வேலைவாய்ப்பு: துளிர் விடும் நம்பிக்கை!
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியப் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 முதல் 8.5 சதவீதமாக இருந்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன், உலக அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோதுகூட, அதிகப் பாதிப்பின்றி இந்தியா சமாளித
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியப் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 முதல் 8.5 சதவீதமாக இருந்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன், உலக அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோதுகூட, அதிகப் பாதிப்பின்றி இந்தியா சமாளித்துக் கொண்டது. இதைப் பார்த்து உலகே வியந்தது. ஆனால், வேலைவாய்ப்பு என்று வரும்போது, வளர்ச்சிக்கு இணையாக வேலைகள் அதிகரிக்கவில்லை. இது கவலை அளிக்கும் ஒரு அம்சமாக கடந்த பல ஆண்டுகளாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அதாவது ஜூன் 24-ம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள செய்தி ஆறுதல் அளிப்பதாக உள்ளது. வேலை இல்லாமை விகிதம் 2004 ஜூலை முதல் 2005 ஜூன் வரை 2.3 சதவீதமாக இருந்தது. ஆனால், 2009 ஜூலை முதல் 2010 ஜூன் வரையான நிலவரப்படி, வேலை இல்லாமை விகிதம் 2 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பதே அது.
வேலைக்குப் போகிறவர்கள் மற்றும் வேலைக்குப் போகத் தயாராக இருப்பவர்களை "லேபர் ஃபோர்ஸ்' என்கிறார்கள். இப்படிப்பட்ட 1000 பேரில், 2009-10-ம் ஆண்டில், வேலை கிடைக்காதவர்கள் 20 பேர். ஆனால் 2004-05-ம் ஆண்டில், அதேபோன்ற 1000 பேரில் வேலை கிடைக்காதவர்கள் 23 பேராக இருந்தனர். இது நம்பிக்கையூட்டும் செய்தி என்பதில் ஐயமில்லை.
அதேநேரம், விவரங்களைக் கூர்ந்து கவனித்தால் கவலை அளிக்கும் ஒரு அம்சம் அதில் உள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் மேலே கூறிய ஆய்வின்படி, மகளிருக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 2004-05-ல் 1000 பேரில் வேலைக்குப் போன மகளிர் எண்ணிக்கை 294 ஆக இருந்தது. ஆனால், 2009-10-ம் ஆண்டில் 1000 பேரில் வெறும் 233 மகளிர் மட்டுமே வேலைக்குப் போகிறார்கள். இந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்று இன்னும் கண்டறியப்படவில்லை. உடல்நலக் குறைவு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கக்கூடும்.
உண்மையான காரணம் என்ன என்று ஆய்வு செய்து, அதற்கான நிவாரண நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம் ஆகும். அரசு அமைப்புகள் தவிர, அரசு சாரா சமூக நல அமைப்புகளும் (என்.ஜி.ஓ.) இதில் ஈடுபடுவது நல்ல பலனை அளிக்கும்.
120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் வேலைக்குப் போகிறவர்கள் மற்றும் வேலைக்குப் போகத் தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கை 2009-10 நிலவரப்படி, 46 கோடியே 80 லட்சம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி வேண்டும் என்ற முழக்கம் விண்ணைப் பிளந்து வந்த நிலையில், சமீபத்திய முன்னேற்றம் ஆறுதல் தருவதாகும். எனினும், வளர்ச்சிக்குச் சமமான வேலைவாய்ப்பு பெருக்கம் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. இதற்குக் காரணம், தொழிற்சாலைகளின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் போதிய அளவில் இல்லை என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. சம்பந்தப்பட்ட கால கட்டத்தில், பணவீக்கம் கட்டுக்கு மீறிச் சென்றபோது ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதும், தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைவதற்கு ஓரளவு காரணமாக இருந்திருக்கக்கூடும்.
ஆனால், தற்சமயம் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியக் கம்பெனிகள் நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் 18-ம் தேதி வரை செலுத்தியுள்ள கம்பெனி வரி 23 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது தொழிற்சாலைகளின் உற்பத்தி விறுவிறுப்பு அடைந்து வருவதற்கான அறிகுறி!
அமெரிக்கா, ஐரோப்பாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் விளைவாக குறைந்திருந்த இந்தியாவின் ஏற்றுமதி இப்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தங்க ஆபரணங்கள், ஆபரணக் கற்கள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள், மருந்துகள், ரசாயனப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இதுவும் தொழிற்சாலை உற்பத்தியைப் பெருக்கக்கூடும்.
சமீபத்தில் வெளிவந்துள்ள ஆய்வுகளின்படி பொறியியல், மருந்து தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு ஆகிய துறைகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் பல்லாயிரக்கணக்கான அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
சென்னை, மும்பை, பெங்களூரு, புனே, தில்லி ஆகிய நகரங்களில் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நிதிச் சேவை நிறுவனங்களில் 12 முதல் 15 சதவீதம் வரை புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளோடு ஒப்பிட்டால் நடப்பாண்டில் "ரியல் எஸ்டேட்' எனப்படும் வீடுகள், மனைகள் விற்பனை விறுவிறுப்படையும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனால் கட்டுமானப் பணிகளும் அது தொடர்பான வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.
வேலை இல்லாத் திண்டாட்டம் ஒருபுறம் இருக்க, புதியவேலைகளுக்குத் திறன்படைத்த நபர்கள் கிடைப்பதில்லை என்பது தொழில் துறை நிர்வாகிகளின் குறையாக உள்ளது.
படித்தவுடன் இளைஞர்கள் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து வேலைக்குத் தகுந்தவர்களாக தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. படித்த இளைஞர்களை வேலைக்குத் தகுந்தவர்களாக மாற்றுவதற்குப் பயிற்சி தேவை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அரசு சார்ந்த திறன் மேம்பாட்டுக் கழகம், புதிய திட்டம் வகுத்துச் செயல்படத் தொடங்கியுள்ளது. வேலைவாய்ப்புத் திசையில் இது நல்ல தொடக்கம். அடுத்த 10 ஆண்டுகளில், இதன்மூலம் 15 கோடி இளைஞர்களுக்கு நாடு முழுவதும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இவையெல்லாம் நகர்ப்புறங்களைச் சார்ந்த விஷயம். ஊரகப் பகுதிகளை எடுத்துக் கொண்டோமானால், ஊரக மேம்பாட்டுக்குத் திறவுகோல் விவசாய வளர்ச்சியே. 5 ஆண்டுகளுக்கு முன்பு பதினோராவது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கியபோது, அதன் அணுகுமுறை ஆவணத்தில் விவசாய மேம்பாட்டுக்கும், ஊரக வேலைவாய்ப்புகளுக்கும், கடந்த காலங்களைவிட கூடுதல் ஒதுக்கீடும், முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. இப்போது பதினோராவது ஐந்தாண்டுத் திட்டம் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது. இந்தத் திட்டத்தில் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டது என்பது இனிமேல்தான் தெரியவரும்.
ஊரகப் பகுதிகளில் ஏழ்மை மற்றும் பசியை ஒழிப்பதற்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் மட்டும் போதாது. அந்த வேலைகளுக்கான - அதிலும் குறிப்பாக அமைப்புசாரா வேலைகளுக்கான - ஊதியம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
ஒரு நல்ல செய்தி, கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் விவசாய வளர்ச்சி ஏறுமுகத்தில் உள்ளது. இந்த ஆண்டில் பருவமழை, சராசரியை விட சிறிதளவு குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், விவசாயத்தைப் பாதிக்காத அளவு இருக்கும் என்று நம்பலாம்.
ஊரகப் பகுதிகளில், வேளாண் பொருள்களைச் சார்ந்த துறைகளில், சிறு மற்றும் குறுந்தொழில்கள் தொடங்குவது ஊக்குவிக்கப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
விவசாயத்துக்கு அடுத்தபடியாக நம் நாட்டில் வேலைவாய்ப்புகளை வழங்கும் துறை சிறு தொழில் துறையே. எனவே, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்து அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதுகூட, வேலைவாய்ப்புப் பெருக்கத்துக்கு ஓர் உத்தியாக அமையும்.
முறையாகப் பதிவுசெய்து கொண்டோ அல்லது பதிவு செய்து கொள்ளாமலோ, 2 கோடியே 60 லட்சம் நிறுவனங்கள் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களாகச் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் 6 கோடி நபர்களுக்கும் மேல் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.
பெரிய நிறுவனங்களில் ஒரு கோடி ரூபாய் மூலதனம் அதிகரித்தால் அதன் வாயிலாக வேலைவாய்ப்பு அதிகரிப்பு ஒரு நபர் அல்லது இரண்டு நபருக்கு மட்டுமே. அங்கு தொழில்நுட்ப மேம்பாடும், நவீனமயமாக்கமும் அதிகரிக்கும். ஆனால், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களின் மூலதனம் பத்து லட்சம் ரூபாய் அதிகரித்தால்கூட 2 அல்லது 3 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு உருவாகும். இது நடைமுறையில் நாம் பல ஆண்டுகளாகப் பார்த்த உண்மை.
மக்கள் தொகை 120 கோடி உள்ள இந்தியாவில், உள்நாட்டு விற்பனையும் முக்கியம் என்பது வெளிப்படை. வளர்ச்சியால் அதிக உற்பத்தி, அதிக உற்பத்தியால் அதிக விற்பனை, அதிக லாபம், அதன் பயனாக மூலதனம் போடும் முதலீட்டாளர்களும், உழைக்கும் தொழிலாளர்களும் நியாயமான வகையில் பயன் அடைய வேண்டும் என்பதே எல்லோரும் எதிர்பார்ப்பது. இந்தச் சுழற்சியில், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்பது வெளிப்படை.
இந்த முயற்சியில் கீழ்த்திசை நாடுகள் வெற்றி பெற்றுள்ளன. இது அவர்களுக்குச் சாத்தியமானதற்குக் காரணம், தொழிற்சாலைகளின் உற்பத்திக்கு அந்த நாடுகள் அதிகபட்ச முக்கியத்துவம் வழங்கின என்பதுதான். அதேநேரம், தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும், இதய சுத்தியுடன், அதே முக்கியத்துவம் அளித்தன.
இதனால், வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள், ஏழை - பணக்காரர் இடையே இடைவெளியைக் குறைத்தல் ஆகிய மூன்று முக்கிய இலக்குகளை கிழக்காசிய நாடுகள் திட்டமிட்டு அடைந்தன. இந்தியாவுக்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணம் எனலாம்.
உலகமயமாக்கல், தனியார் மயம், தாராளமயம் ஆகிய கொள்கைகளை ஏற்றுக்கொண்டு 18 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதனால், பொதுத்துறை நிறுவனங்களின் வீரியமும், வீச்சும் குறைந்ததில் வியப்பில்லை. அவற்றின் மூலம் கிடைத்த வேலைவாய்ப்புகள் குறைந்ததும் இயல்பு. ஆனால், இவற்றையெல்லாம் ஈடு செய்யும் வகையில் மேற்கூறியபடி திட்டமிட்ட நடவடிக்கைகள் இன்றியமையாதவை. சந்தைப் பொருளாதாரத்தை மட்டுமே நம்பியிருப்போமானால், வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏழ்மை ஒழிப்பு என்பதெல்லாம் தானாக நிகழ்ந்து விடாது என்பது மட்டும் யதார்த்தம்!