கட்டுரைகள்

அமைதியைக் குலைக்கும் அணு!

"மிகச்சிறிய' என்று பொருள்படும் அணு பல சமயங்களில் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்திவிடுகிறது. தற்போது இந்தப் பிரச்னையின் மையப்புள்ளியாக ஈரான் அமைந்துள்ளது. யுரேனியம் செறிவூட்டும் பணியையும், அதற்காகப் புதிய ந

எஸ். ராஜாராம்

"மிகச்சிறிய' என்று பொருள்படும் அணு பல சமயங்களில் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்திவிடுகிறது. தற்போது இந்தப் பிரச்னையின் மையப்புள்ளியாக ஈரான் அமைந்துள்ளது.

யுரேனியம் செறிவூட்டும் பணியையும், அதற்காகப் புதிய நிலையங்கள் அமைக்கும் பணியையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இத் தீர்மானத்துக்கு ரஷியாவும் சீனாவும் ஆதரவு அளித்திருப்பதன் மூலம் ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மீதான உலக நாடுகளின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐஏஇஏ-வில் உறுப்பினராக உள்ள 35 நாடுகளில் இந்தியா உள்பட 25 நாடுகள் ஈரானுக்கு எதிராக வாக்களித்துள்ளன.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு ரஷியாதான் பெருமளவு உதவிகளைச் செய்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த காலங்களில் ஈரானுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் ரஷியாவும் சீனாவும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈரானைக் காத்து வந்தன. தற்போது அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாகவே இந்த இரு நாடுகளும் ஈரானைக் கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

"ரஷியா இன்றைய உலகச் சூழலை நன்றாக ஆராயாமல் தவறுசெய்துவிட்டது' என்று ஈரான் அதிபர் முகமது அகமது நிஜாதி ஆவேசப்பட்டுள்ளார்.

மேலும், ஐஏஇஏ-வின் தீர்மானத்தை அலட்சியம் செய்யும் வகையில், கூடுதலாக 10 இடங்களில் யுரேனியம் செறிவூட்டும் நிலையம் அமைக்கப் போவதாகவும், அதில் 5 இடங்களைத் தேர்வு செய்துவிட்டதாகவும் துணிச்சலாகக் கூறியுள்ளது ஈரான்.

"நடான்ஷ்' என்ற இடத்தில் அணுசக்தி நிலையத்தை அமைத்து, அதில் யுரேனியம் செறிவூட்டும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளது ஈரான். அணுசக்தி மூலம் 2020-ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாக ஈரான் கூறி வருகிறது. ஆனால், ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

ஈரானின் அணுசக்தித் திட்டம் "அமைதிக்காக அணு' என்ற பெயரில் அமெரிக்காவின் உதவியுடன் 1950-களிலேயே தொடங்கிவிட்டாலும், மன்னர் ஷா ஆட்சியில்தான் தீவிரமடைந்தது.

1980-களில் பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி ஏ.க்யூ.கான் மூலம் அணுஆயுதத்துக்கான யுரேனியம் செறிவூட்டும் தொழில்நுட்பம் ஈரானுக்குக் கிடைத்ததாக மேற்கு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு என்ற வகையில், ஐ.நா.வின் அணுஆயுதக் கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ-க்கு ஈரான் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால், அந்த நாடு அணுஆயுதம் தயாரிக்க முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

"ஐஏஇஏ-க்கு ஒத்துழைப்பு அளிக்காமல் ஈரானின் போக்கு தொடர்கிறது. அந்த நாட்டுக்கு எதிராகப் புதிய தடைகளை விதிக்க ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஈரான் ஆயுத ஏற்றுமதி செய்யக்கூடாது என, 2007-ம் ஆண்டு ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சில் விதித்த தடை அமலில் உள்ளது. இந்நிலையில் அந்தத் தடையை மீறி சிரியாவுக்கு ஈரான் கப்பலில் ஆயுதங்களை அனுப்பியதாகவும், தடையை மீறி ஈரான் செயல்பட்டு வருவதால் புதிய தடையை விதிக்கும் நேரம் வந்துவிட்டது என இந்த நாடுகள் கூறியுள்ளன.

"புதிய தடைகளை சில சமயங்களில் வரவேற்கலாம்' என கருத்துத் தெரிவித்த ரஷிய அதிபர் மெத்வதேவ், பின்னர் தனது கருத்தில் பின்வாங்கி, ஈரான் விஷயத்தில் அரசியல்ரீதியான தீர்வுதான் சரி' எனக் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் அரபு நாடுகள் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஈரானைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் அணுஆயுத பலம் பெறுவது, ஒருபுறம் அரபு நாடுகள் கூட்டமைப்புக்கு மகிழ்ச்சி அளிக்கும் எனக் கருதினாலும், அது தங்களுக்கே ஆபத்தாக முடியக்கூடும் என்றும் அரபு நாடுகள் கருதுகின்றன. ஐஏஇஏ-வின் உறுப்பு நாடான எகிப்து மட்டும் ஈரானுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான், சவூதி அரேபியாவுக்கு இடையே எப்போதுமே ஒரு போட்டி இருந்து வருகிறது. ஈரான் பலம் பெறுவதை சவூதி விரும்பியதில்லை. அதுவும் அரபு நாடுகள் கூட்டமைப்பின் மௌனத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும்.

இதற்கிடையே, சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த ஈரானின் அணு விஞ்ஞானி ஷாரம் அமீரி காணாமல்போன விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"கடந்த ஜூன் முதல் மாயமாகியுள்ள ஷாரம் அமீரி கடத்தப்பட்டுள்ளார். சவூதி அரேபியா மூலம் அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என ஈரான் கூறியுள்ளது. ஆனால், அமெரிக்காவும் சவூதியும் இதை மறுத்துள்ளன.

அணுஆயுதம் படைத்த நாடுகளான அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை சமீபகாலமாக அணுஆயுதச் சோதனை எதையும் நடத்தவில்லை.

அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், அணுஆயுதச் சோதனை எதையும் நடத்த மாட்டோம்; அணுஆயுதத் தொழில்நுட்பத்தை எந்த நாட்டிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என இந்தியா சுயஉறுதி பூண்டுள்ளது. இருப்பினும், அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திடச் செய்ய அமெரிக்கா பெரும் முயற்சி செய்துவரும் நிலையில், புதிதாக ஒரு நாடு அணுஆயுத பலம் பெறுவதை அந்த நாடு விரும்பவில்லை.

மேலும், பதற்றம் நிறைந்த மத்திய கிழக்கில் ஈரான் மட்டுமன்றி எந்த நாடு அணு ஆயுதத்தைத் தயாரித்தாலும் ஆபத்துதான். அதுவும் ஈரானுக்கு அணுஆயுதங்கள் கிடைத்தால் அது எந்த அளவுக்குக் கட்டுப்பாட்டுடன் இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

இஸ்ரேலை வரைபடத்திலேயே இல்லாமல் செய்வோம் என ஈரான் பலமுறை பகிரங்கமாகக் கூறியுள்ளது. அணுஆயுத பலமும் கிடைத்துவிட்டால்...?

மின்சார உற்பத்திக்காகத்தான் அணுசக்தி தொழில்நு ட்பத்தைப் பயன்படுத்துகிறோம் என்று ஈரான் கூறுவது உண்மையானால், அதில் சில வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கலாம்.

குறிப்பாக ஐஏஇஏவுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து உலக நாடுகளின் சந்தேகத்தைப் போக்கி, மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட வேண்டியது ஈரானின் கடமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

SCROLL FOR NEXT