சலுகைகளைக் குறைக்க இது தருணமல்ல!
புதிய பட்ஜெட்டை எதிர்நோக்கியுள்ள நேரம் இது. பணவீக்கப் பிரச்னை தொடர்கிறது. கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்து வருகிறது. உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் மக்களை நிலைகுலைய வைத்துவிட்டது. உணவுப் பண்டங்கள
புதிய பட்ஜெட்டை எதிர்நோக்கியுள்ள நேரம் இது. பணவீக்கப் பிரச்னை தொடர்கிறது. கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்து வருகிறது. உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் மக்களை நிலைகுலைய வைத்துவிட்டது. உணவுப் பண்டங்களின் விலை உலக அளவில் உயர்ந்து வருகிறது என்ற செய்தியைச் சொல்லிப் பயனில்லை. காரணம், இந்தியாவில் உணவுப் பண்டங்களின் விலை உயரும்போது ஏனைய பொருள்களின் விலை உயர்வதற்கு வழி வகுக்கிறது.
இதன் விளைவாக, ஒட்டுமொத்த தொழில் துறையே பாதிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, தொழிற்சாலைகளின் உற்பத்தி கடுமையாகச் சரிந்து வருகிறது.
பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாரத ரிசர்வ் வங்கி கடந்த ஓராண்டில், ஆறுமுறை கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இதன் நேரடி விளைவு, பண்டங்களுக்கான தேவை குறைகிறது. எனவே, வளர்ச்சி தடைபடும் ஆபத்து உள்ளது.
சர்வதேச நாடுகளில் இரண்டாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இன்னமும் முற்றிலுமாக மீளவில்லை. மாறாக, மீண்டும் மந்தநிலை ஏற்படக் கூடும் என்ற அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இது நமது ஏற்றுமதியைப் பாதிக்கக்கூடிய விஷயம்.
இந்நிலையில், புதிய பட்ஜெட்டின் மூலமாக, உள்நாட்டு மக்களின் தேவை, வாங்கும் சக்தியை உயர்த்துவதற்கும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும் வழிவகை காணப்பட வேண்டும். மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் முன் உள்ள மிக முக்கியமான இரட்டைச் சவால் இதுதான்.
சென்ற முறை பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய நேரத்தில், வட்டி விகிதம் ஸ்திரத்தன்மையை அடைந்துவிட்டது; இதற்கு மேல் வட்டி விகிதம் உயருவதற்கான வாய்ப்பு இல்லை என்றுதான் பலரும் கருதினர். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துவிடுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது. காரணம், பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவின் தலைவர், முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் டாக்டர் சி. ரங்கராஜன் வட்டிவிகிதத்தை மேலும் உயர்த்துவதைத் தவிர, வேறு வழியில்லை என்று அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார். பணவீக்க உயர்வு அந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளும் விலக்கிக் கொள்ளப்படக்கூடும் என்ற செய்தியும் அரசு வட்டாரங்களிலிருந்து கசிந்துள்ளது. வழக்கமாக நாம் ஏற்றுமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மந்தநிலையின்போது, நம் நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும்வகையில், மத்திய அரசு புத்துயிர் ஊட்டும் திட்டங்களை வகுத்து சில சலுகைகளை வழங்கியது. இப்போது அரசின் நிதிநிலையைக் கருத்தில்கொண்டு, மேற்கூறிய சலுகைகளை ரத்து செய்வதற்கு அல்லது குறைப்பதற்கு அரசு ஆயத்தம் ஆகி வருகிறது. இது கவலை அளிக்கும் செய்தி.
எந்தக் காரணங்களுக்காக ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டதோ அந்தக் காரணங்கள் அப்படியேதான் உள்ளன. எனவே, மத்திய அரசுக்கு அப்படியொரு யோசனை இருக்குமானால், அதை உடனே கைவிட வேண்டும். இதுவே வர்த்தக, தொழிற்துறை கூட்டமைப்புகள் மற்றும் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
சீனா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள் தங்களது ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கிவரும் சலுகைகளைத் திரும்பப் பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஏற்றுமதியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தங்களது நாணய மதிப்பை ஒரே நிலையில் வைத்துக் கொள்கின்றன.
எனவே, வழங்கி வரும் சலுகைகளை விலக்கிக் கொள்வதற்கு இது தருணம் அல்ல. மேலும், சுங்க வரி, உற்பத்தி வரி, சேவை வரி ஆகியவற்றில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டாலும், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லத் தேவையில்லை.
வேளாண் துறையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது ஆறுதல் தரக்கூடிய விஷயம்.
இந்த எழுச்சி தொடர்வதற்கு ஏதுவாக, வேளாண் துறைச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண் கடனுக்கு வட்டி குறைப்பு உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் புதிய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும்.
வேளாண் உற்பத்தியைக் கணிசமாகப் பெருக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் தனியார் முயற்சிக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். புதிய, புதிய தொழில்நுட்பப் பண்பாட்டுக்குத் தேவையான முதலீடுகளுக்குக் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவிக்க வேண்டும்.
அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரத்தை அரசு மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியாது. இதில் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து செயல்படுவதே நடைமுறைச் சாத்தியமாகும்.
இது ஏற்கெனவே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையும்கூட. ஆனால், இதற்கு தனியார் துறை முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்கு ஏதுவாக, வழிமுறைகள் எளிமைப்படுத்தப்படுவதுடன், அவை துல்லியமாகவும், அரசு "சிகப்பு நாடாக்களுக்கு' இடம் கொடுக்காத வகையிலும் அமைதல் வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக அதிகரித்து வரும் "மேட்' என்னும் குறைந்தபட்ச மாற்று வரி தொழில் துறையினருக்கு பெரும் சுமையாக உள்ளது என்று பரவலாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான தொழில் நிறுவனங்களின் சம்மேளனங்கள் ஒரு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நிறுவனங்களுக்கு "மேட்' வரியை ரத்து செய்ய வேண்டும் என்பதே அது. காரணம், வருமானவரிச் சட்டத்தின் சில பிரிவுகள் வழங்கும் பிற சலுகைகளையும் இந்த "மேட்' வரி நீர்த்துப் போகச் செய்து விடுகிறது என்பதுதான் அவர்களது புகார்.
தொழிற்கூடங்களுக்குரிய வரி விதிப்பு முறையில் உற்பத்தித் தளவாடங்களின் விலை மதிப்பில் ஒரு பகுதியை ஆண்டுதோறும் கழிவுத்தொகை (டெப்ரிசியேஷன்) என்னும் வகையில் 15 சதவிகிதத்தைக் கணக்கிடுவார்கள்.
இந்தக் கழிவுத் தொகையை 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்பது தொழில்துறையினரின் நீண்டகாலக் கோரிக்கை. தளவாடங்களின் விலை உயர்வு, வட்டி விகிதம் அதிகரிப்பு ஆகியவை லாபத்தில் பெரும்பகுதியை விழுங்கிவிடும் இன்றைய நிலையில், தொழில்துறையினருக்கு, குறிப்பாக, நடுத்தர, சிறுதொழில் துறையினருக்கு இது நிவாரணமாக அமையும்.
பணவீக்கப் பின்னணியில், நடுத்தர மக்கள், மாதச் சம்பளம் பெறும் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவது உடனடித் தேவை.
இதற்கு ஏதுவாக வருமான வரி விலக்கு வரம்பை இப்போதுள்ள ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்திலிருந்து ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்துவது பொருத்தமாக இருக்கும்.
பணவீக்கம், விலைவாசியால் அவதியுறும் இந்தப் பிரிவினருக்கு மேற்கூறிய வரி விலக்குச் சலுகை நியாயமான ஒன்றாக இருக்கும். "சொந்தமாக ஒரு வீடு வேண்டும்' என்பது நடுத்தர மக்களின் நீங்காத கனவு! அவர்களது இந்தக் கனவு நனவாக நாளொரு தடங்கல்; பொழுதொரு சிக்கல் என்றால் மிகை அல்ல. வீட்டு விலை, பிளாட் விலை அதிகரிப்பு, வங்கிக் கடன் வட்டி ஏற்றம் எனப் பல சவால்களை இவர்கள் எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் இவர்களுக்கு ஓர் உதவி செய்யலாம். வங்கிக் கடன் வாங்கி வீடு கட்டுபவர்கள் செலுத்துகிற ஆண்டு வட்டித் தொகைக்கு, இப்போது ரூ. 1.5 லட்சம் வரை வருமானவரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்த வரம்பை ரூ. 2.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
இது வீடு கட்டும் அல்லது பிளாட் வாங்கும் நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இந்தியப் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் சிறுசேமிப்பாளர்களே. சர்வதேச அளவில் பல வளர்ந்த நாடுகள்கூட அவ்வப்போது பொருளாதாரச் சிக்கலில் தவித்துள்ளன. அப்போதெல்லாம் இந்தியா அதுபோன்ற நெருக்கடிகளில் சிக்காமல் தப்பியது.
இதற்குப் பொருளாதாரக் கொள்கை, வலுவான வங்கித்துறை எனப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான ஒரு காரணம் உண்டு. அதுதான் இந்தியர்களின் பாரம்பரியமான சிக்கன வாழ்க்கை மற்றும் சேமிப்புப் பழக்கம். இதைச் சர்வதேச அளவில் பொருளாதார நிபுணர்களே வெளிப்படையாகப் பாராட்டி உள்ளனர்.
உலகிலேயே, சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச குடும்ப சேமிப்பு (டொமஸ்டிக் சேவிங்ஸ்) சாதனை படைப்பது இந்தியாதான். 1955-ல் இந்தியாவின் ஜி.டி.பி. என்னும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 10.3 சதவீதம் அளவுக்கு இந்தியர்கள் சேமித்தார்கள். அது இப்போது அதிகரித்து, 2006-07-ம் ஆண்டு கணக்குப்படி ஜி.டி.பி. 36.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
2009 - 2010-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், சேமிப்புவிகிதம் மேலும் உயர்ந்திருப்பதாகவே நம்பப்படுகிறது.
அத்தகைய சேமிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், இப்போது வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி-யின் கீழ் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம்வரை சில குறிப்பிட்ட முதலீடுகளில் முதலீடு செய்தால், அந்தத் தொகையை வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.
பிற சலுகைகளைக் குறைக்காமல் இந்த வரம்பைக் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; இதன்மூலம் நம் நாட்டில் குடும்ப சேமிப்பு மேலும் பெருகும் எனச் சொல்லத் தேவை இல்லை.
ஆக, ஏற்றுமதியாளர்கள், சிறு தொழில், நடுத்தரத் தொழில் உள்ளிட்ட தொழில் துறையினர், வேளாண் துறையினர், பணவீக்கத்தால் அவதிக்குள்ளான நடுத்தர மக்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் தங்களுக்குத் தேவையான நிவாரணத்தைத்தான் புதிய பட்ஜெட்டில் எதிர்நோக்கியுள்ளனர்; அவர்களுக்குள்ள கொஞ்ச நஞ்ச சலுகைகளையும் குறைக்கலாகாது.