கட்டுரைகள்

காவலுக்கு மரியாதை

கொடுத்ததெல்லாம் கொடுத்தார், அவர் யாருக்காக கொடுத்தார்; ஒருத்தருக்கா கொடுத்தார், இல்லை ஊருக்காக கொடுத்தார்' - முதலமைச்சர் இரண்டு நாள் அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, காவல்துறைக்கு அளித்

ஆர். நட​ராஜ்

கொடுத்ததெல்லாம் கொடுத்தார், அவர் யாருக்காக கொடுத்தார்; ஒருத்தருக்கா கொடுத்தார், இல்லை ஊருக்காக கொடுத்தார்' - முதலமைச்சர் இரண்டு நாள் அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, காவல்துறைக்கு அளித்த அறிவுப்புகளைப் படித்தபோது பழைய அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது.

 ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இத்தகைய முடிவுகள் அறிவிக்கப்படும் முறை எந்த மாநிலத்திலும் இல்லை. இது நமது முதலமைச்சரின் உன்னத அணுகுமுறை. அதனால்தான் மற்ற மாநிலக் காவல்துறை அதிகாரிகள் நமது மாநிலத்தைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்.

 எந்த ஒரு துறையின் முன்னேற்றத்துக்கும் திட்டமிடுதல் மிக அவசியம். திட்டங்கள் மேலிருந்து கீழே வர வேண்டுமா அல்லது களத்தில் ஆராயப்பட்டு மேலே சமர்ப்பிக்கப்பட்டு முடிவு செய்ய வேண்டுமா என்பது முக்கியம். இதை "டாப் டெளன்' அல்லது "பாட்டம் அப்' என்று வல்லுநர்கள் இரு வகைப்படுத்துவார்கள். திட்டங்கள் உயர் மட்டத்தில் தீட்டப்பட்டு திணிக்கப்படுவதைவிட நடைமுறைக்கு எது உகந்தது, இப்போதைய சூழலில் எந்தத் திட்டம் உடனே செயல்படுத்த வேண்டும் என்று ஆராய்ந்து முடிவு செய்வதே தீர்க்கமான முடிவாக இருக்கும்.

 நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின்போது இரண்டு முக்கிய பிரச்னைகள் மக்கள்முன் இருந்தது. ஒன்று, சட்டம்-ஒழுங்கு, பொது அமைதி. மற்றொன்று, மின்சாரப் பற்றாக்குறை. சமூக விரோதிகள் மீது சட்டம் பாய வேண்டும். மின் வெட்டு வெட்டப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. ஏழை விவசாயிகளின் நில அபகரிப்புக் குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளாகப் பெருகின. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பவில்லை. பலம் படைத்தவர்களின் குறுக்கீட்டால்தான் காவல்துறை முடங்கியிருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. உயர் அதிகாரிகளும் பாராமுகமாக இருந்தனர். இப்போது அத்தகைய குற்றங்களைப் பதிவுசெய்து விசாரிப்பதற்கு நில அபகரிப்பு விசாரணைப் பிரிவு மாவட்டங்களில் தொடங்கியிருப்பது எல்லோருடைய வரவேற்பையும் பெற்றுள்ளது. முதல் அறிவிப்பாக, நடந்து முடிந்த காவல் அதிகாரிகளின் கூட்டத்தில் அந்த அமைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அத்தகைய நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு தொடக்கப்பட இருக்கிறது.

 நிலப் பரிமாற்றம் பிரச்னைகள் சிவில் சம்பந்தப்பட்டதாக இருக்கும்பட்சத்தில் காவல்துறை தலையிடக்கூடாது என்ற விதி இருக்கிறது. ஆனால், மிரட்டி நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவில் பிரச்னை என்று விட்டு விட முடியுமா? அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கிவிட்டு அவர்களே மனமுவந்து விற்றவர்கள் என்று வாய்கூசாமல் கூறும் கயவர்களை என்ன செய்வது? கடும் குற்ற நடவடிக்கை மட்டுமன்றி, அபகரிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மேற்பார்வையிடும் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

 காவல் நிலையங்களில் வரவேற்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு காவல் நிலையத்துக்கு வருபவர்களை அலைக்கழிக்காமல் புகார்கள் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற திட்டம் 2002-ல் அமல்படுத்தப்பட்டது. அதற்கென்று ஒரு பெண் உதவி ஆய்வாளர், பெண் காவலர் எல்லா காவல் நிலையங்களுக்கும் நியமிக்கப்பட்டனர். நகர காவல் நிலையங்களில் பிரதானமாக "ரிசப்ஷன் சென்டர்' என்று பிரத்யேக வரவேற்பாளர் அறையும் ஒதுக்கப்பட்டது. இது எல்லா காவல் நிலையங்களுக்கும் படிப்படியாக நிறைவேற்றப்படவில்லை. இப்போது அந்த திட்டத்துக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டு காவல் நிலையத்துக்கு வருபவர் வசதிக்காக நாற்காலியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மனுதாரர்களைக் காக்க வைக்காமல், மனு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நியாயமாகச் செய்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும்.

 போக்குவரத்துப் பிரச்னை எல்லோரையும் பாதிக்கும் ஒரு பிரச்னை. எங்கு சென்றாலும் அது நம்மைத் துரத்துகிறது. நம்மை அங்கும் இங்கும் நகர முடியாமல் முடக்குகிறது. ஏற்கெனவே குறுகலான சாலைகள், வாகன அதிகரிப்பைச் சமாளிக்க முடியவில்லை. சென்னையில் மட்டும் 45 லட்சத்துக்கும் மேலான வாகனங்கள் இருக்கின்றன.

 போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கத் திட்டமிடுதல் அவசியம். சாலைகளை அகலப்படுத்துதல், வளைவுகளை நேராக்குதல், ஒரு வழிப்பாதை அமலாக்கத்துக்கு உகந்த பாதைகளைத் தெரிவுசெய்தல், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றுதல், போக்குவரத்து விதிகளைப் பாரபட்சமின்றி அமலாக்குதல், சாலை உபயோகிப்பவர்களிடத்தில் சாலைப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்ற எவ்வளவோ செயல்பாடுகளை ஒருங்கிணைத்தால்தான் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்குச் சமன்படும்.

 இது மட்டுமன்றி, மின்வாரியம், சென்னை குடிநீர் வாரியம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மாநகராட்சி, மெட்ரோ போக்குவரத்துக் கழகம், காவல் துறை, தீயணைப்புத்துறை இவை எல்லாம் ஒன்றாகப் பணி செய்ய வேண்டும். குப்பை அகற்றாவிட்டால் அதுவும் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாகி விடுகிறது.

 பல இடங்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் "நம்பர் பிளேட்டு'கள் படம் பிடிக்கப்பட்டு அதிலிருந்து வாகன உரிமையாளர் தகவல்களைக் கணினி மூலம் பெற முடியும்.

 போக்குவரத்துக் காவலர் வாகனங்களை நிறுத்தி சலான் கொடுக்க வேண்டியதில்லை, கணினி மூலம் சென்று விடும். கிரெடிட் கார்ட் மூலமாகவும் அபராதத்தொகை செலுத்தலாம். கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் செயல்புரிவதன் மூலம் விதிகள் மீறல் மற்றும் சாலைப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தல் மேன்மையடையும் என்று எதிர்பார்க்கலாம்.

 சாலை விபத்தில் காயமுற்றவரை மருத்துவமனையில் ஒரு மணி நேரத்துக்குள் அனுமதித்து சிகிச்சையளித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும். இந்த ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை என்று இன்று பேசப்படுகிறதே தவிர, நடைமுறைப்படுத்துவதில் பல பிரச்னைகள்.

 தனியார் முயற்சியாக பல அமைப்புகள் அந்த சிக்கல்களைத் தீர்த்து உதவி செய்ய முன்வந்துள்ளன. சாலைப்பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் அரசுப் பணியாளர்களுக்கு முதல் உதவிப் பயிற்சி, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பகுதிகளை மேம்படுத்தி உடனடி சிகிச்சை வழங்குதல், ஆம்புலன்ஸ் வசதி பெருக்குதல் இவை எல்லாம் இதில் அடங்கும்.

 இதைச் சரிவர நிர்வகித்தால்தான் சாலை விபத்து உயிரிழப்பைக் குறைக்க முடியும். தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஆண்டு ஒன்றுக்கு சராசரி 15,000, காயமுற்றோர்கள் சுமார் 1,00,000 என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகம். மற்ற நாடுகளில் சாலைப்பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இங்கு அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.

 கிராம கண்காணிப்பு குழுக்கள் 1936-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இத்தகைய குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த சரக பிரச்னைகளை ஆராய்ந்து மக்கள் ஒத்துழைப்போடு தீர்வு காணும் மிகச்சிறந்த அமைப்பு. இந்த அமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கியிருப்பது நல்ல முடிவு.

 உழைக்கும் வர்க்கம்தான் நாட்டின் வலிமை. இளைஞர்களை நல்வழிப்படுத்துவதில் எந்த அளவுக்குப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பங்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு காவல்துறையினருக்கும் பங்கு உள்ளது. வீடுகளிலும், பள்ளிகளிலும் நல்லியல்புகள் பயிற்றுவிக்கப்படவில்லை என்றால் அதனால் எழக்கூடிய சமுதாயப் பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பாகி விடுகிறது. மாவோயிஸ்ட் பிரச்னைகள் சிவப்பு தாழ்வார மாநிலங்களில் படர்ந்ததற்குப் பல காரணங்களில், இளைய சமுதாயத்தை அரவணைக்கத் தவறியதும் ஒன்றாகும்.

 "பாய்ஸ் கிளப்' என்ற சிறார் மன்றங்கள் சென்னையில் முக்கியமாக குடிசைப்பகுதிகளில் சமுதாயத்தில் நலிவுற்ற குடும்பங்களின் சிறுவர்களைக் குற்றங்களில் ஈடுபடாதவாறு நல்வழிப்படுத்த அமைக்கப்பட்டுள்ளது. இவை காவல்துறையின் கட்டுப்பாட்டில், அரசு உதவியோடு இயங்குகின்றன, பல தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவி புரிகின்றன. 2003-ம் ஆண்டு இந்த சிறார் மன்றங்களை மேலும் மேம்படுத்த அரசு மானியம் வழங்கியது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இவற்றை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 இப்போது இந்த அமைப்புக்கு வழங்கப்படும் மானியத்தை அரசு உயர்த்தியுள்ளது. குற்றங்கள் நடவாமல் தடுப்பதிலும், குற்றவலையிலிருந்து நலிவுற்ற சிறுவர்களைக் காப்பாற்றுவதிலும் காவல் துறையினர் முனைப்பாகச் செயல்பட வேண்டும்.

 காவலருக்கும், ராணுவ வீரர்களுக்கு உள்ளதுபோல் கேன்டீன் வசதி ஒரு வரப்பிரசாதம். அகாலவேளையில் பணிபுரியும் காவலர்க்கு பொருள் வாங்க அலைய முடியாது. விற்பனை வரி விலக்களித்து மலிவு விலையில் நிறுவப்பட இருக்கும் பல பொருள் அங்காடியில் தேவையானவற்றை வாங்கலாம். இந்தப் பயனளிப்பு ஓய்வுபெற்ற காவலருக்கும், மறைந்த காவலர் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டிருப்பது முதலமைச்சரின் பெருந்தன்மையான செய்கை. இவ்வாறு இருபத்தைந்து அறிவிப்புகள் மக்கள் நலனுக்கும் காவலர் நலனுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

 காவல்துறையினர் அரசு நிர்வாகத்தின் பிரதிநிதிகள். சீருடை அணிந்திருப்பதாலும், சட்டங்களை அமல்படுத்துவதாலும் அவர்களது பணிகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அதிக விமர்சனத்துக்கும் உள்படுத்தப்படுகின்றன.

 காவல்துறையின் செயல் அப்பழுக்கற்று அமைய வேண்டும். காவல்துறையின் தூய்மையான பணிதான் அரசு நிர்வாகத்தின் மேலாண்மையைப் பிரதிபலிக்கிறது என்ற முதலமைச்சரின் பொன் வரிகளை மனதில்கொண்டு காவல்துறை மக்கள் சேவையில் நேர்மையுடனும் கடமையுணர்வோடும் தம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

நல்லகண்ணு மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: நடிகர் ரஜினிகாந்த்!

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

SCROLL FOR NEXT