தன்னலமின்றி மற்றவர்களுக்காகத் தனது சேவையை அர்ப்பணிக்கிறவன்தான் சமுதாயத்தில் உண்மையாக உயர்ந்தவன் என்பது சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி. பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் தீயணைப்பு வீரர் உள்ளபடி உயர்ந்த மனிதர் என்பதில் ஐயமில்லை.
ஈரோடு சத்தியமங்கலத்திலிருந்து பவானிசாகர் செல்லும் வழியில் உள்ளது எரங்காட்டூர் என்ற கிராமம். அங்கு ஒரு நெசவுத் தொழிற்சாலையில் பஞ்சு கட்டுக்கட்டாகச் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இத்தகைய கிடங்குகளைப் பராமரிக்க சில வழிமுறைகள் உண்டு. முழுமையாக அடைத்தாற்போல் வைக்கக்கூடாது. காற்று வளைய வர இடைவெளி விடவேண்டும். அப்போது வெப்பத்தில் குமைய வாய்ப்பில்லை. வெப்பம் அதிகமாகும் கோடைக்காலத்தில் இத்தகைய கிடங்குகள் தீப்பற்றிக்கொள்ளும் ஆபத்து அதிகம்.
எரங்காட்டூர் நெசவுத் தொழிற்சாலை பஞ்சு சேமிக்கப்பட்டிருக்கும் கிடங்கில் ஏப்ரல் 1-ம் தேதி மாலை திடீரென்று தீப்பற்றிக் கொண்டது.
பஞ்சு தீப்பற்றிக் கொண்டால் அது வெகு விரைவில் பரவும். பணியில் இருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்கப் போராடினர். பிறகு சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு நிலையங்களிலிருந்து வாகனங்கள் விரைந்தன. சேமிப்புக் கிடங்கின் பின்புறம் உயர் பாதுகாப்புச் சுவர் உள்ளது. அதன் வழியாகவும் பெருந்தீயின் தாக்கத்தைக் குறைக்க தீயணைப்பு வீரர்கள் முன் வழி பின் வழி இருபுறமும் தீயணைப்பு தாக்குதலை நடத்தினர். சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர் பிரபாகரன் (46) திறமையான பணிப்பற்றுதலுடைய பணியாளர்; பல பெருந் தீவிபத்துகளில் பணி செய்து முத்திரை பதித்தவர். கிடங்கின் உயர் சுவர் பின்புறம் தைரியமாகத் தீயணைப்பு பணியில் ஈடுபட்டார். பழமையான சுவர், நிலை கொள்ளாமல் விழுந்தது. அதில் பரிதாபமாக பிரபாகரன் சிக்கிக்கொண்டார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், விலா எலும்பு முறிந்து ரத்தக்குழாய் சிதைந்து அதிக ரத்தக்கசிவு ஏற்பட்டதால் உயிர் பிரிந்தது.
பணியில் உயிர்துறந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் நாள் ஏப்ரல் 14, இந்த நினைவு நாள் நாடெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. 1944-ம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெடிமருந்துகள் தாங்கிய கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் துறைமுகத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. பல கப்பல்கள் பாழடைந்தன. தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களும் துறைமுகப் பணியாளர்களும் போராடினர். விபத்தில் 249 பணியாளர்கள் உயிரிழ்ந்தனர். தீ விபத்து நேர்ந்தால் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அளவிட முடியாது. தீயால் அழியாதது எதுவுமில்லை. மும்பை விபத்து நிகழ்ந்தது ஏப்ரல் 14. அந்த நாள் தான் தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் நாள்.
1908-ம் ஆண்டு நியூயார்க் தீயணைப்புப்படைக்குத் தலைமை வகித்த தளபதி எட்வர்ட் க்ராகர் கூறுவார். ஒரு தீயணைப்பு வீரர் பணியில் சேரும்பொழுதே உயிர்த் தியாகத்துக்குத் தயாராகி விடுகிறார். எந்த ஒரு தீயணைப்பு அழைப்பும் அபாயத்தைக் குறிக்கும். அபாயத்தில் சிக்கி அபயக்குரல் கொடுக்கும் ஜீவனைக் காப்பாற்ற நேரம் தப்பாமல் விரைந்து செயல்பட வேண்டிய பொறுப்பு தீயணைப்பு வீரருடையது. உயிருடன் திரும்புவாரா என்பது கேள்விக்குறி. அதனால்தான் தீயணைப்புப் பணியில் அமர்வதே ஒரு சிறந்த தியாகம்.
வளர்ந்து வரும் சமுதாயத்தில் பல பிரச்னைகள் பின்னிப் படர்கின்றன. பொருளாதார வளர்ச்சியோடு நகரங்கள் விரிவடைகின்றன. புதிய நகரங்கள் தொழிற்கூடங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் போட்டிபோட்டுக் கொண்டு தொழில் வர்த்தக முதலீட்டாளர்களை வரவேற்கின்றன. வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரம் நிரந்தரக் கட்டமைப்புகள். அத்தகைய வளர்ச்சிப் பணிகளைத் திட்டமிடும்பொழுதும் சரி, நிறைவேற்றும்பொழுதும் சரி போதிய பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
உயர்மாடிக் கட்டடங்கள் மற்றும் பல்வேறு கட்டுமானப் பணிகளை ஒழுங்குபடுத்தும் விதமாக தேசிய கட்டட விதிகள் 2005-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடித்துத்தான் 15 மீட்டருக்கு அதிகமாக உயரம் கொண்ட கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
முக்கியமாக உயர்மாடிக் கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ, மீட்புப்பணி வீரர்கள் சம்பவ இடத்தில் பணிபுரிவதற்கு உதவும் வகையில் கட்டடத்தைச் சுற்றிப் போதிய இடைவெளி, அகலமான நுழைவுவாயில், விஸ்தாரமான தாழ்வாரங்கள், தடைகள் இல்லாத மாடிப்படிகள், பிரத்யேக அவசரகால லிஃப்ட், தீயணைப்புத் தெளிப்பான்கள், கட்டடப் பரப்பளவுக்கேற்றவாறு நீர் சேமிப்புக் கிடங்கு போன்ற பல விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இவை சரியாக நிறுவப்பட்டுள்ளதன் அடிப்படையில்தான் தீயணைப்புத்துறை உரிமம் வழங்குகிறது.
2004-ம் ஆண்டு நடந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 93 குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து பள்ளிகளில் குறைந்தபட்சம் தீ பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்வையிட்டு தீயணைப்புத்துறை சான்றிதழ் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் சுமார் 55,000 பள்ளிகள் உள்ளன. தீயணைப்புத்துறைக்குப் பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 தீயணைப்பு அழைப்புகளும், உயிர் மீட்புப்பணிக்கான அழைப்புகள் சுமார் 10,000-மும் வருகின்றன.
தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட தீயணைப்பு நிலையங்கள் 300, மீட்புப்பணி நிலையம் இரண்டு. ஒப்பளிக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் எண்ணிக்கை 6,741. தீயணைப்புத் துறையை மேம்படுத்த நீதிபதி பக்தவத்சலம் தலைமையிலான கமிஷன் அமைக்கப்பட்டு அது நல்ல பல பரிந்துரைகளை 2005-ம் ஆண்டு வழங்கியது.
நவீன உபகரணங்கள் வாங்குவதற்கும், பேரிடர் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கும் வகையில் கருவிகள் வாங்கவும் அரசு ஆணையிட்டது. அதன் பலனால் தீயணைப்புத்துறை நவீனமயமாக்கும் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டது.
பொதுமக்கள் நலனுக்காக நிறைவேற்றப்படும் எந்த ஒரு திட்டமும் அவர்களது ஒத்துழைப்பின்றி முழுமையடையாது. அதுவும் பொதுமக்களுக்குச் சேவை என்பதையே பிரதானமாகக் கொண்ட காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் இத்தகைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இதைக் கருத்தில்கொண்டு தீயணைப்புத்துறையில் தீ பாதுகாப்புத் தொண்டர்களாக அந்தந்த சரகத்தில் தெரிவுசெய்து பாதுகாவலர்களாக இணைத்துக்கொள்ள 2006-ம் ஆண்டு அரசு ஆணையிட்டது.
இதுவும் பக்தவத்சலம் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆணை. பாதுகாப்புத் தொண்டர்களை, பள்ளி மாணவ, மாணவியர், கல்லூரி இளைஞர்கள், சமுதாயத் தொண்டர்கள் என்று மூன்று நிலையாகப் பிரித்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் "ஃபயர் மார்ஷல்' என்ற ஒருங்கிணைப்பாளரை நியமிக்கும் திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கல்விக்கூடங்களில் தீயணைப்பு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கும் அதேவேளையில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த தீயணைப்பு சாரணர் அமைப்பு உருவாக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம் அது மிகுந்த வரவேற்பை பெற்றது. அரசுப் பள்ளிகளுக்கு அது சம்பந்தமாக அறிவுரை வழங்கி அதை மேலும் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற கருத்து அரசுக்கு அனுப்பி சுமார் ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஏனோ ஆணையிடப்படாமல் தயக்கத்தில் உள்ளது.
மாநிலங்களில் உள்ள தீயணைப்புத்துறைகளை ஒருங்கிணைக்கவும், பேரிடர் நிகழ்வுகளில் மக்களைப் பாதுகாக்கவும் மத்தியில் பேரிடர் மேலாண்மைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமை இயக்குநர் தீப்பாதுகாப்பு என்ற உயர் அதிகாரி டிஜிபி அந்தஸ்தில் பணிபுரிகிறார். தீப்பாதுகாப்பும், ஊர்க் காவல் படையும் இவரது கட்டுப்பாட்டில் உள்ளன.
பல மாநிலங்களில் தீயணைப்புத்துறையும் ஊர்க்காவல்படையும் ஒரே அதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ஆனால், தமிழகத்தில் மட்டும் நிலை வேறு. தீயணைப்புத்துறை டிஜிபி நிலை அதிகாரி தலைமை வகிப்பதால் அவரது கட்டுப்பாட்டில் ஊர்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்புத் துறையைக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்துருவும் இரண்டாண்டுகளாக அரசின் பரிசீலனையில் உள்ளது. இது மக்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.
""எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு'' என்ற வள்ளுவர் வாக்கில் அறிவு அரிதானது வேதனையளிக்கிறது.
மாநிலங்களில் உள்ள தீயணைப்புத்துறைகளின் செயலாக்கத்தை மேம்படுத்தவும் குறைகளை ஆய்வு செய்யவும் மத்தியில் குழு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பேரிடர்களை எதிர்கொள்வதில் குறைபாடுகள் 97 சதவிகிதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, மாநிலங்களின் சராசரி ஆயத்த நிலை மூன்று சதவிகிதம்தான். இதைச் சீர்செய்வதற்கு முதல்கட்டமாக ரூ. 7,000 கோடி முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டத் தலைமையிடங்களில் பேரிடர் மற்றும் தீப்பாதுகாப்பை மேம்படுத்த அந்தந்த நகராட்சிகள் மூலம் மத்திய அரசு நடப்பு நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கியுள்ளது. இதன் அடிப்படையில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் நகரங்களில் பேரிடர் பாதுகாப்பை மேம்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஒரு காலவரையறையில் நிறைவேற்ற வேண்டும்.
மேலை நாடுகளில் பொது இடங்களிலும் வர்த்தக மையங்களிலும் மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பாதுகாப்புக் குறைபாடு இருந்தால் அந்தக் கட்டடம் செயல்பட முடியாது, அது மூடப்படும். அத்தகைய நிலை நமது நாட்டிலும் வர வேண்டும். பல அரங்குகளையும் பல மாடிக்கட்டடங்களையும் நிறுவுபவர்கள் அவை பாதுகாப்பானவை என்று பெருமைகொள்ள வேண்டும். பொதுமக்களும் பாதுகாப்பு இல்லாத வர்த்தக மையங்களைப் புறக்கணிக்க வேண்டும்.
தீயணைப்புத்துறைக்குத் தொழில்நுட்பமும் நவீன சாதனங்களும் இன்றியமையாதன. வெறும் கையில் முழம் போட முடியாது. தீயணைப்பு வீரருக்கு உரிய மீட்புப்பணிக்கான சாதனங்கள் கொடுக்கப்பட வேண்டும். தீயென்று அலறும்போதும் ஆபத்து நெருங்கும்போதும் "கடவுளே காப்பாற்று தீயணைப்பு வீரரை உடனே அனுப்பு' என்று வேண்டுவோம். ஆனால், தீயணைந்த பிறகு ஆபத்து விலகிய மாத்திரத்தில் கடவுளை மறந்தோம், பாதுகாப்பு வீரரை இகழ்ந்தோம் என்றில்லாமல் சமய சஞ்சீவியான தீயணைப்பு வீரரின் கைகளைப் பலப்படுத்துவோம், துறையை மேம்படுத்துவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.