திரை விமரிசனம்

கலையரசன் நடித்த அதே கண்கள்: சினிமா விமரிசனம்

மிரட்டும் கண்களும் துடிக்கும் உதடுகளும் கதாபாத்திரத் தன்மையும் அமோகமான அனுபவத்தைத் தந்துவிடுகின்றன.

ச. ந. கண்ணன்

ஒரு தமிழ்ப்படம் பார்த்துமுடித்துவிட்டு அந்தப் படத்தின் கதாநாயகியின் நடிப்பை வியந்தபடி, திரையரங்கைவிட்டு வெளியேறிய அனுபவம் எத்தனைமுறை வாய்க்கும்? அதே கண்கள் படத்தில் ஷிவதா ஒரு நடிப்பு ராட்சசியாக தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மிரட்டும் கண்களும் துடிக்கும் உதடுகளும் அவர் கதாபாத்திரத் தன்மையும் அமோகமான அனுபவத்தைத் தந்துவிடுகின்றன. ஓர் இளம் நாயகிக்கு இப்படிப்பட்ட மகத்தான வாய்ப்பு கிடைப்பதும் அதை அவர் எதிர்பார்ப்புக்கு மேலாகப் பயன்படுத்திச் சாதித்திருப்பதும் அரிதாகவே நடக்கிற விஷயங்கள். இந்த அம்சத்துக்காக இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

பார்வையற்ற இளைஞர்களைக் காதல் வலையில் வீழ்த்தி பணம் அபகரிக்கும் பெண்ணை, ஒரு சாதாரண கான்ஸ்டபிளின் உதவியுடன் வலைவீசிப் பிடிக்கிறான் கதாநாயகன். காரணம் இல்லாமல் இல்லை, அவனும் ஏமாந்தவர்களின் பட்டியலில் உள்ளவன்.  இந்த ஒருவரிக்கதைதான் அதே கண்களாக இரண்டு மணி நேரத்துக்கு விரிந்துள்ளது.

படத்தின் முதல் பாதையில் நிறைய கேள்விகள்: என்னதான் சொந்தக் காலில் நிற்பவராக இருந்தாலும் ஒரு பார்வையற்றவரைக் காதலிக்க இரண்டு அழகான பெண்கள் போட்டி போடுவார்களா, முதலில் நடந்த கொலையை விட்டுவிட்டு ஏன் இரண்டாவது கொலையை நோக்கி கதை நகர்கிறது என இரண்டாம் பாதிவரை இக்கேள்விகள் தொடர்கின்றன. ஆனால் இரண்டாம் பாதியில் கதை வேறொரு வண்ணத்துக்கு மாறிவிடுகிறது. கேள்விகளுக்கான விடைகள் பலவிதங்களில் கிடைக்கின்றன.  

அடுத்தடுத்த படங்களில் திறமையை மேலும் மெருகேற்றுவார் என்கிற நம்பிக்கையை மெட்ராஸில் உண்டாக்கியவர் கலையரசன். இம்முறை கதாநாயகன் வாய்ப்பு. இரு கதாநாயகிகளில் ஒருவர் ஜனனி (டைட்டில் கார்டில் ஐயர் இல்லை). இருவருடைய பங்களிப்பிலும் குறையும் இல்லை. சிறப்பும் இல்லை. கதையில் திடீரென முளைக்கும் கான்ஸ்டபிள் பால சரவணன், நிறைய சிரிப்பு மத்தாப்புகளைக் கொளுத்தி ஒரு த்ரில்லர் படத்துக்கிடையே தேவைப்படுகிற இளைப்பாறலைத் தந்துவிடுகிறார்.  

படத்தின் பலங்களில் ஒன்று - ஒளிப்பதிவு. இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்களில் அதன் சிக்கனச் செலவுகள் கதையைப் பாதித்திடாதபடி இருப்பது கட்டாயம். அதை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம் கச்சிதமாகச் செய்துமுடித்துள்ளார். ஒரு காதல் மற்றும் த்ரில்லர் படத்துக்குரிய பொருத்தமான ஒளிப்பதிவு. தந்திரா பாடலில் ஜிப்ரானின் முத்திரை. படத்தின் கடைசிப் பகுதியில் இப்பாடலே ஒரு பின்னணி இசையாக இருப்பது ஷிவதாவின் கதாபாத்திரத்தை மேலும் கூர்மையாக்கியுள்ளது. 

முதல் பாதியில் மேலும் பல சுவாரசியமான காட்சிகள் இருந்திருந்தால் முழுமையான திருப்தி கிடைத்திருக்கும். ஜனனி காதலில் உள்ள உணர்பூர்வமான தருணங்களை வெளிப்படுத்த சில நல்ல வாய்ப்புகள் இருந்தும் அவை வெளிப்படவில்லை. படத்தின் பலமே இரண்டாம் பாதியும் ஷிவதாவின் நடிப்பும்தான். கடைசிக்கட்டக் காட்சிகள் பார்வையாளர்களை அப்படியே கட்டிப்போட்டுவிடுகின்றன. இரண்டாம் பாதியில் ஒவ்வொரு கட்டமாகக் கதை நகர்ந்து முடிச்சு அவிழ்வது இயக்குநர் ரோஹின் மற்றும் முகிலின் திரைக்கதையின் வீச்சை வெளிப்படுத்துகிறது. 

தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் அசத்தும் காலகட்டம் இது. புதுமுகங்களால் உருவான இந்தப் படமும் அனைவருக்கும் ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT