பழ. நெடுமாறன் 
தினமணி 85

ஜனநாயகத்தின் உரம் தினமணி!

1934 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி, பாரதியாரின் நினைவு நாளில் தொடங்கப்பட்ட "தினமணி நாளிதழ்' தமது 85-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பது

பழ. நெடுமாறன்

1934 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி, பாரதியாரின் நினைவு நாளில் தொடங்கப்பட்ட "தினமணி நாளிதழ்' தமது 85-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பது இதழியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படத் தக்கதாகும். இந்தியாவின் விடுதலைப் போராட்டம் காந்தியடிகளின் தலைமையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட காலகட்டத்தில் தினமணியின் தோற்றம் அப்போராட்டத்துக்குப் புதிய உத்வேகத்தை ஊட்டியது என்று சொன்னால் மிகையாகாது.

மதுரையில் நான் பள்ளி மாணவனாகப் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் நாள்தோறும் காலையில் தெருமுனையில் இருந்த சிறு கடை ஒன்றில் தினமணி நாளிதழை வாங்கிவந்து எனது தந்தையாரிடம் கொடுப்பது அன்றாடப் பணிகளில் ஒன்றாகும். காலையிலேயே நான் எழவேண்டும் என்பதற்காக எனது தந்தை செய்த ஏற்பாடுதான் இது.

எங்கள் வீட்டுக்கு அருகில் தேசிய வாசகசாலை ஒன்று இருந்தது. மாலைப் பொழுதுகளில் அங்கு சென்று பத்திரிகைகளைப் படிப்பது எனது பழக்கமாகும். பல்வேறு வார இதழ்களில் வெளியாகும் சிறு கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றை படிப்பேன். ஒருநாள் மாலையில் வாசகசாலையில் வழக்கத்துக்கு அதிகமானவர்கள் கூடியிருந்தார்கள். அவர்களுக்கிடையே பரபரப்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை செவிமடுத்துக் கேட்டபோது இனம் புரியாத பரபரப்பு என்னைத் தொற்றிக்கொண்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு தில்லி செங்கோட்டையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் மூன்று தளபதிகளான ஷா நவாஸ் கான், கே.பி. சேகால், ஜி.எஸ். தில்லான் ஆகியோர் மீது பிரிட்டிஷ் மன்னருக்கு எதிராகப் போர் தொடுத்தார்கள் என்ற வழக்கு விசாரணை 1945-ஆம் ஆண்டு தில்லி செங்கோட்டையில் இராணுவ நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட செய்தி அன்றைய நாளிதழ்களில் முதலிடம் பெற்றிருந்தது.

வாசக சாலையில் கூடியிருந்த பெரியவர்களும், இளைஞர்களும் அது குறித்துதான் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சைக் கேட்டப் பிறகு வீட்டுக்கு ஓடோடிச் சென்று தினமணி நாளிதழை எடுத்து அந்தச் செய்தியை நிதானமாகப் படித்துப் பார்த்தேன். பிறகு தொடர்ந்து தினமணி நாளிதழில் வெளியான இந்திய தேசிய இராணுவ வீரர்கள் வழக்குப் பற்றிய விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து படித்து வந்தேன்.

புகழ்பெற்ற வழக்குரைஞரும், தேசியவாதியுமான புலாபாய் தேசாய் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினார். ஆனாலும், அவருக்கு உதவியாக வாதாடுவதற்கு நீதிமன்றத்தில் ஜவாஹர்லால் நேரு உள்பட பல முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் முன் வந்தனர். காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய காலகட்டத்தில் வழக்குரைஞர் தொழிலைத் துறந்து வெளியேறிய இந்தத் தலைவர்கள், மீண்டும் வழக்குரைஞருக்கான உடைகளைத் தரித்து நீதிமன்றத்தில் வாதாட முன்வந்தது நாடெங்கும் பெரும் எழுச்சியை உருவாக்கிற்று. இந்த வழக்கில் 1946-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்திய தேசிய இராணுவத் தளபதிகள் மூவருக்கும் தீவாந்தர தண்டனை அளிக்கப்பட்டது. இராணுவ நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை பிரிட்டிஷ் இந்தியப் படையின் தலைமைத் தளபதி உறுதி செய்தார். உடனடியாக நாடெங்கும் பெரும் கிளர்ச்சிகள் மூண்டெழுந்தன. ஊர்வலங்கள், கண்டன கூட்டங்கள், கடையடைப்பு போன்றவை நடத்தப்பட்டன. பல இடங்களில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர்.

இந்தச் செய்திகள் அனைத்தையும் தினமணி நாளிதழ் வாயிலாக அறிந்தபோது என்னைப் போன்ற மாணவர்களும் கிளர்ந்தெழுந்தோம். நாடே கொதித்தெழுந்ததின் விளைவாக இந்த மூன்று தளபதிகள் உள்பட இந்திய தேசிய இராணுவ வீரர்கள் அனைவரையும் விடுவிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இந்திய அரசுக்கு ஏற்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

நாடெங்கும் தேசப்பக்த கனலைப் பரப்பியதில் தினமணி நாளிதழுக்கு முக்கியப் பங்குண்டு. அப்போது அதன் ஆசிரியர்களாக விளங்கிய டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் போன்றோர் எழுதிய தலையங்கங்களும், கட்டுரைகளும் மக்களிடம் பெரும் உந்துதலை உருவாக்கின. பிற்காலத்தில் தினமணியின் ஆசிரியர் பொறுப்பை ஏற்ற பலர் உள்பட இன்றைய ஆசிரியர் கி. வைத்தியநாதன் வரை தொடர்ந்து அந்த உந்துதலை மக்களிடம் பரப்பி வருகின்றனர்.

நாடு விடுதலைப் பெற்றப் பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் அறிவிக்கும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் செய்திகளும், கட்டுரைகளும் தினமணியில் வெளியாகி ஜனநாயகப் பயிர் வளர்ந்தோங்க உரமாக அமைந்தன.

நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட பார்வையுடன், தொடர்கிறது தினமணியின் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT