இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் காப்புரிமைத் தொகையாக ரூ. 2 கோடி வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டுள்ளதால், இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், காப்புரிமை தொடர்பாக இன்னும் விசாரணை தொடங்கவில்லை என்றும் இரு நீதிபதிகள் அமர்வு விளக்கம் அளித்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இரண்டாம் பாகத்தில் ’வீரா ராஜா வீரா’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.
இந்த பாடலுக்கு எதிராக பத்மஸ்ரீ விருது பெற்ற கிளாசிகல் பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் தில்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
அதில், ’வீரா ராஜா வீரா’ பாடலானது, தனது தந்தை நசீர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் மாமா ஜஹீருதீன் தாகர் இருவரும் சேர்ந்து இயற்றிய ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டிருப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம் சிங் அமர்வு, ’வீரா ராஜா வீரா’ பாடலானது ‘சிவ ஸ்துதி’ பாடலை அடிப்படையாகக் கொண்டோ அல்லது ஈர்க்கப்பட்டோ உருவாக்கப்பட்டுள்ளதால், நீதிமன்ற பதிவாளரிடம் ரஹ்மான் தரப்பினர் ரூ. 2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அதிலிருந்து ரூ. 2 லட்சத்தை பாடகர் ஃபயாஸுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் தில்லி உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. ரஹ்மான் தரப்பில், ’வீரா ராஜா வீரா’ பாடலானது ‘சிவ ஸ்துதி’ பாடலை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் மேல்முறையீட்டை ஏற்றுக் கொள்வதாகவும், ஒற்றை நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், வழக்கின் மேல்முறையீடு ஏற்றுக் கொள்ளப்பட்டதால் கொள்கையின் அடிப்படையிலேயே இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், பாடல்கள் குறித்து இன்னும் ஆராயப்படவில்லை என்றும் நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.