""கிராமப்புற குடிசைகளில் இரவில் ஒளிரும் சிம்னி விளக்கை நோக்கி ஏராளமான விட்டில் பூச்சிகள் பறந்துவரும். வேகமாக வரும் அவை விளக்கில் எரியும் நெருப்பைச் சுற்றிச் சுற்றி வந்து ஒருகட்டத்தில் திரியின் சுடரில் மோதி கருகி உயிரிழக்கும்''.
இதைப் பார்க்கும்போது, "ஏன்தான் இப்படி, இந்தப் பூச்சிகள் உயிரை மாய்க்கின்றனவோ?' என கேட்கத் தோன்றும்.
சரி!...ஐந்தறிவுள்ள அந்தப் பூச்சிகள்தான் அறியாமையால் இப்படி அநியாயமாக உயிரைவிடுகின்றன என்றால், ஆறறிவு படைத்த மனிதர்களும் அல்லவா சமீபகாலமாக விட்டில் பூச்சிகளைப் போல நடந்துகொள்கின்றனர்.
ஆமாம்! "ஏமாறாதே..ஏமாறாதே..' என எத்தனை முறை கூறினாலும், "செவிடர் காதில் ஊதிய சங்கொலி' போலவே அவை பயனற்றுப் போகின்றன.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிதிநிறுவனங்கள் திடீர் திடீரென மூடப்படுவதும், அதில் முதலீடு செய்தவர்கள் வீதியில் நின்று புலம்புவதும் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன.
தனியாரிடம் முதலீடு செய்துவிட்டு பின்னர் அதை இழந்து புலம்புவது படிக்காத பாமரர்களோ அல்லது நாட்டு நடப்பை அறிய முடியாத பட்டிக்காட்டு ஜனங்களோ அல்ல!
மெத்தப் படித்து "மேதாவி' எனப் பெயரெடுத்து உலகச் செய்திகளை அன்றாடம் அறிந்து அதை விமரிசிப்பதற்கு உரிய அனைத்து வசதிகளையும் பெற்ற மாநகரங்களின் நவநாகரிக மனிதர்கள்தான்!
உழைத்துப் பெறும் ஊதியத்தில் ஒரு பகுதியைச் சேமிக்க நினைப்போருக்கு அரசு வங்கிகள், அரசு சார்ந்த கூட்டுறவு அமைப்புகள், தபால் நிலையங்கள் எனப் பல்வேறு வசதிகள் இருக்கின்றன.
இங்கு நியாயமான முறையில் வட்டித் தொகை அளிக்கப்படுகிறது.
ஆனாலும், இவற்றில் தங்களது பணத்தைச் சேமிக்க, பெரும்பாலானோர் முன்வருவதில்லை. குறிப்பாக அரசு ஊழியர்களில் அதிகம்பேர் தங்களது ஊதியத்தைப் பெறுவதற்காக மட்டுமே, அரசு வங்கிகளில் கணக்கு வைத்துக் கொண்டுள்ளனர் என்கிறது ஓர் அதிர்ச்சித் தகவல்.
"ஆசையே அனைத்துத் துன்பத்துக்கும் காரணம்' என புத்தர்பிரான் கூறினார். தனியார் நிதி நிறுவனத்தை அணுகுவோருக்கு அப்படிப்பட்ட சாதாரண ஆசை இருந்தால் கூடப் பரவாயில்லை.
அவர்களுக்கு ஏற்படுவதோ.. பேராசை! சிறிய தூண்டிலில் மண்புழுவை வைத்து, பெரிய திமிங்கிலத்தைப் பிடித்துவிடத் துடிக்கும் பெரிய்ய.. பேராசை!
இப்படி ஆசைப்படுவோருக்கு, அரசு வங்கி மற்றும் நியாயமான நிறுவனங்களில் முதலீடு செய்ய மனம் வருமா? அதிக வட்டி! அளப்பரிய சலுகைகள்! என பொய்கூறும் தனியாரை நோக்கித்தானே அவர்களது மனம் செல்லும்.
பேராசைப்பட்டு தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்வோர் தன்னோடு மட்டும் நிற்பதில்லை. நிறுவனத்தார் தருவதாகக் கூறும் "கமிஷனுக்கு' ஆசைப்பட்டு, தனக்குப் பழக்கமானவர், நெருக்கமானவர் எனப் பலரையும் பணம்போடவைத்து அவர்களையும் ஏமாற வைக்கின்றனர்.
வளர்ந்துவிட்ட நுகர்வோர் கலாசாரத்தில் மனதைப் பறிகொடுத்து, ஆடம்பரமாக வாழ ஆசைப்படுவதாலே, குறுக்குவழியில் பணத்தைப் பல மடங்கு பெருக்க நினைப்பவர்களே "ஏமாற்றம்' என்கிற படுகுழியில் விழுகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த 1997-ம் ஆண்டில் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வோருக்கான பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதன்பின் நிதிநிறுவன மோசடி குறித்து இதுவரை சுமார் 150 -க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகப் போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவற்றில் குறிப்பிட்ட சில வழக்குகளில் மட்டுமே முதலீட்டாளர்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ. 1200 கோடிக்கும் மேலாக நிதிநிறுவன மோசடி நடந்துள்ளது.
சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் தனியார் நிதிநிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு கணக்கெடுப்புக் கூறுகிறது.
சட்டங்கள் இயற்றினாலும், தண்டனை அளித்தாலும் ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றும் கும்பல் இருக்கத்தான் செய்யும் என்பதுபோலவே நிதிநிறுவன மோசடிச் சம்பவங்கள் நீடித்துவருகின்றன.
மோசடியைச் சட்ட நடவடிக்கையால் மட்டுமே முடிவுக்குக் கொண்டுவர முடியாது. பொதுமக்களிடமும் விழிப்புணர்வு வேண்டும்.
இது சரிப்படுமா? இவை சாத்தியமாகுமா? என்பதை ஆராய்ந்து தங்களது பணத்தை சட்டப்பூர்வமாகச் செயல்படும் நிறுவனங்களில் சேமிக்க மக்கள் முன்வர வேண்டும்.
அரசின் அங்கமாகச் செயல்படும் காவல்துறையும் புகார்கள் வந்தால் மட்டுமே நடவடிக்கை என்றில்லாமல், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் செயல்படும் நிதிநிறுவனங்களை ஆரம்பகட்டத்திலேயே விசாரித்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
ஆனால், நடைமுறையில் இதுபோன்ற மோசடி நிறுவனங்களில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பின்புலமாகவோ, அல்லது ஏமாறுவோரில் ஒரு பகுதியினராகவோ இருப்பதுதான் காலத்தின் கோலம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.