தினமணி 85

இந்தியாவின் நாலு எதிரிகள் - தலையங்கம்

இந்திய நாட்டிற்கு நாலு எதிரிகள். அவர்கள் யார்? சீனாவா, இல்லை; பாகிஸ்தானா, இல்லை; தென் ஆப்பிரிக்காவா, இல்லை; பிரபாகரனா, இல்லவேயில்லை!

DIN

இந்தியாவின் நாலு எதிரிகள்

இந்திய நாட்டிற்கு நாலு எதிரிகள். அவர்கள் யார்? சீனாவா, இல்லை; பாகிஸ்தானா, இல்லை; தென் ஆப்பிரிக்காவா, இல்லை; பிரபாகரனா, இல்லவேயில்லை! தேர்தல் பிரசாரத்தின் ஒலிபெருக்கிகளின் கூச்சல் கேட்காதவண்ணம் காதைப் பொத்திக் கொண்டு ஆற அமரச் சிந்தித்துப் பார்ப்போமானால், நம் நாட்டை அச்சுறுத்திவரும் நாலு எதிரிகள் மதம், மொழி, இனம் (ஜாதி) பற்றிய வெறிகளும் ஊழலுமே என்று கண்டு கொள்வதில் அதிகச் சிரமமிராது.

ஆன்மீகம் மனிதனைத் தெய்வீக நிலைக்கு உயர்த்துகிறது; மதம் மனிதனை மிருகமாக்கிவிடுகிறது. என் கடவுளும், என் கோயிலும், என்குருவும், என் மத நூலுமே உண்மையானவை, மற்றவை பொய் என்ற அகங்காரத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும் எழும்பும் சண்டை சச்சரவுகளும் வன்முறையும் மதங்களை உண்மையான ஆன்மீகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டிவிடுகின்றன. எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டை நாம் ஏற்காவிடில், எல்லா மதங்களுமே பொய்யானவை என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டுவிடுவோம். பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் மிகுந்த எண்ணிக்கையில் வாழ்ந்துவரும் நம் நாட்டில், மத வழிபாடு ஒரு மனிதனின் சொந்த நம்பிக்கை, தனிப்பட்ட ஒழுக்கம் என்று உணர்ந்து மதக் கோட்பாடுகளை அரசியலிலிருந்தும், பல்வேறு மதத்தினர் ஒருங்கிணைந்து பணியாற்றும் எல்லாவிதமான சமூக அமைப்புகளிலிருந்தும் அறவே விலக்கினால்தான் இந்தியச் சமுதாயம் சமாதானமாகவும் அமைதியாகவும் வாழமுடியும்.

"கடவுள் இல்லை, இல்லை, இல்லவேயில்ல' என்று கூவும் "பகுத்தறிவாளர்' கடவுளுக்குப் பதிலாக மொழியை வழிபடும் விந்தையையும் காண்கிறோம். என் மொழிதான் உலகிலேயே பழையது, என் மொழிதான் எல்லா மொழிகளிலும் இனியது என்ற சிறுபிள்ளைத்தனமான வாதங்களில் அவர்களுடைய பகுத்தறிவின் ஆழமின்மை வெளிப்பட்டுவிடுகிறது. மொழிகளின் மூலத்தைக் கண்டறிந்தவர் யாருமில்லை; எவருக்கும் தத்தம் தாய்மொழி இனித்து ஒலிப்பது இயற்கையே என்ற உண்மைகளை ஏற்றுக்கொண்டால், மொழியின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் சூழ்ச்சிகளிலிருந்து தப்பிவிடலாம்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டில் சிறந்து விளங்கிய சிந்துவெளிச் சமுதாயத்திலும், பற்பல இனத்தவர் கலந்தே வாழ்ந்தனர் என்று அக்காலத்திய எலும்புக் கூடுகளை ஆராய்ந்த அறிவியலாளர் கூறுகின்றனர். இமயத்தைத் தாண்டியும் கடலைக் கடந்தும் நம் நாட்டில் வந்து குடியேறின மக்களின் ரத்தம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பழங்குடியினரின் ரத்தத்துடன் ஒன்றுகலந்து ஒரே சமுதாயத்தைத் தோற்றுவித்துவிட்டது என்பது அறிவியல் கூறும் உண்மையாகும். இன்றைய இந்தியாவில் ஆரியருமில்லை. திராவிடருமில்லை. திராவிடம், தமிழினம், வன்னியர், அன்னியர் போன்ற இனவாத, ஜாதி அபிமானக் கொள்கைகள் வேரூன்றினால் நம்நாடு ஒரு சிதறுதேங்காய் ஆகிவிடும். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் வெவ்வேறு இனத்தவர் என்ற பொய்ம்மையின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவானபோதிலும், பொய் பொய்தான்; நிஜமாகிவிடாது. நேற்றுத் தோன்றிய சீக்கிய மதத்தைச் சேர்ந்த சிலர் இன்று அவர்களை ஒரு தனி இனம் என்று கூறிக் கொள்ளும் அபத்தத்தையும் வன்முறையால் உண்மைப்படுத்திவிட முடியாது!

கொள்கையில்லாத அரசியல் இன்று நம் நாட்டில் ஊழலைப் பூதாகாரமாக வளர்த்துவிட்டது. மக்கள் தொண்டு, பஞ்சாயத்துகளிலும், ஊராட்சிகளிலும், கூட்டுறவுச் சங்கங்களிலும் பங்கேற்று ஜனநாயக நெறிமுறைகளில் நெடுநாள் பயிற்சி, பொதுவாழ்வில் நேர்மையால் ஏற்படும் உயர்வு போனற எவ்விதப் பாரம்பரியமுமின்றி சினிமாவின் கவர்ச்சி, அரசியல் குடும்பங்களில் பிறந்த ஆதாயம் இவர்றையே முதலீடாக வைத்து, அரசைக் கைப்பற்றி அகப்பட்டதைச் சுருட்டும் அரசியல்வாதிகளிடம் ஊழலைத் தவிர வேறொன்றையும் எதிர்பார்க்க முடியாது. அரசியல்வாதிகளிடமிருந்து அதிகாரிகளிடத்திலும், இவர்களை எவ்வழயிலும் திருப்திப்படுத்த முயலும் வியாபாரிகளிடத்திலும், பொதுமக்களிடத்திலும் ஊழல் பரவி எங்கும் வியாபித்து, எதிலும் ஊடுருவிவிட்டது. "ஐயோ, தேர்தலே வேண்டாம்' என்று தமிழக மக்கள் இன்று அலறுவது, அவர்களுக்கு ஆளுநர் ஆட்சியில் இருக்கும் நம்பிக்கையைவிட, ஜனநாயக முறைகளில் இருக்கும் பற்றைவிட, அரசியல்வாதிகளின் ஊழலைப் பற்றிய அச்சம் அதிகமாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

மத, மொழி, இன, மோதல்கள் இல்லாத சமுதாயமும், ஊழலற்ற அரசியலும் இந்த நாட்டில் சாத்தியமா என்று கேட்பவர்களுக்கு மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை நினைவூட்டுகிறோம். சொந்த வாழ்க்கையில் ஆழ்ந்த மதப் பற்றினைக் கொண்டிருந்த அவர், அரசியலிலிருந்து மதப் பூசல்களை நீக்க அயராது உழைத்து அதற்காகவே உயிர்த் தியாகமும் செய்தார். பொது வாழ்வில் நேர்மைக்கு ஓர் இலக்கணமாகத் திகழ்ந்தார். அவரது தலைமையின்கீழ் லட்சக்கணக்கான தொண்டர்கள் சொத்து, சுதந்திரங்களைத் துறந்து விடுதலைப் போரில் சிறை சென்றனர், உயிரையுமீந்தனர். "காந்தியின் லட்சியங்களான சத்தியத்தையும் அகிம்சையையும் மீண்டும் நம்நாட்டின் அரசியலிலும் பொதுவாழ்விலும் கொண்டுவருவது சாத்தியமில்லையென்று ஏன் நினைத்துக் கொள்ளவேண்டும்? டாக்டர் உதயமூர்த்தி போன்றோர் "நம்பு தம்பி, நம்மால் முடியும்! நம்மால் இந்தச் சமுதாயத்தை மாற்ற முடியும்' என்று குரலெழுப்பத் தொடங்கியிருப்பது புதிய நம்பிக்கையை உண்டாக்கிவருகிறது.

இந்திய நாட்டின் எதிரிகள் மதம், மொழி, இனம் (ஜாதி) பற்றிய வெறிகளும் ஊழலுமே என்று எடுத்துரைக்கும் தலையங்கம். (16.6.1988).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT