கட்டுரைகள்

கல்விக் கட்டணமும் பெற்றோரின் கேள்விகளும்...

கோடை விடுமுறைக்குப் பிறகு மாநிலம் முழுவதும் பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 15) திறக்கப்பட்டன. 15 நாள்கள் கூடுதல் விடுமுறை கிடைத்த மகிழ்ச்சியோடு பள்ளிக்குச் சென்ற மாணவர்களுக்கு, இன்னும் கூடுதல் மகிழ்ச்சியா

தி. இன்பராஜ்

கோடை விடுமுறைக்குப் பிறகு மாநிலம் முழுவதும் பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 15) திறக்கப்பட்டன. 15 நாள்கள் கூடுதல் விடுமுறை கிடைத்த மகிழ்ச்சியோடு பள்ளிக்குச் சென்ற மாணவர்களுக்கு, இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக எந்தவித பாடப் புத்தகங்கள்படியும் இல்லாமல் "குழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள்' என்ற முறைப்படி பாடங்கள் நடத்தப்பட்டன.

மாணவ, மாணவிகள் ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், கல்விக் கட்டணமாகப் பல ஆயிரங்களைத் தனியார் பள்ளிகளுக்குச் செலுத்திய பெற்றோர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு அறிவித்த கல்விக் கட்டணத்தை வைத்து தனியார் பள்ளிகள் நடந்துகொள்ளும் விதம், பெற்றோரை மிகவும் கவலையில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.

சென்னையில் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட கல்விக் கட்டண விவரங்கள் மேல்முறையீடு செய்த 6,400 பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

ஆனால், பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகள் செவ்வாய்க்கிழமை இரவு வரை கல்விக் கட்டண விவரத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. பள்ளிகள் திறக்கும்போது தகவல் பலகையில் கல்விக் கட்டண விவரம் ஒட்டப்பட வேண்டும் என்ற அறிவிப்பை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை என்பதே பெற்றோரின் குற்றச்சாட்டு.

சில பள்ளி நிர்வாகத்தினர் புதன்கிழமை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்குச் சென்று கல்விக் கட்டண விவரத்தைப் பெற்றனர். ஆனால், பள்ளியின் தகவல் பலகையில் ஒட்டவில்லை. அப்படியே ஒட்டியிருந்தாலும், அவர்கள் வசூலித்த தொகைக்கும் தகவல் பலகையில் ஒட்டப்பட்ட கட்டண விவரத்துக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை.

இதைக் கண்காணிக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு செயல்பட்டதாகவும் தெரியவில்லை.

எந்தப் பள்ளிக்கும் சென்று தகவல் பலகையில் ஒட்டப்பட்ட விவர அடிப்படையில்தான் கட்டணம் வசூலிக்கப்பட்டதா? என எந்த அதிகாரியும் ஆய்வு செய்யவும் இல்லை.

மேல்முறையீடு செய்த பள்ளிகள் அனைத்துக்கும் குறைந்தது 15 சதத்தில் இருந்து 100 சதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் கட்டண உயர்வு போதாது என சில தனியார் பள்ளிகள் அரசிடம் மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறி வருகின்றன.

கூடுதல் கட்டமைப்பு வசதி வைத்திருப்பதாகக் கூறும் இந்தப் பள்ளி நிர்வாகத்தினர், கட்டணத்தை மேலும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்துவதற்கு அவர்கள் கூறும் காரணம் "ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியவில்லை' என்பதுதான்.

தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரம் ஊரறிந்த ரகசியம் என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை போலும்.

நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு அறிவித்த கட்டணம் 2010-11, 2011-12, 2012-13 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விக் கட்டண அதிகரிப்பு போதாது என வலியுறுத்தும் பள்ளிகள், இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தைப் பெற்றோர்களிடம் இருந்து முழுத் தொகையையும் வசூலித்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டுக்கு (2010-11) நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கும் மேலாக பணத்தை வசூலித்துக்கொண்ட பள்ளி நிர்வாகத்தினர், புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற குழந்தைகளிடம் நிலுவைத் தொகையைச் செலுத்தினால்தான் பள்ளிக்குள் செல்ல முடியும் என கட்டாயப்படுத்தியது கொடுமையின் உச்சம்.

கல்விக் கட்டண உயர்வு போதாது என்பதற்காக "குய்யோ.. முறையோ...' என கூச்சலிடும் தனியார் பள்ளிகள் அனைத்தும், தங்கள் பள்ளியில் இந்தக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. எந்தக் கட்டண அடிப்படையில் அவர்கள் மாணவர்களைச் சேர்த்தார்கள்?

தங்களது பள்ளிதான் சிறந்த பள்ளி என கூறிக்கொள்ளும் அனைத்துப் பள்ளிகளுமே, ஏதாவது ஓர் அறக்கட்டளையின் பெயரில் இவ்வளவு ரூபாய் செலுத்த வேண்டும் எனப் பெற்றோரை நிர்பந்திப்பது ஏன் என்ற கேள்வியும் பெற்றோர்கள் மத்தியில் எழாமல் இல்லை.

ஏனென்றால், கல்விக் கட்டணம் தொடர்பாக ஏதேனும் புகார் வந்தால், பணம் செலுத்தியவர்கள் விருப்பப்பட்டு அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு நன்கொடை வழங்கினர் என தப்பித்துக் கொள்வதற்காகவே இந்த அறக்கட்டளை நாடகம்.

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளை தொடர்பாக எழுத்துப்பூர்வமாகப் புகார் செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என அரசு அறிவித்துள்ளது. தங்களது குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக எந்தப் பெற்றோரும் இதுவரை எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கவில்லை.

சாலைக்கு வந்து போராட்டம் நடத்தும் பெற்றோர்கள்கூட, இந்தப் பள்ளியில் இவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என கூறிவிட்டு கலைந்து சென்றுவிடுகின்றனர். பெற்றோர் தயங்குவது தங்களது குழந்தையின் படிப்பு பாதித்துவிடும் என்பதற்காகத்தான்.

கல்விக் கட்டணம் தொடர்பாக எத்தனை முறை புகார் தெரிவித்தாலும், பெற்றோர்களுக்குக் கிடைப்பது என்னவோ கூடுதல் கவலை மட்டுமே! எனவே, கல்விக் கட்டணக் கொள்ளை என்பது தனியார் பள்ளிகளில் தடுக்க முடியாத ஒன்றாகிவிட்டதாகவே பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கூறுகின்றனர்.

தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, கல்விக் கட்டணம் செலுத்த ஏதாவது ஒரு நாளைத் தேர்வு செய்து, அந்த நாளில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோர்களிடம் அறிவித்து, அன்றைய தினம் கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் ஓரளவு "தில்லமுல்லு' குறைய வாய்ப்பு உள்ளது.

அரசின் நேரடிப் பார்வை இருந்தால் மட்டுமே தனியார் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு முடிவு வரும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பம். அதுவரை தனியார் பள்ளிகளின் வசூல் வேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT