் என முரணான பார்வைகள், திருப்பங்கள் என மரியாவின் உலகை உருவாக்கியிருக்கிறார். ஒரு பக்கம் ஆணோ பெண்ணோ உணர்ச்சிகள் பொதுவானவைதானே? என்கிற உண்மைகளைக் காட்சிகள் வழியாகக் கடத்துகிறார்.
தனக்கு திருமணம், காமம், அழகான இல்லற வாழ்க்கை வேண்டும் என ஆசைப்படும் மரியாவிற்கு சமூகம் மற்றும் குடும்ப சூழல்கள் சுமையாக (சிலுவையாக) அமைவதை அவளுடைய தேர்வுகள் வழியே பதிவு செய்யப்படுகிறது. ஒழுக்கம், பிரார்த்தனை என வளர்ந்த கன்னியாஸ்திரிக்கு சாத்தானின் குரூரத்தில் உணர்ச்சிகள் பொங்கினால் அவர் என்னதான் செய்வார் என நினைக்கும்படியான ஆரம்பக் காட்சிகளில் வலு இருக்கின்றன.
இப்படத்தின் கதை, கன்னிமைக்கும் கருவுறுதலுக்குமான இடைப்பட்ட உணர்ச்சிகளைப் பேசுகிறது. இதில், மானுட கீழ்மைகள் பதிவாகின்றன. அவள் தெய்வநிலைக்குச் செல்லும் படிமம் நன்றாக இருந்தாலும் அதற்கு முந்தைய சாத்தான் குறித்த போதனைகள் விலக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சரி, ஏன் இந்தப் படத்தை எடுத்தார்கள் என்கிற கேள்விகளும் எழுகின்றன. காரணம், கன்னியாஸ்திரிகளுக்கு உணர்வுகள் இருக்கிறது என்பதை மரியா மூலமாகச் சொல்ல நினைக்கிறார்கள் என வைத்துக்கொண்டாலும் கன்னியாஸ்திரிகள் எல்லாரும் இப்படித்தான் இருப்பார்களோ? என்கிற பார்வையை ஏற்படுத்தும் அபாயமும் இந்தப் படத்தில் உண்டு.
இதன் பேசுபொருளும் வசனங்களும் பக்கச் சார்பாகவே எடுக்கப்பட்டிருப்பது சரியாகத் தோன்றவில்லை. கிறிஸ்துவத்தைக் கேள்வி கேட்கும் அல்லது கிறிஸ்துவத்திற்கு எதிரான விஷயங்களே பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கின்றன. இப்படம், பெண் சுதந்திரத்தைப் பேசுகிறது என்பது ஆங்காங்கே தெரிந்தாலும் வலுவாக மத நம்பிக்கைகளைக் காயப்படுத்தும் இடங்களையும் இயக்குநர் வைத்திருக்கிறார்.
மிக முக்கியமாக, வேட்கையில் மரியா அடைய நினைக்கும் ஆணின் பெயர் விஷ்ணு. அவன் அவளுக்கு வாழ்க்கையே கொடுக்கிறேன் என்கிறான். ஆனால், அவளோ அதெல்லாம் தேவையில்லை, உடல் சந்தோஷத்தை மட்டும் கொடு என்கிறாள். நீண்ட காலமாக ஒழுக்கத்தையும் இறைத்தன்மையையும் சுமந்த கன்னியாஸ்திரியால் ஓரிரு நாள்களிலேயே அதைத் தூக்கி வீச முடியுமா? இப்படி மரியா கதாபாத்திர வளர்ச்சியில் சில போலித்தனங்களும் இருக்கின்றன.
இயக்குநர் உலக சினிமா, இலக்கியங்களின் தாக்கம் கொண்டவராகத் தெரிகிறார். அதனாலேயே, ஒரு இலக்கிய பிரதிக்கு உண்டான புனைவுகள், படிமங்கள், கண்டடைதல்களுடன் உத்வேகமான ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும் என நினைத்திருக்கிறார். ஆனால், போதாமையான எழுத்தால் அவை கைகூடவில்லை.
இப்படம் திரை விழாக்களுக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதால் மிக குறைவான பட்ஜெட்டில் உருவாக்கிய விதத்திலும், சர்ச்சைகளைச் சந்திக்கும் இயக்குநர்களே பேசத் துணியாத ஒரு கதையைப் படமாக்கியதற்காகவும் இயக்குநரைப் பாராட்டலாம்.
நம்மூரில் காத்திரமான கதைகளைத் திரைப்படமாக்குவது அவ்வளவு எளிதானதல்ல. அதுவும் சாதி, மத நம்பிக்கைகளையும் அதன் அடிப்படை வினாக்களையும் ஒருவர் திரைப்படமாக்க வேண்டும் என நினைத்தால் தனி மனிதர்களின் கருத்து தாக்குதல்களிலிருந்து சென்சார் வரை பெரிய போராட்டத்தையே சந்திக்க வேண்டும். அதிலும், சர்ச்சையான கதைகளை எடுக்க நினைப்பவர்கள் நிலை? அப்படியொரு சர்ச்சைக் கதையாகவே திரைக்கு வந்திருக்கிறது மரியா. ஓடிடியில் வெளியாகும் இப்படம் பெரும் சர்ச்சைப் புயலையே கிளப்பினால் வியப்பதற்கில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.