விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 100 நாள்கள் மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் சிநேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமும் பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார்.
இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பானது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெற்றன.
இந்நிலையில் அனைவரும் எதிர்பார்க்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி, ஜூன் 17 முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. நாளிதழ்களில் இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். திங்கள் முதல் ஞாயிறு வரை வாரத்தின் அனைத்து நாள்களிலும் தினமும் இரவு 9 மணிக்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்றும் விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.