தமிழர் கலாசாரத்தை உலகுக்கு எடுத்துக் கூறும் வகையில், நம்மிடம் எஞ்சியிருக்கும் சாட்சியாக இந்துக் கோயில்கள் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் கலாசாரத்தையும், வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும்விதமாக இந்தக் கோயில்களில் சிற்பங்கள், ஓவியங்கள், கோபுரங்கள் இருக்கின்றன.
இதன் விளைவாகத்தான் இந்துக் கோயில்களை அரசே தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நிர்வகித்து வருகிறது. மாநிலத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் சுமார் 38,396 கோயில்கள் உள்ளன. இதில் பெரும்பாலான கோயில்கள் கிராமப்புறங்களில் உள்ளன. இதைத் தவிர்த்து முதல்நிலை கோயில்களாக 65 கோயில்களும், பக்தர்கள் அதிகமாக வரும் 150 கோயில்களும் உள்ளன.
இக் கோயில்களுக்கு அரசு எந்தவித முதலீடும் செய்யாமல், ஆண்டுக்கு சுமார் | 800 கோடி வருவாயைப் பெறுகிறது. ஆனால், அண்மைக்காலமாக இந்துக் கோயில்களை அரசு அலட்சியப்போக்குடனே நடத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தக் கோயில்களின் பெயரில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள், கட்டடங்கள் உள்ளன. மேலும், கோயிலில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மன்னர்களாலும்,செல்வந்தர்களாலும் உபயமாகக் கொடுக்கப்பட்ட விலை மதிப்பற்ற தங்கம், வைரம், வைடூரிய நகைகள் உள்ளன. இவற்றைப் பாதுகாப்பதற்கு அரசு தெளிவான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்றே கூறலாம்.
இதன் காரணமாக நிலம், கட்டடங்கள் போன்ற சொத்துகள் கொஞ்சம், கொஞ்சமாகத் தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவ்வப்போது ஏதாவது ஒரு புதிய உத்தரவு இடுவதன் மூலம் அத்துறை தனது பணியில் திருப்திப்பட்டுக் கொள்கிறது.
இதற்கிடையே கோயிலின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்கே உலை வகைக்கும் விதத்திலும், தனியார்மயமாக்கும் விதத்திலும் இந்து சமய அறநிலையத் துறை கோயில்களின் பாதுகாப்பையும், பராமரிப்பையும் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் பாதுகாப்பும், பராமரிப்பும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பழனி முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்ட முக்கியமான கோயில்களின் பாதுகாப்பும், பராமரிப்பும் தனியாரிடம் சென்று பல மாதங்களாகி விட்டன. அரசின் இந்த நடவடிக்கையால் கோயில்களின் பாதுகாப்பும், அங்கு இருக்கும் நகைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
ஏற்கெனவே கோயில்களின் சொத்து பல வகைகளில் ஆக்கிரமிப்புக்காரர்களால் பறிக்கப்பட்டு வரும் நிலையில், கோயிலில் இருக்கும் விலைமதிப்பற்ற நகைகளின் பாதுகாப்புக்கும் அரசே குந்தகத்தை ஏற்படுத்துவதாக இந் நடவடிக்கைகள் அமையும்.
கோயில் ஊழியர் ஒருவர் தவறு செய்தாலோ, கவனக்குறைவாகச் செயல்பட்டாலோ அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் ஊழியர் தவறு செய்தால், அவர் மீது குறைந்தபட்ச நடவடிக்கைகூட எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், பல்வேறு பிரச்னைகள் இப்போதே கோயில்களில் ஏற்படத் தொடங்கிவிட்டன. காலப்போக்கில் இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பாதுகாப்பைத் தனியார் மயமாக்கியதன் மூலம், அரசே தன்னிடம் இருந்த முழுக் கட்டுப்பாட்டையும் தனியாரிடம் விட்டுக் கொடுத்துள்ளது எனலாம்.
கோயில்களின் செலவைக் குறைப்பதற்காக, தனியாரிடம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை ஒப்படைத்து வருவதாக மிகவும் கரிசனத்தோடு கூறிக் கொள்ளும் இந்து சமய அறநிலையத் துறைக்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஒரு கோயில் ஊழியருக்கு, தனியார் நிறுவனத்தின் ஊழியரைவிட குறைவான ஊதியமே பல கோயில்களில் வழங்கப்படுவது தெரியாமல் இல்லை.
இருப்பினும் கோயில்களைத் தனியார்மயமாக்குவதில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இவ்வளவு அக்கறையும் ஆர்வமும் ஏன் காட்டுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த கதைதான். சில உயர் அதிகாரிகளும், சில அரசியல்வாதிகளும் கிடைக்கும் பல பயன்களால் இவ்வாறு பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைத்து வருவதாகக் கோயில் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தத் தனியார்மயம், இதோடு நின்றுவிடப் போவதில்லை. தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட கோயில்களின் பாதுகாப்பும், பராமரிப்பும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில், கோயில்களின் இதர பணிகளையும் ஒப்படைக்கும் திட்டம் இந்து சமய அறநிலையத் துறையிடம் இருக்கிறதாம்.
இதில் நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சிறப்பு என்பதன் அளவீடு, அவர்கள் எதை நிர்ணயித்துள்ளார்கள் என்பது சிதம்பர ரகசியம். அரசின் இந்த நடவடிக்கையால், காலப்போக்கில் கோயில்களின் அனைத்துப் பிரிவுகளும் தனியாரிடம் செல்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
கோயில்கள் பக்தர்கள் வழிபாட்டுக்காக வந்து செல்லும் இடம் மட்டுமல்ல, நமது கலாசாரம், தொன்மை ஆகியவற்றை எடுத்துக் கூறும் வகையில் இருப்பவை என்பதை ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் உணர்ந்து கொள்ளாதவரை, தனியார்மயத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது கஷ்டம்.
கோயில்களில் இன்று நாம் பார்க்கும் அழகிய சிற்பங்களையும், ஓவியங்களையும் நமது சந்ததியும் பார்க்க வேண்டும் என அனைவரும் நினைத்தால் மட்டுமே, கோயில்களைப் பாதுகாக்கத் தெளிவான நடவடிக்கையை எடுக்க அரசைத் தூண்ட முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.