கட்டுரைகள்

கடையில் கிடைக்குமா நியாயம்?

தரமான பொருள்கள் வேண்டுமானால் உரிய விலை கொடுத்தாக வேண்டும். இது  நியதி. சந்தையில் மலிவாகக் கிடைக்கும் எந்தப் பொருளும் தரமாக இருக்கும் என உறுதியாகக் கூற இயலாது.  இந்தக் கருத்தை ரேஷன் பொருள்களுக்கும் ஒப்

எஸ். நாராயணன்

தரமான பொருள்கள் வேண்டுமானால் உரிய விலை கொடுத்தாக வேண்டும். இது  நியதி. சந்தையில் மலிவாகக் கிடைக்கும் எந்தப் பொருளும் தரமாக இருக்கும் என உறுதியாகக் கூற இயலாது.

 இந்தக் கருத்தை ரேஷன் பொருள்களுக்கும் ஒப்பிடலாம். ஏனென்றால், பொதுமக்களுக்குத்  தரமான அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில்தான், அரசால் நியாயவிலைக் கடைகள் செயல்படுத்தப்படுகின்றன. இங்கு பொதுமக்களுக்குச் சலுகை விலையில், மேற்படி பொருள்கள் வழங்கப்பட்டாலும், அதற்கான இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில், அரசு மானியம் வழங்கி வருகிறது.  2009}2010-ம் நிதியாண்டில் ரேஷன்  பொருள்களுக்கு மானியமாக அரசு ரூ. 3,750 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

 அப்படியானால் நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் பொருள்கள் தரமாக இருப்பதுதானே நியாயம். ஆனால், நியாயவிலைக் கடைப் பொருள்கள் என்றாலே தரமற்றதாக இருப்பதுதான் சோகம்.

 உதாரணமாக, கிலோ ரூ. 1-க்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை வேகவைக்க ரூ. 10  மதிப்புள்ள எரிபொருளைச் செலவழிக்க வேண்டியுள்ளது. அரிசியின் தரம் அப்படி.

 உரிய விலை கொடுத்து வெளிமார்க்கெட்டில் வாங்கப்படும் "பிராண்டட்' ரவை ருசியாகவும், தரமானதாகவும் உப்புமா தயாரிக்க ஏதுவாகவும் உள்ளது. ஆனால்,  நியாயவிலைக் கடையில் விநியோகிக்கப்படும் அதே "பிராண்டட்' ரவையில் தயாராகும்  உப்புமா தரமற்ற, ருசியற்ற களி போன்ற புதிய வகை பதார்த்தமாக வருவதற்கான  காரணம் என்ன? இத்தனைக்கும் அந்த ரவை பாக்கெட்டுகள் காலாவதி ஆகாதவைதான். கோதுமை மாவின் நிலையும் இதேதான்.

 ரவை, கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும்  நிறுவனம் லாபநோக்கில், நியாயவிலைக் கடைகளுக்கு மட்டும் இவ்வாறு தரம் குறைந்த பொருள்களை விநியோகிக்கிறதா அல்லது ஏதேனும் "புரிந்துணர்வு' ஒப்பந்தத்துடன் இவ்வாறு நடைபெறுகிறதா என்பது புரியவில்லை.

 ரூ.25-க்கு நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டுவரும் மளிகைப் பொருள்களும் வாங்க ஆளில்லா நிலையில் தேங்கியுள்ளன. ஆர்வத்துடன் முதலில் வாங்கியவர்கள் அதன் தரத்தைப் பார்த்து வாங்குவதைத் தவிர்த்து வருவதே காரணம்.

 பொருள்களின் நிலைதான் அப்படி என்றால், நியாயவிலைக் கடைகளில் பொருள்களை விநியோகம் செய்யும் முறையும் வரைமுறையின்றி உள்ளது.

 கோதுமையின் ஒதுக்கீடு முழுமையாக ரேஷன் அட்டைதாரர்களைச் சென்றடைவதில்லை. கோதுமை விநியோகிக்கப்படும் தினமும் தெரிவதில்லை. அப்படியே அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் வாங்கியதை அறிந்து நியாயவிலைக் கடைகளுக்குச் சென்றால் தீர்ந்துவிட்டது என்ற பதிலே கிடைக்கிறது.

 ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் உள்ள அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு  ஏற்பத்தான் பொருள்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அப்படியும் அரிசி, சீனி,  கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு கூறியதுபோல, இங்கும் "முதலில்  வருபவர்களுக்கே முன்னுரிமையோ' என்னவோ!

 ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் ஒதுக்கீட்டுக்குரிய பொருள்களை மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை எப்போது வருமோ?

 இது ஒருபுறம்இருக்க, வாங்கும் பொருள்களாவது எடை குறைவின்றி இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பாக்கெட்டுகளில் விநியோகம் செய்யப்படும் பொருள்களைத் தவிர, நியாயவிலைக் கடைகளில் அளந்து தரப்படும் சீனி, அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவற்றில் 10 முதல் 15 சதவீதம்வரை அளவு குறைவாக இருப்பது கண்கூடு.

 ஆனால், ரேஷன் ஊழியர்கள் மறைமுகமாக ஒரு நன்மையை(?) அட்டைதாரர்களுக்குச் செய்து வருகின்றனர். ஒருவர் பணிநிமித்தமாக வெளியூருக்குச் சென்று, ஓராண்டு கடந்த நிலையில் திரும்பி வந்தாலும் அவரது ரேஷன் அட்டை ரத்தாகி இருக்காது. ஓராண்டு  முழுவதும் அவரது கணக்கில் அனைத்துப் பொருள்களும் வாங்கியதாகப் பதிவாகியிருக்கும். இது ஒரு வகையில் நன்மைதானே!

 தரமான பொருள்கள் குறைந்த விலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில்தான் ரேஷன் பொருள்களுக்கு மானியமாக ரூ.3,750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 ஒதுக்கீடு செய்துள்ள இந்தப் பெரும்தொகை நியாயமான முறையில் செலவழிக்கப்படுகிறதா என்பதை அரசு தொடர்ந்து கண்காணிக்காமல் தரமற்ற பொருள்களை பொதுமக்கள் மீது சுமத்துவது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT