கட்டுரைகள்

இந்தியாவின் எதிர்காலம் யார் கையில்?

இந்தியா மனிதவளம் மிகுந்த தேசம்; அதிலும் இளைஞர்கள் நிறைந்த நாடு என்று பெருமையாகக் கூறலாம். நாட்டின் மக்கள்தொகையில் 54 கோடிப்பேர் இளைஞர்கள் என்றும், அதாவது 51 விழுக்காட்டினர் என்றும் புள்ளிவிவரங்கள் கூற

உதயை மு. வீரையன்

இந்தியா மனிதவளம் மிகுந்த தேசம்; அதிலும் இளைஞர்கள் நிறைந்த நாடு என்று பெருமையாகக் கூறலாம். நாட்டின் மக்கள்தொகையில் 54 கோடிப்பேர் இளைஞர்கள் என்றும், அதாவது 51 விழுக்காட்டினர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த இளைஞர்களின் ஆற்றலை நாடு முறையாகப் பயன்படுத்திக் கொண்டதா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது.

 நமது தேசம் இனி "வளரும் நாடு' என்ற பட்டியலில் இருந்து விடுபட்டு வளர்ந்த நாடாகி விடும் என்றும், 2020-ல் வல்லரசாக மாறிவிடும் என்றும் பேசுகிறார்கள்; மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்தக் கனவு நனவாக வேண்டுமானால், இந்த நம்பிக்கை நிறைவேற வேண்டுமானால் அதற்குச் சரிபாதியாக இருக்கும் இளைஞர்களிடம் அந்த எண்ணம் உருவாக வேண்டாமா?

பெரியவர்கள் கனவு காணலாம்; கனவு காணும்படி கூறலாம்; அவர்களுக்குக் கடமையும் இருக்கிறது; உரிமையும் இருக்கிறது. ஆனால் செய்து முடிக்க வேண்டியவர்கள் இளைஞர்கள்தாமே! அவர்களைப் புறக்கணித்து விட்டு எதுவும் நடைபெறாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

அன்று நடந்த இந்திய விடுதலைப் போராட்டமா? இந்தி எதிர்ப்புப் போராட்டமா? இன்று நடக்கும் தெலங்கானா பிரிவினைக் கிளர்ச்சியா? ஒன்றுபட்ட ஆந்திரம் ஆர்ப்பாட்டமா? எல்லாமே இளைஞர்களின் எழுச்சியில்தான் நடந்தது; நடக்கிறது; நடக்கும்; போராட்ட வரலாறுகள் இப்படித்தான் கூறுகின்றன. காந்தியடிகள் முதல் காமராஜர், அண்ணா, கருணாநிதி வரை எல்லோருமே இளமையிலேயே பொதுப்பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தாம்.

சாதனையாளர்களின் சரித்திரமெல்லாம் இப்படித்தான் இருக்கிறது. இக்கால இலக்கியத்தின் தலைமகன் பாரதி 39 வயதுக்குள் அவன் செய்தது நூறாண்டு சாதனை;  கணிதமேதை இராமானுஜம் 33 ஆண்டுகள்; புரட்சியாளர் பகத்சிங் 24 ஆண்டுகள்; 29 ஆண்டுகளே வாழ்ந்த பட்டுக்கோட்டையார் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருந்த ஆஸ்கார் பரிசை வென்றவர் இசைமேதை ஏ.ஆர். ரஹ்மான்.

இந்தியாவின் புகழை உலக அரங்குக்குக் கொண்டு சென்ற இளைஞர் விவேகானந்தருக்கு அப்போது 30 வயது. 39 ஆண்டுகளே வாழ்ந்த அந்த மாமனிதரின் பிறந்த நாளே இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

""இத்தகைய வீர இளைஞர்கள் நூறுபேர் முன்வரட்டும்; இவ்வுலகத்தையே தலைகீழாக மாற்றி விடலாம். இப்படிப்பட்டவர்களின் மனோசக்தி, பிரபஞ்சத்திலுள்ள வேறு எதையும் விட வலிமை படைத்ததாகும். இவர்களின் மனோசக்திக்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது; பணிய வேண்டியதுதான்...''

1897-ம் ஆண்டு விவேகானந்தர் தாயகம் திரும்பினார். சென்னையிலும், கோல்கத்தாவிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பேசிய பேச்சுகள் இந்தியாவையே எழுந்து நிற்க வைத்தது; இளைஞர்களை எழுச்சி கொள்ள வைத்தது.

அவர்களின் சக்தி அவர்களுக்கே தெரியாதது; அளவிட முடியாதது; அந்தக் காட்டாற்றைக் கரைகட்டித் திருப்ப வேண்டும்; அணைகட்டித் தேக்க வேண்டும்; ஒரு வெடிகுண்டை குழந்தையும் வைத்து விளையாடலாம்; அது வெடித்தால் வரும் சக்தி அந்தக் குழந்தையின் உடலையும், உயிரையும் சிதைத்துவிடும்; ஊரையும், உலகத்தையும் அழித்துவிடும்; அதனை ஆக்க சக்தியாக மாற்றினால் ஊரும் உயரும்; உலகமும் வணங்கும்.

 ""பொருளாதார நிலையிலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் ஒரு நாடு முன்னேற்றம் அடைவதன் மூலம்தான் அந்த நாட்டை வளர்ந்த நாடு என்று கூறுகிறோம். இந்தியாவை வளர்ந்த நாடாக உயர்த்துவது இளைஞர்களாகிய உங்கள் கைகளில்தான் உள்ளது...'' என்று அறிவியல் மேதை அப்துல் கலாம் சிறார் அறிவியல் மாநாட்டில் பேசியுள்ளார்.

ஆனால் இன்று இந்தியாவின் எல்லாத் துறைகளிலும் இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்வித்துறை, தொழில்துறை, ஊடகத்துறை, அரசியல்துறை என எங்கும் இதுதான் நிலை. பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே இந்தக் கதவுகள் தானாகத் திறந்து மூடும் தன்மைகொண்டதாக இருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கில் படிப்பை முடித்து வெளியேறும் இளைஞர்களில் வேலைவாய்ப்பைப் பெறுபவர் மிகக் குறைவே; இந்தப் பத்து விழுக்காட்டினரும் ஆள்பலம், பணபலம், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியே இந்த இடங்களைக் கைப்பற்றுகின்றனர். மற்றவர்கள் 90 விழுக்காட்டினர் தங்கள் காலத்தை வேலை தேடியே கழித்து விடுகின்றனர்.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 60 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர்களைப் பதிவு செய்துவிட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களும் ஒருநாள் நம்பிக்கையிழந்து, சோர்வடைந்து வேலை தேடும் வேலையையும் விட்டு விடுகின்றனர்.

"படித்த அனைவருக்கும் வேலை தருவது அரசாங்கத்தின் பொறுப்பல்ல' என்று அமைச்சர்களும், அதிகாரிகளும் அமைதியாக உபதேசம் செய்கின்றனர். அப்படியானால்  

அரசாங்கத்தின் பொறுப்புதான் என்ன?

தமிழக அரசுத் துறைகளில் இப்போது காலியாக உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை வேலை தேடிக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அளிக்காமல் காலதாமதம் செய்யப்படுகிறது. அத்துடன் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமிக்கும் அரசாணை ஏன் என்று இளைஞர்கள் கேட்பது நியாயம்தானே!

இந்த நாட்டின் "உயர்கல்வி' என்பது அயல்நாடுகளுக்கு இளைஞர்களைத் தயார் செய்து கொடுக்கும் தொழிற்சாலைகளாகவே இருக்கின்றன. இந்திய ஏழை மக்களின் பணத்தில் படித்துப் பட்டம் பெற்று, இவர்கள் மேலைநாட்டுக் கம்பெனிகளுக்குச் சேவை செய்ய அனுப்பப்படுகின்றனர். இவர்களிடம் தேசப்பற்றை எதிர்பார்க்க முடியுமா? குடும்பப் பற்றும் குறைந்துவிட்டது. இந்த இளைஞர்கள் உல்லாச புரியில் உலாவர, பெற்று வளர்த்துப் படிக்க வைத்தவர்கள், முதியோர் இல்லங்களில் பரிதாபமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைத்தான் பிரதமர் மன்மோகன் சிங் தாயகத்துக்குப் பணியாற்ற அழைக்கிறார்: ""இந்தியாவில் மிக மெதுவாக நடைபெறும் அரசு நடவடிக்கைகளும், அரசியல்வாதிகளின் குறுக்கீடுகளும் இந்திய விஞ்ஞானிகளுக்கு பெரிய பிரச்னையாக உள்ளது என்று நோபல் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இத்தகைய குறைபாடுகள் இருப்பது துரதிருஷ்டவசமானது. அரசியல் தலையீடுகளும், அரசால் போதிய அங்கீகாரம் கிடைக்காததாலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் பாதிக்கப்படும் நிலை இனி இருக்காது...'' என்று 97-வது அறிவியல் மாநாட்டில் உறுதி கூறியுள்ளார்.

