கட்டுரைகள்

இனியாவது...

தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக ஆக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினர். கோவையில் உலகச் செம்மொழி மாநாடு நடைபெ

உதயை மு. வீரையன்

தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக ஆக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினர். கோவையில் உலகச் செம்மொழி மாநாடு நடைபெறும் சமயத்தில் இதை விரும்பாத தமிழக அரசு, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இதை எதிர்த்து சென்னை, கோவை, சேலம், புதுவை முதலிய ஊர்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளர்ச்சிகள் ஒரு முடிவுக்கு வந்தாலும் அதன் தாக்கம் தொடர்கிறது.

 இது வழக்கறிஞர்களின் கோரிக்கை மட்டுமல்ல, தமிழ் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையும்தான். மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாகவே இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக உயர் நீதிமன்றத்திலும் தமிழ் வழக்காடு மொழியாக ஆக வேண்டும் என்பது தமிழ் மக்களின் பலகால விருப்பம்.

 உயர் நீதிமன்றத்தில் தமிழ் அங்கீகாரம் பெற்ற வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழகச் சட்டப்பேரவையில்  கடந்த 2006 டிசம்பர் 6-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

 பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகத்தால்  நீதித்துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அதன்மீது மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரவேண்டும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆகியோருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

 இதனைத் தொடர்ந்து மத்திய சட்டத்துறை அமைச்சர், தமிழக அரசின் கருத்துரு மத்திய அரசின் சீரிய பரிசீலனையில்  உள்ளது என்று பதில் தெரிவித்துள்ளார். வீரப்ப மொய்லி தமிழகத்துக்கு வருகைதரும் போதெல்லாம் இதைத் திரும்பத்திரும்பக் கூறிவருகிறாரே தவிர செயல்பட்டதாகத் தெரியவில்லை.

 இறுதியாகக் கடந்த மே மாதம் மத்திய அரசின் நீதித்துறை எழுதிய கடிதத்தில் இந்தக் கருத்துரு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சிமொழித்துறையின் பரிசீலனை மற்றும் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று பதில் அளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தில்  தமிழ் வழக்காடு மொழியாக விளங்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ளும் என்று தமிழக அமைச்சர் துரைமுருகன் உறுதி கூறியுள்ளார்.

 தமிழக சட்ட அமைச்சர் கூறுவதுபோல தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பிவிட்டால் மட்டும் போதுமா? தமிழக சட்ட மேலவை அமைப்பதில் காட்டிய வேகத்தை இப்பிரச்னையில் அரசு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?

 "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்று கூறுகிறவர்கள் "எல்லா இடத்திலும் தமிழ் இருக்கிறதா?' என்று ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டும். கல்விக்கூடங்களில் தமிழ் பயிற்றுமொழியாக இருக்கிறதா? அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழியாக இருக்கிறதா? இசையரங்குகளில் பாடும் மொழியாக இருக்கிறதா? ஆலயங்களில் வழிபாட்டு மொழியாக இருக்கிறதா? "இல்லை' என்ற இந்த உண்மையைக் கூறினால் சிலருக்கு எரிச்சல் வருகிறதே ஏன்?

 1956-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஆட்சிமொழிச் சட்டத்தில் சென்னை மாநிலத்தின் ஆட்சிமொழி தமிழே என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 1957 ஜனவரி 19 அன்று அது ஆளுநரின் ஒப்புதலையும் பெற்றது. இந்த ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கூறுவதற்காக 1957-ல் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது; இதற்கு ஒரு சிறப்பு மேற்பார்வை அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.

÷நிர்வாகத் துறையில் விரைவாகத் தமிழைப் புகுத்துவதற்கு வேண்டிய யோசனைகளைக் கூறும்படி குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி 1958 ஜனவரியில் கையால் எழுதும் கடிதங்களைத் தமிழிலேயே எழுதும்படி சிறிய அரசு அலுவலகங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதில் கூட நீதித் தன்மை வாய்ந்த ஆணைகளும், மேல்முறையீட்டு ஆணைகளும் ஆங்கிலத்திலேயே எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதுவே தமிழ் ஆட்சிமொழி வரலாற்றில் முதல் சாதனை.

÷இந்த நிலையே இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் இப்போதும் நீடிக்கிறது; தமிழின் பெருமை பேசியே பதவிக்கு வந்தவர்கள் ஏறிவந்த ஏணியை மறக்கலாமா? தமிழ் இல்லாமல் தமிழர்கள் ஏது? தமிழ்நாடு ஏது? தமிழர் ஆட்சி ஏது?

÷1965 இந்தி எதிர்ப்பு என்னும் போர் முழக்கமே ஆட்சி மாற்றத்துக்கான அடிக்கல்லாக அமைந்தது. ஆனால் அதுவும் தமிழைப் புறக்கணித்துவிட்டு, ஆங்கிலத்துக்கே அரியணை தந்தது. ஆங்கில மோகம் பணம் - பதவி என்னும் எண்ணெய் ஊற்றி வளர்க்கப்பட்டது. அதுதான் நாடெங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளாக வளர்ந்து, மக்களுக்கு நிழல் தருவதற்குப் பதிலாக முள்ளாய் குத்துகின்றன.

÷இப்போது விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் மாநில மொழிகளில் மனுதாக்கல் செய்வதற்கும், வழக்காடுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும்தான் வழக்காட வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டம் 348-வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14-ல், "சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்' என்ற கொள்கைக்கு முரணாகவும், அதைப் புறக்கணிப்பதாகவும் இருக்கிறது.

