என்ன நேர்ந்தது ரூபாய்க்கு?
கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அவ்வப்போது உயர்ந்து வந்தது. ஆனால், சென்ற சில மாதங்களாக இந்த நிலைமையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க டாலருக்கு
கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அவ்வப்போது உயர்ந்து வந்தது. ஆனால், சென்ற சில மாதங்களாக இந்த நிலைமையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கியது.
தொடக்கத்தில் இதைப் பற்றி எவரும் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. மாறாக, பலர் இந்தச் சரிவு மூலம் நமது ஏற்றுமதியாளர்களுக்கு கொஞ்சம் கூடுதல் லாபம் கிடைக்குமே என்று நினைத்துக் கொண்டார்கள்.
இந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்று சிந்தித்தால் ஒன்று புலப்படும். கடந்த சில மாதங்களாக, பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து வந்தது. அதனால் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியே எடுக்கத் தொடங்கினார்கள். அவர்களிடமிருந்து புதிய முதலீடுகள் வரவில்லை. இதனால் இந்தியாவுக்கு டாலர் வரத்து குறைந்தது.
இந்தியாவுக்கு இறக்குமதியாகின்ற கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் மூலதன தளவாடங்கள் ஆகியவற்றுக்கு நாம் டாலரில் பணம் செலுத்த வேண்டும். அதற்குத் தேவையான டாலர்களை வெளிச்சந்தையில் கொள்முதல் செய்கிறோம். இதனால் டாலருக்கு கிராக்கி அதிகரிக்கிறது. அதன் மதிப்பு படிப்படியாக அதிகரித்து வந்தது. இதுதான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கு காரணம் என்று பரவலாகக் கருதப்பட்டது.
தற்போது கிட்டத்தட்ட ரூ.50 அளவுக்கு டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டது. அந்த அளவுக்கு ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது. அதுமட்டுமல்ல, சர்வதேச அளவில், 11 முக்கியமான நாடுகளின் கரன்ஸிக்கு எதிராகவும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது என்ற உண்மை வெளிப்பட்டது.
இதற்கு என்ன காரணம்?
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் (அமெரிக்காவின் ரிசர்வ் வங்கி) அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவைப் பற்றி வெளிப்படையாகவே கவலையை வெளிப்படுத்தியது.
அத்துடன் நிற்காமல், கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி ஃபெடரல் ரிசர்வ் ஒரு கொள்கை முடிவை அறிவித்தது. தன் கைவசமுள்ள 400 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) டாலர் மதிப்பிலுள்ள குறுகிய கால அரசு பத்திரங்களை (மூன்று ஆண்டுகளுக்குள் முதிர்வடையும் பத்திரங்கள்) வெளிச்சந்தையில் விற்பனை செய்துவிட்டு, அதே மதிப்பிலான தொகைக்கு, நீண்டகால பாண்டுகளை சந்தையிலிருந்து வாங்கும் முடிவே அது.
அமெரிக்க அரசு தனது "பேலன்ஸ் ஷீட்டை' (ஆஸ்தி மற்றும் கடன்களுக்கான அறிக்கை) "ஒப்பனை' செய்யும் முயற்சியே இது. இதனால் பொருளாதாரம் வலுவடையப் போவதில்லை. மக்களின் வாங்கும் சக்தியும் உயராது; புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகாது என்பது வெளிப்படை.
இதைத்தொடர்ந்து, சர்வதேச முதலீட்டாளர்கள் பல்வேறு வகை முதலீடுகளில் போட்டிருந்த பணத்தை எடுத்து அமெரிக்க டாலரில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள்.
இது முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றக்கூடும். ஒருபக்கம் அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கல் அந்த நாட்டின் ஃபெடரல் ரிசர்வுக்கே கவலை அளிக்கிறது. இன்னொரு பக்கம், அமெரிக்க டாலரில் சர்வதேச முதலீட்டாளர்களே முதலீடு செய்கிறார்களே, அது எப்படி என்று நீங்கள் கேட்கக்கூடும்.
அமெரிக்கப் பொருளாதாரம் என்னதான் சிக்கலைச் சந்தித்தாலும், அந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடினாலும், இன்னமும் அமெரிக்க டாலர்தான் உலக அரங்கில் அனைத்து நாணயங்களுக்குள் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் பொருளாதாரத்திலும் அமெரிக்காதான் உலகிலேயே முதலிடம். "யானை படுத்தாலும் குதிரை மட்டம்' அல்லவா?
இன்றுள்ள நிலையில் வேறு எந்த ஒரு நாணயமும் அமெரிக்க டாலருக்கு நிகராக வலுவடையவில்லை. சீனா கடந்த பல ஆண்டுகளாக, கடுமையாக முயன்றும் அதனால் சீன நாணயத்தை அமெரிக்க டாலருக்கு நிகராக முன்னிறுத்த முடியவில்லை. யூரோவும் மதிப்பை இழந்து வருகிறது.
எனவேதான் சர்வதேச அளவில், முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரில் முதலீடு செய்துள்ளனர். அதன் பயனாக பல நாடுகளிலும் அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளது.
இந்நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்று கணித்திட முடியாத நிலை உருவாகியுள்ளது. கடந்த மே, ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பரிவர்த்தனை வர்த்தக நிதிகளிலிருந்து (இ.டி.எஃப்.) 1.3 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் இந்தியாவிலிருந்து வெளியேறியுள்ளன. இதில் ஒரு பகுதி தொகை மட்டுமே பிற நாட்டு இ.டி.எஃப்.களிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்துள்ளது.
எந்த ஒரு நாட்டின் நிதி நெருக்கடியிலும் முதலில் பாதிக்கப்படுவது வங்கித் துறையே. ஆனால், கடந்த காலங்களில் நிகழ்ந்தது போலவே, தற்சமயம் ஏற்பட்டுள்ள சர்வதேச நிதி நெருக்கடியிலும் இந்திய வங்கிகள் நிலைமையைச் சிறப்பாகச் சமாளித்துவிடும் என்று வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில் லாபம் அடையப் போவது யார்? இழப்பை சந்திக்கப்போவது யார்? அதிக அளவில் லாபம் அடையப் போவது யாருமே இல்லை என்றே தோன்றுகிறது. ஓரளவு லாபம் அடையக் கூடியவர்கள் இந்திய ஏற்றுமதியாளர்கள். அவர்களைவிட கூடுதலாக லாபம் அடையக்கூடியவர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களும் அவர்களது இந்தியவாழ் குடும்பத்தினரும் ஆகும்.
சாதாரணமாக ரூபாய் நாணய மதிப்பு சரியும்போது ஏற்றுமதியாளர்கள் சிறப்பான லாபம் அடைவார்கள். ஆனால், இப்போது திடீரென ஏற்பட்டுள்ள ரூபாயின் வீழ்ச்சியால் இரண்டு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, பல ஏற்றுமதியாளர்கள், தங்கள் குறைந்தபட்ச லாபத்தை உறுதி செய்து கொள்வதற்காக, ரூ.46 அல்லது ரூ.47 என்ற அளவில், முன்பேர அடிப்படையில் தங்களுக்கு வந்துசேர வேண்டிய டாலர்களை பாதுகாத்துக் கொண்டிருப்பார்கள். இப்போது டாலருக்கு கிட்டத்தட்ட 50 ரூபாய் என்று ஏறியபோதும் அந்த லாபம் அவர்களுக்குக் கிடைக்காமல், முன்பேர அடிப்படையில் என்ன ஒப்பந்தம் செய்துகொண்டார்களோ அதுதான் கிடைக்கும். எனினும் பெரிய லாபம் கிடைக்காவிட்டாலும் ஓரளவு லாபம் நிச்சயமாகக் கிடைக்கும்.
இரண்டாவதாக, ஏற்றுமதியாளர்களில் பலர் தங்கள் பொருள்களின் உற்பத்திக்குத் தேவையான சில மூலப் பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வார்கள். உதாரணமாக, எண்ணெய் கம்பெனிகள், எரிவாயு, அடிப்படைக் கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்கள், உரம், மோட்டார் டயர் உற்பத்தி செய்பவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். அந்த மாதிரி நிறுவனங்கள் தாங்கள் இறக்குமதி செய்துவரும் மூலப் பொருள்களுக்கு ரூபாய் மதிப்பு சரிவின் விளைவாகக் கூடுதல் பணம் தர வேண்டிவரும். இவர்கள் செய்யும் ஏற்றுமதியினால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்றாலும் இறக்குமதி செய்வதால் கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருக்கும். ஆக, மேற்கூறிய இரண்டு காரணங்களால், ஏற்றுமதியாளர்களுக்கும் மிதமான லாபம் மட்டுமே கிடைக்கும்.
முழுமையான லாபத்தைக் காண இருப்பவர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களும், இந்தியாவில் வாழும் அவர்களது குடும்பத்தினரும்தான். அவர்கள் இந்தியாவுக்கு ஒரு டாலர் அனுப்பினால் ரூ.46 அல்லது ரூ.47 ஆக கிடைத்திருக்கக்கூடிய தொகை இப்போது ரூ.49 அல்லது கிட்டத்தட்ட ரூ.50 ஆக கிடைக்கும்.
உலகிலேயே வெளிநாடுகளில் வாழும் மக்களில் அதிகபட்சமாக இருப்பவர்கள் இந்தியர்கள் அல்லது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்கள், தங்கள் சொந்த நாட்டுக்குக் குடும்பச் செலவுகளுக்காகவும் முதலீடுகள் செய்வதற்காகவும் அனுப்பும் பணம் உலகிலேயே இந்தியாவுக்குத்தான் அதிகமாக வருகிறது.
தற்போதுள்ள நாணய மதிப்பு சரிவை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே, அதாவது கடந்த 2010}ம் ஆண்டிலேயே, இந்தியாவுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பி வைத்த தொகை 55 பில்லியன் டாலர் ஆகும். சீனாவுக்கு வெளிநாடுவாழ் சீனர்களிடமிருந்து வந்த தொகை 51 பில்லியன் டாலர் ஆகும். மூன்றாவது இடத்தில் உள்ள மெக்ஸிகோ 22.6 பில்லியனைப் பெற்றது.
இப்போது ரூபாயின் நாணய மதிப்பு குறைந்துள்ள நேரத்தில், சவூதி அரேபியா, ஓமன், யூ.ஏ.இ. பஹ்ரைன், கத்தார் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு அனுப்பும் தொகையின் மதிப்பு கணிசமாக அதிகரிக்கும் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் ஒட்டுமொத்த தொகையில் 30 சதவிகிதம் மேற்கூறிய "கல்ஃப்' நாடுகளிலிருந்துதான் வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ரூபாயின் நாணய மதிப்பு குறைந்துள்ள நிலையில் இதனால் இழப்பைச் சந்திக்கப் போகிறவர்கள் இறக்குமதியாளர்களே. பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வகை சரக்குகளை இறக்குமதி செய்திடும் நிறுவனங்கள், மூலதன தளவாடங்கள் ஆகிய பொருள்களை இறக்குமதி செய்திடும் அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார்துறை நிறுவனங்கள், தனி நபர்கள் என அனைவருமே இழப்பைச் சந்திப்பார்கள்.
எது எப்படி இருந்தாலும், உலகப் பொருளாதார நிலையில் தற்சமயம் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை சிறிதளவாவது சீர் அடைந்தவுடன், கணிசமான அளவு வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு கூடுதலாக வரும் என்பதில் ஐயம் இல்லை. அதற்கு முக்கிய காரணங்கள் இந்தியாவில் உள்ள வலுவான வங்கித்துறை மற்றும் அதை வழிநடத்தும் பாரத ரிசர்வ் வங்கியின் சீரிய செயல்பாடு. இன்னொரு பக்கம் பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளைச் சிறப்பாக நெறிப்படுத்தும் "செபி'க்கும் இந்தப் பெருமையில் பங்குண்டு.