தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!
இளம் மலையாள நடிகை அனுராகா நம்பியாரின் குற்றச்சாட்டு குறித்து...
மலையாள நடிகை அனுராகா எஸ். நம்பியார் தன்னை ஏமாற்றிவிட்டதாக தயாரிப்பு நிறுவனம், ’எரும சாணி’ புகழ் விஜய்குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்டுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த நடிகை அனுராகா எஸ். நம்பியார் (23 வயது) குறும்படங்கள் மூலம் பிரபலமானவர். அடிபொலி என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ’ரிசார்ட்’ எனும் இணையத் தொடர் ஒன்றில் ஸ்ரீநிதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிசார்ட் எனும் இணையத் தொடர் வாரத்துக்கு 4 எபிசோடுகள் வெளியாகின்றன. மார்ச் 13 முதல் வெளியாகும் இந்தத் தொடரில் 100 எபிசோடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடரை பிரவீன் பென்னட் இயக்குகிறார்.
Advertisement
Advertisement
இந்தத் தொடரில் நாயகனாக விஜய் குமார் நடிக்கிறார். ’எரும சாணி’ யூடியூப் மூலம் பிரபலமான இவர் அருள்நிதியை வைத்து டி. பிளாக் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது நடிகாரகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ரிசார்ட் இணையத் தொடரில் ஓராண்டு நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டு படப்பிடிப்பு நடத்தாமல், சம்பளமும் தராமல் ஏமாற்றப்பட்டதாக நடிகை அனுராகா எஸ். நம்பியார் விடியோ வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
அதிகாலை 3 மணி ஆகிறது. இந்த நேரத்தில் நான் விடியோ பதிவிடுவேன் என நினைக்கவில்லை. தற்போதுதான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வருகிறேன்.
ஓராண்டாக படம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பே நடத்தவில்லை. வேறு படங்களில் நடிக்கவும் வேண்டாம் எனக் கூறினார்கள். நான்கு மாதங்களாக நான் நடிக்கவில்லை. என்னை ஏமாற்றிவிட்டார்கள். எனக்குப் பொருளாதார ரீதியாக பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
படத் தயாரிப்பிடமும் கேட்டுவிட்டேன். அவர்கள் விஜய்குமாரைக் கேளுங்கள் என்கிறார்கள். கேஷியரிடம் கேட்டால் அவரும் என்னென்னவோ சொல்கிறார். நான் கேரளத்தில் சிறிய கிராமத்தில் இருந்து வருகிறேன். எனக்கு எந்தப் பின்பிலமும் இல்லை. எனக்கு கனவுகள் இருக்கின்றன. என்னை நடிக்க வேண்டாம் எனக் கூறுவதற்கு இவர்கள் யார்? விஜய்குமாரின் மனைவி என்னை அப்படிக் கூறுகிறார்.
எனக்கு வலிப்பு வந்தது. அதனால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். என்னைப் படத்தில் இணைத்த விஜய்குமாரிடம் எனது நண்பர் செல்போனில் பேசினார். விஜய் குமார் அதற்கு என்னைப் பற்றி சிறிதுகூட நலம் விசாரிக்காமல், “அப்படியானல் அவரை இனிமேல் நடிக்க வரவேண்டாம்” எனக் கூறுகிறார்.
அப்போது அவரது மனைவி எனது நண்பரிடம், “நீ வேண்டுமானால் அவளைத் திருமணம் செய்து உடன் வைத்துக்கொள். கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் வந்து நடிக்கச் சொல்லுடா...” எனக் கூறினார். முதலில் என்னைத் தொடர்பு கொண்டதே விஜய்குமார்தான். அவரை நம்பிதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். முக்கியமான கதாபாத்திரம். 99 சதவிகிதம் நாயகி நீங்கள் எனக் கூறினார்கள். இதனால், வேறு படங்களிலும் நடிக்க அவர்கள் விடவில்லை. 7-8 மாதங்களாக நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் சரியில்லை. புதிய இளம் கலைஞர்களை மதிப்பதில்லை. அவர்கள் தரமற்ற உணவுகளைத் தருகிறார்கள். சம்பளம் கொடுத்தால் நாங்களே நல்ல உணவு உண்போம். இதையெல்லாம் கேட்டால் ரெட் கார்டு என மிரட்டுவார்கள். என் உடல் நலம், மன நலம் என அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் கனவுகளைச் சுமந்துவரும் இளம் கலைஞர்கள். எனக்கு வலிப்பு வரவில்லை எனில் தற்கொலை செய்திருப்பேன். எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. இனி இனிமேல் யாருக்கும் இதுபோல நடக்ககூடாது எனக் கூறியுள்ளார்.
இந்த விடியோவில் கமென்ட் செய்து நீக்கியதற்கு நக்ஷத்திராவை இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சீரியல் துணை நடிகைகள் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த மாதிரியான சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
This is my limit and i cannot stay silent scam ares happend says actress Anugraha S. Nambiar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.