இது பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலம். இந்த உறுதிமொழிகள் பின்பற்றப்பட்டால் நாட்டுக்கு நல்லதுதான்; ஆனால் நடைமுறை இதற்கு எதிர்மாறாகவே இருக்கிறது. இதில் மாற்றம் ஏற்பட வேண்டும்; இந்தியா நிச்சயமாக மாற வேண்டும். அந்த மாற்றத்துக்கான நேரம் இதுதான்.

"மாற்றம்' மட்டுமே மாறாதது' என்பது தத்துவம். இளைஞர்கள் மாற்றத்துக்குத் தயார் நிலையில் இருப்பவர்கள்; அவர்களே மாற்றத்தை உருவாக்கும் துணிச்சல்காரர்கள். உலகத்தில் நடந்த புரட்சிகள் எல்லாம் இந்த மாற்றத்தின் விளைவுகளே! இதில் அவர்களை ஈடுபடுத்தாமல் அவர்களைக் குறை கூறிக்கொண்டேயிருப்பதில் பயன் என்ன? எதிர்மறை விளைவுகளே ஏற்படும்.

இன்றைய இளைஞர்கள் மக்கள் பிரச்னைகளில் ஆர்வம் காட்டவில்லை. முதியவர்கள் மட்டுமே பங்கு பெறுகின்றனர் என்பது ஆரோக்கியமான சமுதாயத்துக்கு அழகல்ல. இலக்கியம், சமுதாயம், அரசியல் மேடைகளில் அவர்கள் பார்வையாளர்களாகவும் இல்லாமல், பங்கேற்பாளர்களாகவும் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும்.

இளைய தலைமுறைக்கு வழிகாட்டக்கூடிய சான்றோர்கள் தொகை குறைந்துகொண்டே போகிறது; தன்னலத்தைத் துறந்த தூய தியாகிகளைக் காண முடிகிறதா? பட்டம், பதவி, படாடோபத்தின் முன்னே அவர்கள் காணாமல் போய்விட்டார்கள். இளைஞர்களைத் தட்டிக் கொடுத்து, தோழர்களாக ஏற்றுக்கொள்ளாமல் தலைமுறை இடைவெளி என்று கூறி ஒதுங்கும் அல்லது ஒதுக்கும் போக்கு மாற வேண்டும்.

இன்று நாட்டை ஆளுவது அரசியல். இந்த மக்களாட்சி நல்லவர்களாலும், வல்லவர்களாலும் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? அரசியல் முதியவர்களின் கூடாரமாகவே இருப்பதற்கும், ராகுல் காந்தி என்னும் ஒரே ஓர் இளைஞரை மட்டுமே தூக்கிப் பிடிப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை; மக்களாட்சியில் எல்லோருக்கும் சமவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டாமா?

""மக்களாட்சியில் மிக அதிக பலம் வாய்ந்தவருக்கு இருக்கும் அதே சந்தர்ப்பமே மிகவும் பலவீனமானவருக்கும் இருக்க வேண்டும். இதுவே மக்களாட்சியைப் பற்றி நான் கொள்ளும் கருத்து...'' என்றார் காந்தியடிகள். இது யார் செவியிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. அதனால் என்ன, மக்களாட்சித் தத்துவமே மாறிவிடுமா?

""நான் தோற்றுப் போகலாம், அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல. எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று தோற்றவர்கள் எத்தனையோ பேருண்டு. ஆனால் இறுதியில் எவரெஸ்ட் சிகரம் வெல்லப்பட்டது...'' சேகுவேராவின் இந்த வார்த்தைகளை இளைஞர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும்; ஏனென்றால் இந்தியாவின் எதிர்காலமே இவர்கள் கையில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT