முகப்பு
கட்டுரைகள்

இசை-மருந்தில்லா மருத்துவம்!

கடந்த வாரம் அலுவலகம் சென்றிருந்த உறவினர் ஒருவர் சொந்த விஷயமாக நேராக என் வீட்டுக்கு வந்தார். வரும்போதே அவரது முகம் இறுக்கமாக இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் வீட்டு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்.

கட்டுரைகள்

இசை-மருந்தில்லா மருத்துவம்!

கடந்த வாரம் அலுவலகம் சென்றிருந்த உறவினர் ஒருவர் சொந்த விஷயமாக நேராக என் வீட்டுக்கு வந்தார். வரும்போதே அவரது முகம் இறுக்கமாக இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் வீட்டு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்.

Updated On : 28 டிசம்பர், 2023 at 5:22 PM
பகிர்:

கடந்த வாரம் அலுவலகம் சென்றிருந்த உறவினர் ஒருவர் சொந்த விஷயமாக நேராக என் வீட்டுக்கு வந்தார். வரும்போதே அவரது முகம் இறுக்கமாக இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் வீட்டு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்.

 அப்போது, "நலந்தானா... உடலும் உள்ளமும் நலந்தானா' என்ற பாடல் ஒலிக்க மலர்ந்த முகத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தார். பாட்டு திடீரென தடைபடவே, ஏன் பாட்டை நிறுத்திட்டீங்க, போடுங்க பாடட்டும் என்றார். அது செல்பேசியின் "ரிங்டோன்' என்ற நான், என்னவாயிற்று என்று விசாரித்தேன்.

 மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றும் அவருக்கு ஒவ்வொரு மாதமும் இலக்கு நிர்ணயிக்கப்படும். சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக ஒவ்வொரு மாதமும் இலக்கை அடைந்து, வேலையைத் தக்கவைத்துக்கொள்வது மறுபிறவி எடுப்பதுபோல் உள்ளது. இதனால், பெரும்பாலான நேரங்களில் தூக்கம் வருவதில்லை என்ற அவர், இதுபோன்ற நேரங்களில் நல்ல பாடலையோ, இசையையோ கேட்கும் போது மனதுக்கு சுகமாக இருக்கிறது என்றார்.

 இது அவருக்கு மட்டுமே ஏற்பட்ட நிலை இல்லை. இன்று வாழ்க்கையை எதிர்கொள்ள வருமானத்தைத் தேடி வீட்டைவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவருக்கும் உள்ள நிலை.

 புதிய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக அன்னிய நிறுவனங்களின் படையெடுப்பு, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களின் பெருக்கம், மக்கள்தொகை அதிகரிப்பு போன்ற பல காரணங்களால் இந்த ஓட்டப்பந்தயத்தில் நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஓடியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதனால், மன அழுத்தம் என்ற புதிய நோயால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறோம்.

 இதிலிருந்து விடுபட மருத்துவம், யோகா உள்ளிட்ட பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன. ஆனால், இசை என்றொரு அமுதம் உள்ளது என்பதை மிகச் சிலரே தெரிந்து வைத்திருக்கின்றனர்.

 மன இறுக்கத்தைக் குறைத்து, குறைந்த நேரத்தில் மனிதனை இயல்புக்குக் கொண்டுவரும் சக்தி இசைக்கு மட்டுமே உண்டு. அது வாய்ப்பாட்டாகவோ, வாத்தியங்களில் இருந்து கிடைக்கும் இசையாகவோ இருக்கலாம். இசைக்கு எந்தச் சூழ்நிலையில் இருக்கும் மனதையும் புரட்டிப்போடும் சக்தி உண்டு.

 எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் அவர்களின் மன, உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சியும், விளையாட்டும் எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு இசையைக் கேட்பதும், கற்றுக்கொள்வதும் ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியம். அதனால்தான், முன்னோர்கள் தெருக்கூத்து, மேடை நாடகம், வயல்வெளி பாட்டு, ஒப்பாரி, கோடங்கி, வழிபாடு என வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் இசையை மையப்படுத்தினார்கள்.

 வாய்ப்பாட்டோடு, வாத்திய இசையையும் வளர்த்த கிராமங்கள் இன்று தொலைக்காட்சிப் பாடல்களுக்கு தலையாட்டிக் கொண்டிருக்கின்றன. கிராமங்கள் இயல்பில் இருந்து முற்றிலுமாக மாறி வருகின்றன.

 இவற்றையெல்லாம் மீட்டெடுக்க வேண்டிய அரசோ, நகரங்களில் சில இசைப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் வைத்து நடத்தி வருவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் கருதிக்கொள்கிறது.

 இசையின் அடிப்படை கிராமங்கள். இந்தக் கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்களிடம் இசையைச் சேர்க்க அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

 பொறியியல், மருத்துவத்துறைக் கல்வி இன்று கிராமப்புறங்களைச் சென்றடைந்துவிட்ட நிலையில், வாழ்வியலின் உயிரோட்டமாக உள்ள இசைக் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

 தமிழகத்தில் 17 மாவட்டத் தலைமை இடங்களில் மட்டுமே அரசு இசைப் பள்ளிகளும், 4 இடங்களில் மட்டும் அரசு இசைக் கல்லூரிகளும் உள்ளதாகத் தெரிகிறது.

 கலைப் பண்பாட்டுத் துறையின்கீழ் உள்ள இந்த இசைப் பள்ளிகள், கல்லூரிகளின் செயல்பாடுகள் வெகுஜனங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

 இதனால் இவை மக்கள் மத்தியில் பேசப்படுபவையாக இல்லாததோடு, அடித்தட்டு மக்களிடம் இசை ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இல்லை.

 புத்தகப்புழுவாக மாறிக்கொண்டிருக்கும் மாணவர்களையும், வேலைப்பளு காரணமாக சுயத்தை இழந்து வரும் இளைஞர்கள், நடுத்தர வயதினரையும் ஆற்றுப்படுத்த அரசு அனைத்து நிலையிலும் இசையை முன்னெடுத்துச்செல்ல வேண்டியது மிக அவசியம்.

 குறிப்பாக, வரும் தலைமுறையினரிடம் இசையைக் கொண்டு சேர்க்க, அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் இசையை ஒரு பாடமாகக் கற்றுக் கொடுப்பது அவசியமானதாகக் கருதப்படுகிறது. 6-ம் வகுப்புக்கு மேல் உள்ளவர்கள் தொடர்ந்து இசை பயில விரும்பினால், அதற்கு வசதியாக அனைத்து வட்டத் தலைமையிடங்களிலும் அரசு இசைப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும். அத்தோடு, இசையைத் தீவிரமாகப் பயில்வோரைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு மாவட்டத் தலைமையிடங்களிலும் அரசு இசைக் கல்லூரிகளைத் தொடங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பக்திச் சொற்பொழிவு, கதாகாலட்சேபம், மங்கள இசை, இசைக் கச்சேரி, பட்டிமன்றம், நாடகம் என்று இசை முழங்கிய நமது கோயில் விழாக்களில் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளே முக்கியமாக உள்ளன.

 நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்காக நம்மால் போற்றப்படும் பண்பாடும், கலையும் வெளிநாட்டினரை வசீகரித்தது என்பதே உண்மை.

 ஆனால், வெளிநாட்டினரை வசீகரிப்பதற்காக நம்முடைய அடையாளங்களாக மட்டுமே அவை இப்போது காப்பாற்றப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

 இல்லை என அரசு மெய்ப்பிக்க நினைத்தால், இசைக் கல்வியை கல்வித்துறையில் இணைத்து, இதற்கெனத் தனி இயக்கத்தைத் தொடங்க வேண்டும். அதோடு, இதைத் தொழில்கல்வியாக அங்கீகரித்து, அதிக நிதி ஒதுக்கி பட்டிதொட்டியெங்கும் பரவ வழிவகை செய்ய வேண்டும். இசை பொருள் செலவில்லா மருத்துவம் மட்டுமல்ல... மருந்தில்லா மருத்துவமும்கூட.

முழு கட்டுரையைப் படிக்க →