÷உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வாதாடுவதற்கு அனுமதிக்கப்பட்டால், படிப்பறிவில்லாத மக்கள் தங்கள் வழக்கு விசாரணையின் முன்னேற்றம் பற்றி தெரிந்து கொண்டு செயல்பட வசதியாக இருக்கும்.

÷இதுபற்றி அகில இந்திய ஜூனியர் வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது. மாநில மொழிகளில் வழக்காடுவதற்கும், வழக்கறிஞர்களின் வசதிக்காக மொழிபெயர்ப்பு வசதியைச் செய்து தரவும் மத்திய அரசு ஆவன செய்ய ஆணையிட வேண்டும் என்று அதன் மனுவில் கூறியுள்ளது.

÷இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கோரி வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழில் வாதாடலாம்; அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இக்பால் தெரிவித்துள்ளார். எழுத்துப் பூர்வமாகவோ, சுற்றறிக்கையாகவோ தர முடியாது எனவும் மறுத்துள்ளனர். இதனை வழக்கறிஞர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

÷தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதும், 27.2.2007 அன்று மத்திய அரசு எழுதிய கடிதத்தில் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புகளை வழங்க வட்டார மொழிகளை அனுமதிப்பது ஏற்புடையதாக இருக்காது என்று கூறியிருந்தது.

÷இந்தியையோ அல்லது மற்ற மாநில அலுவல் மொழிகளையோ உயர்நீதிமன்ற வழக்கு மொழியாகப் பயன்படுத்த குடியரசுத் தலைவரின் அனுமதியுடன் ஆளுநரே அங்கீகரிக்கலாம் என்று இந்திய அரசியல் சட்டத்தின் 348(2)-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது.

÷இதேபோல் ஆங்கிலத்தைத் தவிர இந்தி அல்லது பிற மாநில அலுவல் மொழிகளில் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை வழங்க ஆளுநர் அங்கீகரிக்கலாம் என 1963-ம் ஆண்டின் அலுவல் மொழிகள் சட்டத்தின் 7-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய எதிர்க்கட்சிகளின் மனுவும் குடியரசுத் தலைவரிடம் தரப்பட்டுள்ளது.

÷உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தமிழையும், தமிழக முதல்வரையும் வானளாவப் புகழ்ந்துள்ளார். ""தமிழ் மொழி வரலாற்றின் தொன்மை இந்திய நாட்டுக்கே பெருமை'' என்றும் ""எனது இதயத்தில் தமிழ்நாட்டுக்குத் தனி இடம் வைத்துள்ளேன்'' என்றும் பேசியுள்ளார்.

÷எல்லாம் சரி, அப்படிப்பட்ட உயர் தனிச் செம்மொழியை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்க அனுமதிக்காமல் காலம் கடத்துவது ஏன்? இதில் மத்திய - மாநில அரசுகள் வெளிப்படையாக எதையும் பேசாமல் மெüனம் சாதிப்பதும் ஏன்? இதுதான் பொதுமக்களின் கேள்வியாகும்.

÷இந்தியா கல்லாமையும், இல்லாமையும் நிறைந்தது; பல மொழிகள் பேசும் பல மாநிலங்களைக் கொண்டது. இங்குள்ள பாமர மக்களுக்குப் புரியும்படி அவர்கள் தாய்மொழியில் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டாமா? இதுபற்றி மத்திய சட்ட அமைச்சர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. வெளிநாட்டுக்குச் சேவை செய்வதையே பெருமையாகக் கருதுகிறார்.

÷"வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியா வந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவது பற்றி இங்குள்ள வழக்கறிஞர்கள் அச்சம் அடையத் தேவையில்லை' என்று மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டுச்  சட்ட வல்லுநர்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. மிகப் பெரிய மாற்றத்துக்கு வாய்ப்பு வரும்போது நமது கதவுகளை மூடிக் கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

÷"அயல்நாடுகளுக்குக் கதவுகளைத் திறந்துவிட வேண்டும்; உள்நாட்டுக்குக் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்' என்பதுதான் மத்திய அரசின் புதிய வெளிநாட்டுக் கொள்கையோ? அப்படித்தான் தெரிகிறது.

÷""நமது சொந்தத் தாய்மொழிகளை விடுத்து, ஆங்கில மொழியின்மேல் நாம் கொண்டுள்ள மோகம், கல்வியறிவு பெற்ற அரசியல் மனப்பான்மை உடையவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஓர் ஆழமான பிளவை உண்டாக்கி விட்டது. இந்திய மொழிகள் வறுமையடைந்து விட்டன...'' என்று அண்ணல் காந்தியார் வருந்துகிறார்.

÷இங்கு மக்களும் வறுமையடைந்து விட்டனர்; அவர்கள் பேசும் மொழிகளும் வறுமையடைந்துவிட்டன. அதனால் என்ன? ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், சிற்சில செல்வந்தர்களும் வளமாக வாழ்ந்தால் போதாதா?

÷இப்போது உலகச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இம்மாநாட்டின் நிறைவாக உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மறுபடியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சிமொழியாக வருவதற்கு மத்திய அரசும், மாநில வழக்கறிஞர்களுமே தடையாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இனியாவது உயர் நீதிமன்ற வாசல்கள் திறக்கப்படுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

SCROLL FOR NEXT