சங்க இலக்கியங்கள் தமிழகத்தின் பண்டை வரலாற்றை உணர்த்தும் கருத்துப் பேழை. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் தொன்மை மிக்க தொல்காப்பியர் இயற்றிய "தொல்காப்பியம்' சங்ககால இலக்கண நூலாகும்.
"இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் இயம்பல்' என்பதே தமிழ் மரபு. எனவே, தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே பண்பாட்டுப் பெட்டகமாக நல்லிலக்கியங்கள் மலர்ந்திருக்க வேண்டும்.
"சமய உணர்வையும் தமிழையும் பிரிக்க முடியாது' என்ற பேருண்மையை முதன் முதலாக எடுத்தியம்பும் நூல் தொல்காப்பியம். குறிப்பாக, தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழகத்தின் பண்டைய இந்து சமய வழிபாட்டு உணர்வை சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளது.
தூய ஆன்மிக நெறியோடும், பக்தி உணர்வோடும் கடவுள் வழிபாட்டு வழியை, நாட்டின் நிலப்பகுப்போடு இணைத்துக் காட்டிய பெருமை தொல்காப்பியரையே சாரும்.
""மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே''
என்பது தொல்காப்பியம். தொல்காப்பியர் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்று நான்கு கடவுளரைப் பற்றி முதலில் கூறி, அக்கடவுளர் நெறியைப் போற்றி வணங்கிய நிலங்களைக் குறிப்பிடுகிறார். இந்த நூற்பாவின் படி, ""காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தின் கடவுளாக மாயோனாகிய திருமாலும், மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தின் கடவுளாக சேயோனாகிய முருகப்பெருமானும், வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தின் கடவுளாக "வேந்தன்' ஆகிய இந்திரனும், கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் கடவுளாக வருண பகவானும்'' குறிக்கப்பட்டுள்ளனர்.
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து காணப்பெற்ற பாலைப் பகுதியில் "கொற்றவை' வழிபாடு நிகழ்ந்ததாகவும் சங்க நூல் வழியும், சங்கம் சார்ந்த சிலப்பதிகாரம் போன்ற நூல் வழியும் அறிய முடிகிறது.
நில இயற்கை அமைப்பை ஒட்டி, இயற்கையோடு இயைந்த தெய்வ வழிபாட்டு நெறியைத் தொல்காப்பியம் மூலம் அறிகிறோம். தொல்காப்பியர் காலத்திலேயே தமிழக மக்கள், பாரத தேசிய ஒருமைப்பாட்டு உணர்வைச் சமயத் துறையில் கண்டுள்ளனர் என்பது பேருண்மையாகும்.
சூரியனையும், இந்திரனையும் புகழும் "ரிக்வேதம்' போல, தொல்காப்பியமும் சூரியன், இந்திர வழிபாட்டைக் குறிப்பிடுகிறது. சூரிய வழிபாடு தமிழக மக்களிடம் நிலவியது என்ற உண்மையை தொல்காப்பியம், புறத்திணை இயலில் "கொடிநிலை வள்ளி' என்ற நூற்பா நன்கு விளக்குகிறது.
தொல்காப்பியர் நெறியும் ரிக்வேத நெறியும் ஒன்றாக அமைந்தது சமய வழி, பாரத ஒருமைப்பாட்டுக்கு விதை தூவப்பட்ட உண்மையைப் புலப்படுத்தும்.
இறையனார் களவியல் உரை நக்கீரனார் இயற்றியது. இவ்வுரை மூலம், சிவபெருமானே தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்தார் என்பது பெறப்படும் செய்தியாகும். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றெரிந்த முருகவேளும் தமிழ்ச்சங்கம் வளர வழிகாட்டினர். சங்க இலக்கிய வழி உணர்ந்த திருவிளையாடல் புராண ஆசிரியரும் கண்ணுதல் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து தமிழாய்ந்த செய்தியைத் தெளிவாகக் கூறுவார். கடவுள் உணர்வுடன் தான், கடவுள் வழிகாட்டுதல் படிதான் சங்க இலக்கியங்கள் மலர்ந்தன என்பதை இறையனார் களவியல் உரை மூலம் நாம் தெளியலாம்.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பண்டைத் தமிழக மக்கள், நானிலங்களிலும் தெய்வ வழிபாட்டைப் போற்றினர் என்பதையும் தொல்காப்பிய இலக்கண நூலும், அதனைச் சார்ந்த சங்க இலக்கியங்களும் தெளிவுறுத்தும்.
சங்கப் பனுவல்களுள் பத்துப்பாட்டுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை தான் முதன்முதல் முருகப்பெருமானைப் பற்றி எழுதப்பட்ட நூலாகும். சமய ஒருமைப்பாட்டுக்கும், சமய வளர்ச்சிக்கும் வித்திட்ட முதல் இலக்கியம் திருமுருகாற்றுப்படை என்றும் கூறலாம். முருகப்பெருமானைப் பாராட்டும் நக்கீரர், பிற தெய்வங்களை இகழாமல், அவற்றையும் போற்றுவார். வைணவக் கடவுளான திருமால் அழகனையும் பாராட்டுகிறார் நக்கீரர்.
""பாம்பு படப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புல் அணி நீள் கொடிச் செல்வன்''
வேற்றுச் சமயக் காழ்ப்பின்றி, அனைத்துச் சமய உணர்வையும் மதிக்கும் சமய ஒருமைப்பாட்டு நெறிக்கு திருமுருகாற்றுப்படை வழிகாட்டுகிறது.
முருகப் பெருமானைப் பற்றி முதன்முதலில் எழுதப்பட்ட நூலாகிய திருமுருகாற்றுப்படை "உலகம்' என்றே தொடங்குகிறது. நிலப்பகுப்பைக் கூறும் தொல்காப்பியம், "காடுறை உலகம்', "மைவரை உலகம்', "தீம்புனல் உலகம்', "பெருமணல் உலகம்' என்றே குறிப்பிடும். திருக்குறளும் "ஆதி பகவன் முதற்றே உலகு' என்றே கூறும். சங்கநூல் வழி, சமய வளர்ச்சி மேற்கொண்ட கம்பர் "உலகம் யாவையும்' என்றும், சேக்கிழார் பெருமான் பெரியபுராண தொடக்கத்தில், "உலகெலாம்' என்றும் கூறியமை சமய வளர்ச்சி நிலைகளையும், அதன்வழி சமுதாய நெறிமுறை வளர்ந்த பாங்கையும் புலப்படுத்தும்.
ரிக்வேதம் கூறும் சூரிய வழிபாட்டு நெறியை,
""கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே''
என்று தொல்காப்பியம் கூறும். இச்சூத்திரத்தின் விளக்கம்: கொடிநிலை-சூரியன், கந்தழி-அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள், வள்ளி-தண்கதிர். "கீழ்த் திசையில் நிலை பெற்றுத் தோன்றும் செஞ்சுடர் மண்டிலம், பற்றுக் கோடின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள், தண்கதிர் மண்டிலம் என்று கூறப்பட்ட குற்றம் தீர்ந்த சிறப்பை உடைய மூன்று தெய்வமும் தேவரோடே கருது மாற்றால் தோன்றும்' என்பது இந் நூற்பா பொருள்.
இறைவனிடம் அன்பும், அருளும், அறமும் வேண்டும் என்றே கேட்க வேண்டும் என்பதே சங்க இலக்கியம் காட்டும் சமய நெறியாகும். மனிதனைத் தெய்வமாக மாற்றும் சிறப்புடைய சங்க இலக்கியங்களைக் கற்போம்; வாழ்வில் வளம் சேர்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.