பண்ருட்டி ராமச்சந்திரன் 
தினமணி 85

ஒரு கையில் திருக்குறள்.. மறு கையில் தினமணி..!

ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு பயின்று கொண்டிருந்தேன்.

பண்ருட்டி ராமச்சந்திரன்

ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு பயின்று கொண்டிருந்தேன். விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த காலம் அது.

மாணவர்களுக்காக பல்கலைக்கழக நிர்வாகம் சில பத்திரிகைகளை நாள்தோறும் வாங்குவது வழக்கம். அதில் தவறாமல் இடம்பெறுவது தினமணி நாளிதழ். அப்போது அப்பத்திரிகையை முதலில் தேடி எடுத்துப் படிக்கும் கரங்கள் என்னுடையதாகத்தான் இருக்கும்.

அன்று தொடங்கிய அப்பழக்கம், இன்று வரையிலும் தொடருகிறது. எனது இல்லத்தின் முகப்பைத் தேடி முதலில் வருவதில் வைகறை கதிரவனுக்கும், தினமணிக்கும் அன்றாடம் போட்டி அரங்கேறுகிறது.

ஆனால், எது முதலில் வந்தாலும் சரி; வெளிச்சத்தை நிரப்பி விட்டுச் செல்லும் என்பது மட்டும் நிச்சயம். நாளேடுகள் பல வகை; அவற்றில் பெரும்பாலானவை பார்ப்பதற்கு மட்டுமே நன்றாக இருக்கும். ஆனால், தினமணி போன்ற ஒரு சில பத்திரிகைகள்தான் படிப்பதற்கும் நன்றாக முடியும். வர்த்தக ரீதியாக எந்த சமரசங்களையும் செய்து கொள்ளாமல் தரமான, நம்பகமான செய்திகளை மட்டுமே சமூகத்துக்கு அளித்து வருகிறது தினமணி.

தினமணி நாளிதழ்களின் பல ஆசிரியர்களோடு நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு உண்டு. ஏ.என்.சிவராமன் முதல் தற்போது ஆசிரியராக உள்ள கி.வைத்தியநாதன் வரை ஒவ்வொருவரும் பத்திரிகையை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்து சென்றவர்கள்.

வைத்தியநாதனைப் பொருத்தவரை அவர் எழுதும் தலையங்கங்கள் அனைத்தும் தனித்துவம் மிக்கவை. ஒரு விஷயத்தை அலசி, ஆராய்ந்து, அனைத்து விவரங்களையும் திரட்டிய பிறகு தலையங்கத்தைத் தீட்டும் அவரது பாங்கு ஆச்சரியத்துக்குரியது.

அதுபோல தற்கால தலைமுறையினரிடையே தமிழை வளர்த்தெடுக்கவும், மொழியின் செழுமை காக்கவும் அவர் ஆற்றி வரும் அரும்பணிகள் விழிப் புருவத்தை வில்லாக்குகின்றன.

பொதுவாக சில பத்திரிகைகளுக்கு உள்ளூர் செய்திகள் மட்டுமே பிரதானம். ஆனால், தினமணி அதற்கு விதிவிலக்கு. தமிழகம் தாண்டி, தேசியம் கடந்து, உலகளாவிய செய்திகளை வாசகனுக்கு அளிக்கும் சிறந்த நாளேடாக விளங்குகிறது.

சுருங்கச் சொன்னால் தமிழர்களின் அடையாளம் திருக்குறள் என்பார்கள். என்னைப் பொருத்தவரையில், ஒரு கையில் திருக்குறளும், மறு கையில் தினமணியும் இருப்பதுதான் தமிழர்களுக்கு அடையாளம். தமிழ் உள்ளவரை, தமிழர்கள் உள்ளவரை, தமிழ் மக்களின் ஆயுதமாக தினமணி தொடரும்.

வாழ்க.. வளர்க..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி பாலியல் வழக்குகள்: வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தவெக 2வது மாநில மாநாடு தொடங்கியது: இளைஞர்கள் கூட்டத்தால் திணறும் மதுரை!

பாரபத்தியில் தவெக மாநாடு! பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!!

தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அமைச்சர் Rajnath Singh சிங்குடன் விண்வெளி நாயகன் Subhanshu Shukla!

SCROLL FOR NEXT