பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அண்ணாவின் புகழ்பெற்ற முழக்கமான 'தீ பரவட்டும்' என்ற வசனம் மாற்றப்பட்டு 'நீதி பரவட்டும்' எனவும், 'சிறுக்கி', 'கொடில காய வச்ச துணி மாதிரி' என்ற வார்த்தைகள் மௌனமாக்கி தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியிருக்கிறது.
ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றை நினைவுகூரும் பராசக்தி படத்தில், பெரும்பாலான ஹிந்தி திணிப்பு வார்த்தைகள் மாற்றப்பட்டு அல்லது மௌனமாக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் ஜன. 10-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது.
பராசக்தி படத்தில், 52 இடங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருப்பது தணிக்கைச் சான்றிதழ் மூலம் தெரிய வந்துள்ளது. தணிக்கை வாரியத்தின் வெட்டுகள் போக, 162.43 நிமிடங்களுடன் பராசக்தி நாளை வெளியாகிறது. அதாவது 2 மணி நேரம் 30 நிமிடம் அல்லது 45 நிமிடங்கள் வரை படம் திரையிடப்படும்.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக கடந்த 1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் வரலாற்றை நினைவுகூரும் வகையில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியிருக்கிறது பராசக்தி திரைப்படம்.
பொள்ளாச்சியில், கடந்த 1965-ஆம் ஆண்டு ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது 250 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட மறைக்கப்பட்ட வரலாற்றைச் சுற்றி கதை நகர்கிறது.
தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே, வாரியம் அளித்த பரிந்துரைகளின்படி, 25 இடங்களில் வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி, 'தீ பரவட்டும்' என்ற வார்த்தைக்கு பதில் நீதி பரவட்டும் என மாற்றப்பட்டுள்ளது. இது அண்ணா எழுதிய புகழ்பெற்ற புத்தகத்தின் தலைப்பு. 'ஹிந்தி அரக்கி' என்ற வார்த்தை மட்டும் வசனத்துக்கு ஏற்ப அரக்கி என்று மாற்றப்பட்டுள்ளது.
மேலும் ஹிந்தி அரக்கி, ஹிந்தி என் வாழ்க்கையை அழித்தது, ஹிந்தி கத்துக்கிட்டு என்ற வார்த்தைகளும் மௌனமாக்கப்பட்டுவிட்டன.
இது தவிர, 'வர சப்பாத்தி', 'நொட்ரான்', 'கொல்டி' என்ற வார்த்தைகளும், 'ஹிந்தி என் கனவை அழித்தது' என்ற வசனம் 'ஒரே கனவை ஹிந்தி திணிப்பு எரித்தது' என மாற்றப்பட்டுள்ளது.
உருவ பொம்மை எரிப்புக் காட்சிகள், அஞ்சலகம் மீது சாணத்தை வீசும் காட்சி, இளம் தாய் கொலை, இறந்த உடல்களைக் காட்டும் காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன. சில ஹிந்தி திணிப்புக்கு எதிரான வசனங்களின் சப்-டைட்டில்களும் நீக்கப்பட்டுள்ளன. இதுபோல சுமார் 52 இடங்களில் வசனங்கள் மௌனமாக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது.
முந்தைய கால கதையை திரைப்படமாக்குவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் ஆடை வடிவமைப்பு, கதாபாத்திரங்களுக்கு உரித்தான் நடிகர்கள் தெரிவு என பல சிக்கல்களையும் தாண்டி, சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவான பராசக்தி திரைப்படம் இன்று யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் பெற்று 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் படம் பார்க்கலாம் என்ற அனுமதி கிடைத்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.