கட்டுரைகள்

அழிவை நோக்கி, மனிதப் பயணம்!

எங்கும் இதே பேச்சாக இருக்கிறது. உலகம் அழிவது யாருக்கும் சம்மதமில்லை. இருந்தாலும் அப்படி ஓர் அழிவு வருமானால் என்ன செய்வது? எங்கு போவது? எப்படி இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பது?

உதயை மு. வீரையன்

எங்கும் இதே பேச்சாக இருக்கிறது. உலகம் அழிவது யாருக்கும் சம்மதமில்லை. இருந்தாலும் அப்படி ஓர் அழிவு வருமானால் என்ன செய்வது? எங்கு போவது? எப்படி இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பது? இதுவரை ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம் என்ன செய்வது? அன்பான குழந்தைகள், ஆதரவான உறவுகள், அறிவார்ந்த நட்புகள் எல்லாரையும் விட்டுப் பிரிய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதா?

இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. இதற்கான விடை தேடி அலைபவர்கள் இல்லாமல் இல்லை; ஆனால் இதற்கான விடைகள் கிடைக்கவில்லை.

உயிர்மேல் ஆசையில்லாதவர் யார்? மற்ற மற்ற உயிரினங்களைவிட மனிதர்களுக்கு உயிர்மேல் ஆசை அதிகம். மனித வாழ்க்கை என்பது சுமார் 100 ஆண்டுகளாகும். மற்ற உயிரினங்களுக்கு ஆயுள் குறைவுதான்; இருந்தாலும் மனிதன் ஊழி ஊழிக்காலம் உயிர் வாழ்வதைப்போலவே எண்ணிக் கொண்டு பேராசையோடு செல்வங்களைச் சேர்க்கிறான். உலகம் அழியப் போகிறதாமே என்று கேள்வி கேட்டுக்கொண்டு அமைதி இல்லாமல் அல்லாடுகிறான்; தடுமாறுகிறான்.

எதற்கும் ஒரு காரணம் இருக்கும் இல்லையா? பிரளயம் வந்து உலகம் அழிவது பற்றி புராண இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன. கடல்கோள் ஏற்பட்டு குமரிக்கண்டம் அழிந்ததைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்றன. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருந்த மனிதன் அண்மையில் ஏற்பட்ட ஆழிப் பேரலை என்னும் சுனாமியை நேரில் பார்த்துவிட்டதால் கவலைப்பட ஆரம்பித்தான்.

தமிழ்ச் சங்கங்களின் வரலாற்றை ஆராய்கிறபோது ஊழி எனப்படும் பிரளயம் பற்றியும் உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏழு மேகங்கள் திரண்டு, உருண்டு, குமுறி இடையறாது மழை பொழிய, கடல்கள் ஆரவாரம் செய்து ஓங்கி எழுந்து புரண்டு, பெருகி, நாடுகளைத் தன்னகப்படுத்தி அழிப்பதே ஊழியாகும். இதனையே பிரளயம் என்று கூறுவர் என்பது அவர்கள் கருத்து.

முதல் ஊழி கி.மு. 14085 என்றும் இடை ஊழி கி.மு. 9564 என்றும் கடை ஊழி கி.பி. 145 என்றும் பிரளயம் வந்தது பற்றி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

""பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள'' என்றது சிலப்பதிகாரம்.

குமரிக் கோடும் - குமரியாறும் - தலைச்சங்கம் இருந்த தென் மதுரையும் கி.மு. 9564-இல் ஏற்பட்ட கடல் கோளாலேயே அழிவுற்றன. இதனை உரையாசிரியர்கள், ""இரண்டாம் ஊழி'' (கடல்கோள்) என்று கூறுகின்றனர்.

இவ்வாறு உலக அழிவுக்கான பிரளயங்கள் ஏற்படுவது என்பது எப்போதாவது அரிதுக்கும் அரிதான நிகழ்ச்சிகளாகும். இதனைச் சோதிடர்கள் கணக்கிட்டு மாறுபட்ட கருத்துகளையே கூறி வருகின்றனர். சோதிடம் என்பது கணிதம் என்றால் எல்லோருக்கும் ஒரே விடைதானே வரவேண்டும்?

மேற்கத்திய சோதிடர்கள் 12-12-2012 அன்று உலகம் அழிந்துவிடும் என்றும், அன்று தொடங்கும் உலக அழிவு டிசம்பர் 21, 2012 அன்று முழுமையடைந்து உலகமே காணாமல் போகும் என்றும் கூறுகின்றனர். இந்திய சோதிடர்கள், இப்போது நடப்பது கலியுகம் என்கின்றனர். இந்த யுகத்தின் முடிவு என்பது உலகின் அழிவு என்றும் கூறுகின்றனர்.

கலியுகம் என்பது 4,32,000 ஆண்டுகள் கொண்டது. கலியுகம் பிறந்தது கி.மு. 3102 என்றால் இதுவரை 5114 ஆண்டுகள்தான் முடிவடைந்துள்ளன. இன்னமும் 4,26,886 ஆண்டுகள் உள்ளனவே!

உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி சிறிது காலமாக கொஞ்சம் கொஞ்சமாகக் கசிய ஆரம்பித்து இப்போது உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. வரும் டிசம்பர் 21 அன்று கெடு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மயன் காலண்டரை நோக்கிக் கையை நீட்டுகின்றனர். அது என்ன மயன் காலண்டர் என்று கேட்கிறீர்களா?

கிறிஸ்து பிறப்பதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன் மயன் என்றோர் இனம் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்தது. வானவியல் சாத்திரங்களிலும் கட்டடக் கலையிலும் கணித சூத்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர் என்று அவர்களைப் பற்றி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு மயன் காலண்டர்தான் ஒரே ஒரு சாட்சியாகும்.

தென் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த மயன் சமூக மக்கள் பயன்படுத்திய காலத்தின் கணக்கு முறைகளைக் கொண்டு இந்த நாள்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது. கி.மு. 3113 தொடங்கி கி.பி. 2012 டிசம்பர் 21-ஆம் தேதியுடன் இந்த நாள்காட்டி முடிவுக்கு வருகிறது என்கின்றனர்.

வான சாத்திரங்களில் தேர்ச்சி பெற்ற மயன் இனத்தைச் சேர்ந்தவர்கள் 2012 டிசம்பர் 21 உடன் நாள்காட்டியை முடித்துக்கொள்ளக் காரணம் என்ன? அதற்குப் பிறகு உலகம் இருக்காது என்பதுதான் மயன் காலண்டர் கூறும் ரகசியம் என்று இதற்குப் பொருள் கூறுகின்றனர். மக்கள் அச்சமடைய இதுவே காரணமாகும்.

உலகம் அழியப்போகிறது என்பதை உலகம் எங்கும் மக்கள் பரவலாக நம்ப ஆரம்பித்திருக்கின்றனர். கணினியின் வலை தளங்களிலும் இது தொடர்பாக ஏராளமான வதந்திகள் உலவ ஆரம்பித்துள்ளன. இப்போது தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது.

இவ்வாறு ஆன்மிகக் காரணங்கள் கூறப்பட்டாலும் மறுபக்கம் அறிவியல் காரணங்கள் அனைவரையும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறது. பருவகால மாறுதல், மழையின்மை, சுற்றுச்சூழல் கேடு காரணமாக புவி வெப்பமாதலால் ஏற்படும் அழிவு மனித குலத்தைச் சிந்திக்க வைத்திருக்கிறது.

கத்தார் நாட்டில் தோஹா நகரில் ஐ.நா. அவையின் சுற்றுச்சூழல் பேச்சுவார்த்தை கடந்த நவம்பர் 26 முதல் டிசம்பர் 7 வரை நடைபெற்றது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் இதுவரைச் செலவழித்த பெருமளவு கரியமில வாயுக்கழிவுகள் காரணமாகப் புவியின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து

வருகிறது.

இதற்குத் தீர்வு காணும் நோக்கத்தோடு பல்லாண்டு காலமாக ஐ.நா. அவையின் முயற்சியால் உலக நாடுகளின் இத்தகைய மாநாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் 18-ஆவது அமர்வாக தோஹாவில் நடந்த இப்பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட வளர்முக நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளிடம் சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தன.

வளர்ச்சியடைந்த நாடுகள் இன்றளவும் வெளியேற்றிவரும் கரியமில வாயுக்கழிவுகளின் அளவை கணிசமான

அளவு குறைக்க வேண்டும்; ஏற்கெனவே குவித்த கழிவுகள் காரணமாக புவிக்கோளம் கடுமையாக வெப்பமடைந்திருப்பதால் இடைவிடாமல் ஏற்பட்டுவரும் வெள்ளம், வறட்சி, ஆழிப் பேரலைகள் போன்ற இயற்கைச் சீற்றங்களால் வளர்முக நாடுகள் எதிர்கொண்டுள்ள பேரழிவுகளுக்கு வளர்ச்சியடைந்த நாடுகளும் நிவாரணம் அளிக்க

வேண்டும்.

மேலும் புவியின் வெப்பநிலை அதிகரிக்காமல் காக்க உலகின் அனைத்து நாடுகளும் கழிவு வெளியேற்றத்தைக்

கணிசமாகக் குறைக்கும் விதத்தில் உரிய தொழில்நுட்பங்களை வளர்முக நாடுகளுக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தின.

வளர்முக நாடுகளின் இந்தக் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று அமெரிக்காவும் மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளும் பிடிவாதமாக மறுத்ததன் விளைவாக ஐ.நா. அவையின் சுற்றுச்சூழல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்

கிறது.

இயற்கையோடு இயைந்துவாழ்ந்த சித்தர்களும் ஞானிகளும் உலகத்துக்கே வழிகாட்டினர். அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையே மக்களுக்கான பாடமாகும். ஆனால் மனித குலம் இதனைப் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்ட கேடுகளும் குழப்பங்களும் அதிகம். அறிவியல் வளர வளர இந்த முரண்பாடுகளும் வளர்ந்துகொண்டே வருகின்றன.

இயற்கையைச் சுரண்டும் மனிதர்களின் பேராசையால் பலவிதமான சுற்றுச்சூழல் பிரச்னைகள் உருவாகியுள்ளன. இதில் பூமி வெப்பமடைதல் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இன்னும் வெப்பநிலை உயரும்போது துருவப் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் உருகிக் கடலில் கலக்கும். இதனால் 2050-ஆம் ஆண்டில் கடல் மட்டம் 1.5 மீட்டர் அதிகரிக்கும். இதனால் கடலோரப்பகுதிகளிலுள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துபோகும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

""காக்கை குருவி எங்கள் சாதி - நீள் கடலும்

மலையும் எங்கள் கூட்டம்''

என்று பாடினார் பாரதியார். இப்படிப்பட்ட உலகளாவிய உயிர் நேயம் வளர்ந்தால்தான் மனித குலம் அழிவிவிலிருந்து தப்பிக்க முடியும். பூமிக்கு ஏற்படப்போகும் அழிவைச் சிறிது கற்பனை செய்து பாருங்கள். எந்த உயிரும் இல்லாமல் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியுமா? இயற்கையின் இந்த எச்சரிக்கையை எண்ணிப் பார்க்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.

''பரிணாம வளர்ச்சியில் நமது மூளை இப்போதுள்ள நிலையை அடைய 100 கோடி ஆண்டுகள் பிடித்தன. இந்த மூளையை உருவாக்க 1,200 கோடி உயிர் அணுக்கள் வாயிலாகச் செயல்படுத்தும் மனித இனத்துக்கும், பல கோடிக்கணக்கான சிந்தனைத் துளிகளை இணைத்து யோசனைகளை உருவாக்க வழிவகுத்த உலகத்துக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்...'' என்றார் டாக்டர் எம்.ஆர். காப்மேயர்.

உலகம் டிசம்பர் 21-ஆம் தேதி அழிகிறதோ இல்லையோ? மனித இனம் அழிவை நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது. இதனைத்தடுத்து நிறுத்தி அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க வேண்டிய கடமை மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT