கட்டுரைகள்

பாதை மாறுகிறது பாவையர் பயணம்...

நம்நாட்டைத் தாய்த் திருநாடு என்றும், மொழியைத் தாய்மொழி எனவும் கூறி பெண்மையைப் போற்றுகிற பூமி நமது பாரதபூமி.  பெண் விடுதலையை வலியுறுத்திய பாரதியும், "பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்' பாரினில் பெண்

ஜெயப்பாண்டி

நம்நாட்டைத் தாய்த் திருநாடு என்றும், மொழியைத் தாய்மொழி எனவும் கூறி பெண்மையைப் போற்றுகிற பூமி நமது பாரதபூமி.

 பெண் விடுதலையை வலியுறுத்திய பாரதியும், "பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்' பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' எனப் பெண் உரிமையை வலியுறுத்தியுள்ளார். அவரது சிஷ்யரான பாரதிதாசனோ, "ஒரு பெண் கல்வி கற்றால், அவளது குடும்பமே கல்வி பெற்றதற்குச் சமம்' எஎன பெண்ணின் முக்கியத்துவத்தைப் போற்றியுள்ளார். அதன்படியே இன்று கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளனர்.

அதேசமயத்தில், அவர்கள் தங்களது தனிப்பெருமையை இழந்து வருகிறார்களோ? என்ற கேள்விக்குறி எழும்வகையிலான சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதையும் மறுக்க முடியாது. பெரும்பாலான குற்றச் சம்பவங்களில் பெண்களது பெயர் இடம்பெற்று செய்திகள் வெளியாவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2006-ல் வரதட்சினை பிரச்னை காரணமாக 187 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அதுவே 2008-ல் 207-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு பெண்கள் பாதிப்புக்கு உள்ளான வழக்குகள் அனைத்திலும் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பதை காவல்துறையின் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அதேபோல, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் கள்ளக்காதல் பிரச்னை, கணவரையே கொன்ற வழக்கு, குழந்தைகள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 20}க்கும் மேற்பட்ட பெண்கள் கைதாகியிருப்பதையும் காண முடிகிறது.

இந்தியாவின் "கலாசார தொட்டிலாக'க் கருதப்படும் தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டது, விபசாரம், கொள்ளை சம்பவங்கள் என சமூகச் சீர்கேடான செயல்களில் ஈடுபட்டதாக 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் போலீஸôர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு குற்றச் செயல்களுக்காக கைதாகி இருப்போரில் பெரும்பாலானோர் பட்டப்படிப்பு முடித்த, ஓரளவு வசதியான குடும்பப் பின்னணி மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்களில் பலர், ஆண்களுக்கு நிகராகப் பணியில், திறமையைக் காட்டுவதைவிட ஆண்களைவிட அதிகம் லஞ்சம் வாங்கி கைதாகும் சம்பவங்களே அதிகமாக வெளிவருகின்றன.

இதையெல்லாம் பார்க்கும்போது நமது "நாகரிக கலாசாரத்தின் அச்சாணி'யாகத் திகழவேண்டிய பெண்கள் பாதை மாறிப் பயணிக்கிறார்களோ? என்ற அச்சமே மேலிடுகிறது.

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவன், நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே' என்கிற தமிழ்த் திரைப்படப்பாடல் தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இதையே நமது முன்னோரும் "தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை' என பழமொழியாகக் கூறியுள்ளனர். ஆனால், இப்போது நடைபெறும் சம்பவங்களைப் பார்த்தால் இந்தப் பொன்மொழிகள் பொய்த்துப்போகுமோ என்கிற ஆதங்கமே எழுகிறது.

மேலைநாட்டுக் கலாசாரத் தாக்கத்தால் நமது நாட்டுப் பெண்களும் சுதந்திரம், சுயஉரிமை என குரல் கொடுக்கிற நேரத்தில் நடை, உடை, பாவனைகளிலும் மேலை நாட்டைப் பின்பற்றுவது, எந்த வகையில் நமது மண்ணுக்கும், மாண்புக்கும் பொருந்தும் என்பதையும் அவர்கள் சிந்திக்க வேண்டும்.

தில்லி, சென்னை என வளர்ந்துவிட்ட நகரங்களில் ஆண்களைப்போல உடையோடும், கையில் சிகரெட்டுடன் உள்ள பெண்களைக் காணுவதுகூட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரிதாக இருந்தது. ஆனால், இப்போது மதுரை உள்ளிட்ட வளர்ந்து வரும் நகரங்களில்கூட பள்ளி, கல்லூரி மாணவியர் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதை அதிகம் காண முடிகிறது.

அந்த அளவுக்கு மேலை நாகரிகத்தில் நமது படித்த பெண்கள் மூழ்கிப் போவது எதிர்காலச் சமூகத்துக்கு நல்லதல்ல என்பதே சமூக ஆர்வலர்களது கருத்து.

நவநாகரிக மோகத்தில் விழுந்த பெண்களுக்காகவே பகல் நேரத்திலும், இரவுபோன்ற சூழலில் நடைபெறும் நட்சத்திர விடுதிகளும் இப்போது அனைத்து நகர்களிலும் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற விடுதிக்கு அதிகமாக வந்துபோவது பள்ளிச் சிறுமியர்கள் என்பதும் காவல்துறையினரின் கவலையாகும். இத்தகைய கலாசாரச் சீரழிவைக் கண்டிக்க வேண்டிய பெற்றோர்களோ, புதுமை விரும்பிகளாக தமது பிள்ளைகளைப் பார்த்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்துவது, இளைய சமுதாயம் பாதை மாறிப் பயணிக்க ஏதுவாகிறது என்கிற கருத்தையும் ஒதுக்கிவிட முடியாது.

புதுமை என்கிற பெயரில் பெண்கள் சிலரது கவிதை, இலக்கிய வார்த்தைகளை காதுகொடுத்துக் கேட்கக்கூட முடியவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.

"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என சூளுரைத்தார் பாரதி. ஆனால், மாதரே இன்று மாதர்தம் மாண்புகளை இழந்து இழிநிலைக்குச்  செல்லும் போக்கு நடக்கிறதே இதைத் தடுத்திட வேண்டாமா?

மாற்றம் என்பது மானிடத் தத்துவம், அதை ஏற்பதில் தவறல்ல. ஆனால், அந்த மாற்றம் வளர்ச்சிக்குரிய நல்ல மாற்றமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அந்த நல்ல சமூக மாற்றத்தை உருவாக்கும் சக்திகளாகத் திகழ வேண்டிய பெண்களே, விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் மாற்றத்துக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது எந்தவிதத்தில் நியாயமாகும்?

படித்த பெண்கள் குறிப்பாக பெண்ணுரிமை பேசுவோர் மரபுகளையும், சமூகக்  கட்டுப்பாடுகளையும் மீறுகிறோம் என்கிற பெயரில் நாகரிகத்தை மறந்து மனக்கட்டுப்பாட்டை இழந்து செயல்படும் போக்கால்தான் பெண்கள் இன்று பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்.

நாட்டின் கண்களாக மதிக்கப்படுகின்ற பெண்கள் நல்ல எதிர்கால வழியைத் தங்களது சந்ததிக்குக் காட்ட வேண்டும் எனில் முதலில் தாங்கள் நல்ல வழியில் நடக்கவேண்டியதும் அவசியம். இதை அனைத்துப் பெண்களும் உணர்ந்து செயல்படுவது அவர்களுக்கு மட்டுமல்ல, எதிர்கால இந்தியத் தலைமுறைக்கும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT