இயக்குநர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவான ரயில் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
உலகின் அனைத்து மூலைகளிலும் தொழிலுக்காக கூட்டம் கூட்டமாக மக்கள் சென்றுகொண்டே இருக்கின்றனர். அதனால், உள்ளூர்காரர்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளிகளின் மீது எப்போதும் வன்மமும், ஏளனமும், கிண்டல்களும் நிறைந்தே கிடக்கின்றன. அப்படி, நம்மூருக்கு வடமாநில தொழிலாளிகள்.
அழகான தேனியில் அதைவிட அழகான ஊரில் வசிக்கிறார் கதைநாயகன். சுத்த சோம்பேறி. கையில் தொழிலிருந்தும், ‘என்னத்த..’ என்கிற மனநிலையில் உலவும் ஆசாமி. காலை எழுந்ததும் வேலைக்குச் செல்கிறேன் என்கிற பெயரில் குடித்துவிட்டு உழைப்பாளிகளைக் கிண்டல் செய்பவர். குறிப்பாக, சரியான சாலை வசதியே இல்லாத தன் ஊரில் நிறைந்து கிடக்கும் வடமாநிலத் தொழிலாளிகள் மீது வன்மத்துடனே இருக்கிறார். என்ன வன்மம்? அவர்கள் தன் ஊர்க்காரர்களின் வேலைகளைப் பிடுங்கி, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய தொழில் வாய்ப்புகளைத் தடுப்பதாக விசனப்படுகிறார்.
அவருக்குத் துணையாக ‘ஆமா.. மாப்ள’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் எழுத்தாளர் ரமேஷ் வைத்யா. ஒல்லியான தேகம், தென்மாவட்டத்திற்கே உண்டான வார்த்தை தோரணை என அசலான கதாபாத்திரம்.
கதைநாயகன் குங்குமராஜ்ஜின் எதிர்வீட்டில் வசிக்கிறார் வடமாநிலத் தொழிலாளியான சுனில் (பர்வேஸ் மெஹ்ரு). சுனிலுக்கும் கதாநாயகனின் மனைவிக்கும் அக்கா - தம்பி என்கிற அளவில் ஆத்மார்த்தமான உறவு காட்டப்படுகிறது. ஆனால், கதாநாயனுக்கு சுனிலின் பேச்சும் அவனுடைய இருப்பும் பெரிய பிரச்னையாகவே நீடிக்கிறது. இதனால், ஒருநாள் இருவருக்குமிடையே சண்டை நடக்கிறது. அடுத்தநாள் மிகப் பெரிய அசம்பாவிதம் நிகழ்கிறது. வடமாநிலத்திலிருந்து பிழைப்பிற்காக தமிழகம் வந்த சுனிலுக்கு என்ன ஆனது? ஆணவத்துடனே இருக்கும் கதாநாயகன் திருந்தினாரா இல்லையா? என்கிற மீதிக்கதையே ரயில். (படத்திற்கு வடக்கன் எனப் பெயரிடப்பட்டு பின் மாற்றம் செய்யப்பட்டது)
உண்மையில், பிழைப்பைத் தேடி ஒவ்வொரு நாட்டிலிருந்தும் மக்கள் அங்குமிங்கும் பறந்துகொண்டே இருக்கின்றனர். வடமாநிலத் தொழிலாளிக்கு தமிழகம் அடைக்கலம் என்றால் இங்கே தஞ்சாவூர்க்காரர்களுக்கு சிங்கப்பூர், மலேசியா.. நம்மூரில் நம்மைவிட அதிகமாக உழைக்கும் ஒரு வடக்கனைப் பார்த்து வயிறு எரிவோம் என்றால் அமீரகங்களுக்கு வேலைக்குச் செல்லும் நம்மாட்கள் அங்கிருப்பவர்களுக்கு வந்தேறிதானே? அந்த வலி புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமே அறிவது. அந்த வலியை ரயில் குழுவினர் முடிந்தவரைக் கடத்தியிருக்கின்றனர்.
வெண்ணிலா கபாடி குழு, நான் மகான் அல்ல உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் வசனம் எழுதியவரான எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, தன் முதல் படத்திலேயே வணிக வெற்றிகளைக் குறி வைக்காமல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதற்கு உயிர்கொடுக்க நினைத்திருப்பது பாராட்டுக்குரியது.
புலம்பெயர்ந்த தொழிலாளிகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பம், சூழல் என நம்மைப் போன்றே ஆயிரம் பிரச்னைகள் இருக்கிறது என்பதையும் அவர்களின் நிலை உள்ளூரில் திமிருடன் சுற்றும் பலரைவிடவும் மோசம் என்பதையும் நடிகர் பர்வேஸ் மெஹ்ரு தன் நடிப்பால் நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார்.
நடிகர்கள் கும்குமராஜ், வைரமாலா, ரமேஷ் வைத்யா, பாட்டியாக நடித்தவர் என அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளனர். வடமாநிலத் தொழிலாளிகள் இங்கு வந்தபின் டீக்கடைகளில் வடைக்கு பதிலாக பானிபூரி வகை உணவுகள் விற்கப்படுவது பற்றிய காட்சி கைதட்டி ரசிக்கக்கூடிய வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் சார்ந்த வசனங்களும் நகைச்சுவைக் காட்சிகளும் சிரிக்க வைத்துடன் சிந்திக்கவும் வைக்கின்றன.
குறைந்த பட்ஜெட்டில் உருவான படமென்பதால் கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். உணர்ச்சிகரமான காட்சிகள் முன்பே சொல்லப்பட்டுவிடுவதால், கிளைமேக்ஸ் ஊகிக்கும்படியாக உள்ளது. மெதுவான திரைக்கதையில் பெரும்பான்மையான காட்சிகள் சோர்வைத் தருகின்றன. சின்ன விசயத்தை மெனக்கெட்டுச் சொல்கின்றனர்.
பின்னணி இசைகளும் சில பாடல்களும் கதைக்கு ஏற்ப சரியாக அமைந்துள்ளன. தொடர்ந்து முயற்சித்தால், இசையமைப்பாளர் எஸ். ஜே. ஜனனி நல்ல இசையை வழங்கலாம். கிராமப் பின்னணிக்கு ஏற்ப சில இசைக்கோர்வைகளும் நன்றாக இருந்தன.
இப்படத்தின் இன்னொரு கதாநாயகன் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். தன் ஒளிப்பதிவில் காட்சிக்குக் காட்சி கதைக்கு உயிரூட்டியிருக்கிறார்.
மொத்தத்தில், ஆக்சன், திரில்லர் போல பரபரப்பாக நம்மை அழைத்துச் செல்லாத கதை என்பதால், பாசஞ்சர் ரயிலில் போகும் நிதானம் இருந்தால் இந்த ரயிலில் ஒரு ரவுண்ட் வரலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.