கட்டுரைகள்

அவசர உலகில்...

 ஒவ்வொரு நாளும் எவ்வளவோ நிகழ்வுகளைப் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம். ஆனால், சில செய்திகள்தான் நெஞ்சைத் தைக்கின்றன, மனம் பதபதைக்கிறது; "என்ன கொடுமையப்பா?' என்று சீயோன் பள்ளியில் படித்த குழந்தை ஸ்ருதிய

ஆர். நட​ராஜ்

 ஒவ்வொரு நாளும் எவ்வளவோ நிகழ்வுகளைப் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம். ஆனால், சில செய்திகள்தான் நெஞ்சைத் தைக்கின்றன, மனம் பதபதைக்கிறது; "என்ன கொடுமையப்பா?' என்று சீயோன் பள்ளியில் படித்த குழந்தை ஸ்ருதியின் கோர மரணம் எல்லோர் மனதையும் பாதித்தது.

 இத்தகைய விபத்துகளுக்கு முடிவே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. சில நாள்கள் சம்பவத்தைப்பற்றிய சர்ச்சை விவாதிக்கப்படும். அதற்குள் வேறு ஏதாவது சம்பவம் நிகழும். பழைய சம்பவம் மறக்கப்படும்.

 கோயம்பத்தூரில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் முஸ்கான், ரித்திக் என்ற இரண்டு பச்சிளம் குழந்தைகளை வேன் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவர் பணத்துக்காகக் கடத்தி பின்பு கொன்ற குரூர சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மோகன்ராஜ் வழக்கமாக இந்த இரண்டு குழந்தைகளையும் வேனில் பள்ளிக்கு அழைத்துச் செல்பவன். அவன் மனதில் இத்தகைய குரூர எண்ணம் எவ்வாறு வந்தது? தனிமனித ஒழுக்கச் சீரழிவு இந்த அளவுக்குப் போய்விட்டதே?

 தினமும் பள்ளிக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பல ஆபத்துக்கு உள்ளாகிறார்கள். பள்ளி சென்று வருவதே பெரிய சவாலாக உள்ளது என்று சில வருடங்களுகளுக்கு முன் சென்னையில் பள்ளிச் சிறுவன் ஹர்ஷன் விபத்தில் இறந்தபோது பலர் கூக்குரல் எழுப்பினர். அதுவும் அந்தச் சிறுவன் பள்ளியின் வேனில் வீட்டுக்குத் திரும்பி, வண்டியிலிருந்து இறங்கி தந்தையின் கண்முன்னாலேயே அதே பள்ளி வேன் ஏறி உயிரிழந்தான்.

 சீயோன் பள்ளி சுருதி விபத்துக்கு ஒரு வாரத்துக்குள் ஆவடியில் இன்னொரு விபத்து. ஒன்றரை வயது சஞ்சய் தனது சகோதரர்கள் சந்தோஷ், சுதாகர் பள்ளிக்கு வேனில் செல்வதைப் பார்க்கையில் பள்ளி வேன் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு இறந்தான், அதுவும் தாய் கண்ணெதிரில்.

 ஜூலை 27-ம் தேதி மூன்று வயது சுஜிதா ஆம்பூர் ஈச்சம்பட்டு அருகில் பள்ளி வேனில் சிக்கி உயிரிழந்தாள். ஆகஸ்ட் 3-ம் தேதி மதுரைக்கு அருகில் ஆறு வயது ஜெயலட்சுமி பள்ளியிலிருந்து அதிகக் குழந்தைகளை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோவிலிருந்து விழுந்து உயிரிழந்தாள்.

 சுருதி, ஹர்ஷனுக்கு அவர்களது பள்ளி வேனே எமனாக வாய்த்ததுபோல காஞ்சீபுரம் படப்பை அருகில் நடந்த விபத்தில் ஐந்தரை வயது ஆகாஷ் பள்ளி வேனைவிட்டு இறங்கி சாலையைக் கடக்கும்பொழுது அதே வேன் அவன் மீது ஏறியது; என்ன கொடுமை?

 சில வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த ஹர்ஷன் விபத்திற்குப் பின் எல்லா பள்ளி வாகனங்களிலும் ஓட்டுநரைத்தவிர நடத்துநரும் பணி அமர்த்தப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்படி இருந்தும் ஆகாஷ் அவனது பள்ளி ஊர்தியிலேயே சிக்கி உயிரிழந்தான்.

 சில மாதங்களுக்கு முன்னால் பஞ்சாப் மாநிலம் அம்பாலா மாவட்டம் பேகதா என்ற இடத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு ஏற்றிச் சென்ற மினி வேன், லாரியோடு மோதியதில் 11 குழந்தைகள் மாண்டன, இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தன. இது தவிர பொது இடங்களில் அரசுத்துறையே மேற்கொள்ளும் பல்வேறு செப்பனிடும் பணிகளில் பள்ளங்கள் நிரப்பப்படாமல் விட்டுவிடுவதால் விளையாடும் குழந்தைகள் இத்தகைய குழிகளில் சிக்கி உயிரிழக்கும் விபத்துகள் அதிகமாக நிகழ்கின்றன. இத்தகைய விபத்துகளில் உயிரைக் காப்பாற்றுவது மிக கடினம். அதற்குத் தேவையான கருவிகளும் உடனடியாகக் கிடைப்பதில்லை.

 ஹரியாணா மாநிலத்தில் மாஹி என்ற 4 வயது சிறுமி தண்ணீருக்காக ஆழமாகத் தோண்டப்பட்ட ஆழ்துளைக் குழியில், கடந்த ஜுன் மாதம் தவறி விழுந்து சிக்கிக் கொண்டாள். அதுவும் அன்று அவளது பிறந்த நாள். அந்த கொண்டாட்டத்தில் விளையாடும்பொழுது அதலபாதாளத்தில் விழுந்தாள். காவல்துறை, ராணுவ வீரர்கள், தேசிய ராணுவ வீரர்கள் 70 அடி குழியிலிருந்து குழந்தையை மீட்பதற்காகப் போராடினர். விழுந்த குழிக்குப் பக்கத்தில் இன்னொரு குழி தோண்டி அடியில் இரண்டு பள்ளங்களையும் இணைக்கும் சுரங்கப் பாதை அமைத்து குழந்தையை மீட்கும் நுட்பமான பணியை நிறைவேற்ற 48 மணி நேரம் பிடித்தது. இறந்த குழந்தையைத்தான் எடுக்க முடிந்தது. அதன் பிறகு குழி வெட்டியவர் மீது, கவனக்குறைவாக இருந்து குழியை மூடாததற்காகக் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், விழிப்புணர்வு வந்ததா என்றால் அது கேள்விக்குறி. அடுத்த விபத்து நிகழ காத்துக் கொண்டிருக்கும்.

 பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கு உடனடியாகத் தக்க நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளியின் வேன்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், பள்ளி நிர்வாகத்தின் கடமைகள், பெற்றோர்களின் பொறுப்பு, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் உரிய நடவடிக்கை இவையெல்லாம் ஒருங்கிணைந்தால்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

 தில்லிக்கு அருகில் பல குழந்தைகள் உயிரிழந்த சாலை விபத்து சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் இத்தகைய விபத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. அதன்படி குழந்தைகள் பயணிக்கும் எல்லா பள்ளி வாகனங்களுக்கும் மஞ்சள் நிறம் பூசப்பட வேண்டும்.

 பள்ளி வாகனம் என்ற அறிவிப்புப் பலகை வண்டியின் முன் மற்றும் பின் பகுதியில் வைக்கப்பட வேண்டும். அவசர சிகிச்சைப் பெட்டி இருக்க வேண்டும். வேகக்கட்டுப்பாடுக் கருவி பொருத்த வேண்டும். வண்டியின் ஜன்னலில் பாதுகாப்பு வலைக் கம்பிகள் இருக்க வேண்டும். வண்டியில் கதவுகள் பூட்டப்பட வேண்டும். வண்டியில் குழந்தைகளைக் கவனிக்க நடத்துநர் அமர்த்தப்பட வேண்டும்.

 வண்டி ஒட்டுநர் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பேருந்து ஓட்டும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறல்கள் குற்றங்களுக்கான தண்டனை பெற்றிருக்கக் கூடாது. மதுபானம் அருந்தி வண்டி ஓட்டியதற்கான குற்றம் ஒருமுறை புரிந்திருந்தால்கூட அவரை நியமிக்கக் கூடாது. பள்ளியின் ஆசிரியர் அல்லது குழந்தைகளின் பெற்றோர் சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது வண்டியில் பயணம் செய்து பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

 2011-ம் வருடம் 3,90,884 மக்கள் விபத்துகளில் உயிர் இழந்தனர். 2001-11, பத்து வருடங்களில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பது கவலைக்குரியது. மக்கள் தொகைக் கணக்குப்படி 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30 சதவிகிதம்; விபத்தில் மடியும் குழந்தைகள் மொத்த உயிரிழப்பில் சுமார் 7 சதவிகிதம்.

 மேலும் 61 சதவிகிதம் 15 வயதுலிருந்து 44 வயதுக்கு உள்பட்டவர்கள்தான் இம்மாதிரி விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். உழைக்கும் கரங்களை இழக்கிறோம், பாதிப்பு அந்தந்த குடும்பத்துக்கு மட்டுமல்ல, மொத்த சமுதாயத்துக்கும் ஏற்படுகிறது.

 பள்ளி வண்டிகள் பிரத்யேகமாக நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும். ஒட்டுநர்களுக்கு பள்ளி வாகனம் கவனமாக ஓட்டுவதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகள் வண்டியில் ஏறி அமர்ந்த பிறகுதான் நகர வேண்டும். பயிற்சிபெற்ற நடத்துநர் ஒவ்வொரு வண்டியிலும் குழந்தைகளை மேற்பார்வையிட இருக்க வேண்டும்.

 குழந்தைகள் பள்ளி வாகனங்களிலிருந்து இறங்கி சாலையைக் கடக்கும்பொழுது அதிகமான விபத்துகள் நிகழ்கின்றன. குழந்தைகள் வாகனத்தின் முன்னால் அல்லது பின்னால் சாலையைக் கடக்கக் கூடாது. எதிரும் புதிரும் வரும் வாகனங்களைப் பார்க்க முடியாது. பள்ளியின் வாகனம் நகர்ந்த பிறகு முன்னும் பின்னும் பார்த்து சாலையைக் கடக்க வேண்டும்.

 குழந்தைகள் பயணிக்கும் வாகனங்கள் தனியாருடையதோ அல்லது பள்ளியின் பராமரிப்பில் உள்ளதாகவோ இருந்தாலும் விதிகள் கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை. பள்ளியின் உயர்நிலைக் குழு மேற்பார்வையிட வேண்டும்.

 மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அரசாங்கம் வழங்குகிறது. அவர்களுக்கென்று காலையும் மாலையும் சிறப்பு அரசு ஊர்திகள் ஏற்பாடு செய்தால் மக்களுக்கு நிம்மதியைத்தரும். குழந்தைகள்தான் நமது நாட்டின் எதிர்காலத்தை தாங்கப்போகிறார்கள். அவர்களைப் பேணுவது நமது கடமை.

 அசாம் மாநிலத்தில் இனக்கலவரம் மலைவாழ் மக்களுக்கும் அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து இடம் பெயர்ந்தவருக்குமான பிரச்னை. பலர் வீடுகள் உடைமைகள் இழந்து தவிக்கின்றனர். அடி மேல் அடி ஏழைகளுக்குத்தான். இதன் எதிரொலியாக மும்பையில் கண்டன ஊர்வலத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கானவர் திரண்டனர்.

 காவல்துறையினர் சமயோசிதமாக கூட்டத்தைச் சமாளித்து கலைத்துவிட்டனர். துப்பாக்கி சூடு தவிர்க்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் அசம்பாவிதம் நிகழ வாய்ப்பிருக்கிறது என்று விஷமிகள் வதந்தி கிளப்பி விட்டனர். அதன் விளைவு, வேலை நிமித்தமாக பெங்களூரில் தங்கி இருக்கும் பல அசாமியர்கள் தங்கள் மாநிலத்தை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.

 நமது நாட்டின் வலிமையே வேற்றுமையில் ஒற்றுமை. அவை குலையும் வகையில் இத்தகைய நெருடல்கள். இவை தற்காலிக இடரல்களாக மறைய வேண்டும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். நாட்டுப் பற்று, சகோதரத்துவம், பரஸ்பர ஒற்றுமை போன்ற நற்குணங்கள் நாட்டின் இறையாண்மையோடு ஒன்றியவை, இதற்கு அரசை நாட வேண்டியதில்லை. மக்களின் உள்ளக்கிடக்கையிலிருந்து வரவேண்டியவை.

 விஷமிகளால் தூண்டப்படும் விபத்துகள் ஒருபுறம். அன்றாடம் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் மறுபுறம். இரண்டு வகை நிகழ்வுகளாலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள், அதுவும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள்.

 அவசர உலகில் இத்தகைய விபத்துகள் தவிர்க்க முடியாதவை என்று விட்டுவிடக் கூடாது. விழிப்புணர்வும் விதிகளை மதிக்கும் கவனமும் இருந்தால் விபத்துகள் குறையும். தூண்டப்படும் விபத்துகளை ஒடுக்க வேண்டும். ஏனைய விபத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

 ""விஷமிகளால் தூண்டப்படும் விபத்துகள் ஒருபுறம்.

 அன்றாடம் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் மறுபுறம். இரண்டு வகை நிகழ்வுகளாலும் பாதிக்கப்படுவது

 பொதுமக்கள், அதுவும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள்''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

நல்லகண்ணு மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: நடிகர் ரஜினிகாந்த்!

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

SCROLL FOR NEXT