கட்டுரைகள்

மின்வெட்டுக்கு ஜே!

ராஜசேகர்

தமிழகம் முழுவதும் மின்வெட்டு பற்றிய புலம்பல்கள் பரவலாக இருக்கின்றன. இதற்கிடையிலும் "மின்வெட்டே நீ வாழ்க!' என்று சொல்லத்தக்க விதத்தில் மக்களிடையே ஆக்கப்பூர்வமான சில மாறுதல்களும் தோன்ற ஆரம்பித்துள்ளன.

மின்வெட்டு நீடிப்பதையோ, நிரந்தரமாவதையோ யாரும் விரும்பவில்லை; அதே சமயம் மின்சாரம் தந்த வசதிகளால் வாழ்க்கையில் நல்ல அம்சங்களை இழந்ததை இப்போதுதான் நினைவுகூர ஆரம்பித்திருக்கிறோம். அந்த வகையில் மேலும் சிலவற்றையும் நினைத்துப் பார்ப்பது நலம்.

அடிக்கடி ஏற்படும் மின்சார வெட்டு காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை - அதிலும் குறிப்பாக - நெடுந்தொடர்களைப் பார்க்க முடியாமல் பலர் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

பொழுது போவதற்கு செய்தித் தாள்களையும் பருவ இதழ்களையும் படிக்கத் தொடங்கியுள்ளனர்.

மகளிருக்காகவே வெளிவரும் வார

இதழ்களின் விற்பனை கூடி

வருவதை "நியூஸ்டால்' உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குடும்பத் தலைவிகள் செய்தித்தாளைக் கையில் எடுத்தாலே பெரும்பாலும் அதை அடுக்கி வைப்பதற்காகவோ அல்லது வாசலில் வந்து நிற்கும் பழைய பேப்பர்காரரிடம் போடுவதற்காகவோ இருக்கும். இந்த இரண்டும் அல்லாது மூன்றாவது காரணமாக படிப்பதற்கும் இப்போது நேரத்தைச் செலவிடுவதை அறிய முடிகிறது.

பொதுவாக மாலை வேளைகளில் கோயிலுக்குச் செல்வது தமிழர்கள் வழக்கம். 1970-களின் பிற்பகுதியில் தூர்தர்ஷன் ஒளிபரப்பு பிரபலமாகத் தொடங்கியபோது மக்கள் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தனர். அதிலும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு "ஒளியும் ஒலியும்' எப்போது ஒளிபரப்ப ஆரம்பித்தார்களோ அப்போது வீதிகளே வெறிச்சோடின. கோயில்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

இப்போதோ வீட்டுக்கு வீடு டி.வி, அதிலும் வசதிமிக்க குடும்பத்தில் அறைக்கு அறை டிவி என்றாகிவிட்டது. சமீபகாலமாக மின்வெட்டின் உபயத்தால் மக்கள் மீண்டும் கோயில் பக்கம் அதிகமாக வருவதைக் காணமுடிகிறது.

முழு நேரமும் டி.வி. சீரியல்களில் மூழ்குவதற்குப் பதில் நடுநடுவே ஆண்டவனையும் தரிசிக்க வாய்ப்பளித்த மின்வெட்டைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பெரியவர்களும் கோயிலுக்குப் போக முடியாவிட்டாலும் வீட்டிலேயே சஷ்டி கவசம் படிப்பது போன்றவற்றில் மீண்டும் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

ஆடவர்களோ வேறு வழியின்றி பூங்காக்களுக்கு நடைப்பயிற்சி செல்கின்றனர். இதனால் தொப்பை குறைந்து ஆரோக்கியம் மேம்படவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இப்போதெல்லாம் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் காலையில் சீக்கிரமே எழுந்து குறித்த நேரத்தில் பள்ளிக்குப் புறப்பட்டு விடுகிறார்கள். முழு நேரமும் மின்சாரம் இருக்கும்போது இரவு 10, 11 மணிவரையிலும் டான்ஸ், பாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு காலையில் தாமதமாக எழும் பழக்கம் இப்போது இல்லை.

வேறு வழியில்லாமல் இரவில் 9 மணிக்கே தூங்கப் போய்விடுகிறார்கள்.

இப்போதெல்லாம் கல்யாணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் என்று உறவினர்களை அழைக்கப் போகிறவர்களுக்கு போகிற இடமெல்லாம் ராஜ உபசாரம்தான். பழைய விஷயங்களைப் பேசவும் அன்பைப் பரிமாறவும் நேரம்

இருக்கிறது, காரணம் வீட்டில்

இருப்பவர்கள் டி.வி.யைப் பார்க்க

முடியாததால் நெடுந்தொடர்களை மறந்து பேசிக் களிக்கின்றனர்.

முன்பெல்லாம் 24 மணி நேரமும் மின்சாரம் இருந்தபோது வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த மக்கள் இப்போது வீட்டுக்கு வெளியே வந்து நிற்கவும் அமரவும் புழங்கவும் ஆரம்பித்துவிட்டனர். அக்கம்பக்கத்தாரிடம் பேசுவதற்குத் தயக்கம் காட்டியவர்கள் கூட ''உங்க வீட்டில இன்வெர்ட்டர் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கிறது?'' என்று மின்வெட்டைப் பற்றிப் பேச ஆரம்பித்து அரசியல், ஆன்மிகம், படிப்பு, வேலை என்று எல்லாவற்றையும் பேசி மகிழ்கிறார்கள்.

மின்வெட்டு வேண்டுமானால் தாற்காலிகமாக இருந்துவிட்டுப் போகட்டும், இந்த அன்பும் பரிமாறல்களும் நிரந்தரமாக நம்மோடு நீடிக்கட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாலு பிரசாத் மகளுக்கு எதிராக லாலு பிரசாத் போட்டி?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

SCROLL FOR NEXT