காலைச் சுற்றிய பாம்பு கடிக்கத் தொடங்கிய பிறகுதான் வலியை உணர்ந்துள்ளது பாகிஸ்தான். அந்த நாட்டையே துண்டாடும் அளவுக்கு தலிபான்கள் அடைந்துள்ள எழுச்சி பாகிஸ்தான் ஆட்சியாளர்களை மிரளவைத்துள்ளது.
தலிபான்களுக்கு எதிராக தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கின் முக்கிய நகரமான மிங்கோராவில் இருந்து, ஒரு பெரும் தலிபான் படையே இஸ்லாமாபாத் நோக்கி நகர்ந்ததாகத் தெரியவந்தபோது, அந்த நாடு மட்டுமன்றி மொத்த உலகமும் அதிர்ச்சியுடன்தான் பார்த்தது.
ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, அங்குள்ள ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் வலுவான அடித்தளத்தை அமைத்த தலிபான்கள், அப் பகுதியில் இஸ்லாமிய சட்டத்தையும் அமல்படுத்தினர்.
அத்துடன் நிற்காமல் "பாகிஸ்தானை இன்னொரு ஆப்கானிஸ்தானாக மாற்றுவோம்' என சூளுரைத்து, இஸ்லாமாபாதிலிருந்து 60 மைல் தொலைவில் உள்ள பியூனர் மாவட்டம் நோக்கி முன்னேறத் தொடங்கினர்.
அப்போதும்கூட செய்வதறியாதுதான் இருந்தது பாகிஸ்தான். பின்னர், நிலைமையின் தீவிரத்தை உணர்த்தி, அமெரிக்கா கொடுத்த கடும் நெருக்கடி காரணமாக, தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் படைகள் தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.
அமெரிக்காவில் 2001, செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை "நேட்டோ' படைகள் துவம்சம் செய்தன. அத்துடன் தலிபான்கள் ராஜ்யம் வீழ்ந்ததாகத்தான் கருதப்பட்டது. ஆனால், தற்போது ஆப்கானிஸ்தானில் மட்டுமன்றி, பாகிஸ்தானிலும் தலிபான்கள் தங்கள் ராஜ்யத்தை நிறுவத் தொடங்கியிருப்பது உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானைவிட்டு ரஷியப் படைகளை வெளியேற்றுவதற்காக அமெரிக்கா வளர்த்துவிட்ட தலிபான்கள், அமெரிக்காவின் கண்ணையே குத்தினர். அதுதான் இரட்டைக்கோபுரத் தாக்குதல். அதேபோல, தலிபான்களைக் கண்டும்காணாமல் இருந்த பாகிஸ்தானின் கண்ணை தற்போது குத்தத் தொடங்கியுள்ளனர் தலிபான்கள்.
ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் தற்போது நடந்துவரும் சண்டை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அப் பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இவ்வாறு வெளியேறும் மக்களுக்கு உதவுவதற்காக உலக நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது பாகிஸ்தான்.
வழக்கம்போல உதவி வழங்க அமெரிக்கா தயாராக இருந்தாலும், "தலிபான்கள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் பாகிஸ்தானின் அணுஆயுதங்களைக் கைப்பற்றும் அபாயம் இருப்பதாக' அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அண்மையில் பகிரங்கமாக எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
அணுஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி திரும்பத் திரும்பக் கூறிவந்தாலும், அதை நம்புவதற்கு அமெரிக்கா தயாராக இல்லை.
பாகிஸ்தானில் தளம் அமைத்துச் செயல்படும் தீவிரவாதிகளை அந்த நாடு ஒடுக்க வேண்டும் என இந்தியா நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. அப்போதெல்லாம் தங்கள் மண்ணில் தீவிரவாதிகளுக்கு இடம் இல்லை எனவும், தங்களுக்கு முதல் எதிரி இந்தியாதான் எனவும் வலுவற்ற காரணங்களைக் கூறி தட்டிக்கழித்து வந்த பாகிஸ்தான், இப்போது தலைக்குமேல் வெள்ளம் சென்ற பிறகு தலிபான்களை அழிக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாக உலகுக்குச் சொல்கிறது.
தலிபான்களுடன் சண்டையிடுவதற்காக இந்திய எல்லையில் நிறுத்தியுள்ள பாகிஸ்தான் வீரர்களைக்கூட கிழக்குப் பகுதிக்குத் திருப்ப உத்தரவிட்டுள்ளதாக, பிரதமர் கிலானி கூறியுள்ளார்.
இந்தியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் எல்லாம் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாக இந்தியா ஆதாரங்களுடன் தெரிவித்து வந்துள்ளது. அப்போதெல்லாம் பாகிஸ்தானுக்குச் சாதகமாகவே அமெரிக்கா இருந்து வந்துள்ளது. இப்போது, பாகிஸ்தானில் தனி அரசாங்கத்தையே அமைக்கும் அளவுக்குத் தலிபான்கள் வளர்ந்துவிட்ட பிறகுதான் நிலைமையின் தீவிரத்தை அமெரிக்கா உணரத் தொடங்கியுள்ளது.
தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காகவே அமெரிக்காவிடம் இருந்து ஏராளமான நிதி மற்றும் ஆயுதங்களைப் பெற்று வரும் பாகிஸ்தான் இதுவரை உண்மையான நடவடிக்கை எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை.
ஆனால், இப்போது பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வெறும் பேச்சோடு நிறுத்தாமல் உண்மையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதார வீழ்ச்சி, அடிப்படைவாதக் குழுக்களின் வளர்ச்சி என மோசமான பின்னடைவைச் சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு அதுதான் நல்லது. பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, உலகுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.