முகப்பு
கட்டுரைகள்

ரயிலில் தீ விபத்துகளைத் தவிர்க்க...

கடந்தாண்டு "எங்கேயும் எப்போதும்' என்றொரு தமிழ்த் திரைப்படம் வெளியானது

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:07 PM
பகிர்:

கடந்தாண்டு "எங்கேயும் எப்போதும்' என்றொரு தமிழ்த் திரைப்படம் வெளியானது. அந்தப் படம், பஸ் பயண விபத்து ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை கன்னத்தில் அறைந்ததுபோல் சொல்லியிருந்தது.

அந்தப் படத்தில் இரண்டு அதிவேக பஸ்கள் மோதிக்கொள்ளும் காட்சிகளைப் பார்த்து, இனி பஸ் பயணத்தைத் தவிர்த்து ரயிலில் பயணம் செய்யலாம் என்ற எண்ணம்கூட ஏற்பட்டது.

  ஆனால் அந்த எண்ணத்தையும் தவிடுபொடியாக்கியது, ஆந்திரம் மாநிலம் நெல்லூர் அருகே ஏற்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்து. அந்த விபத்தில் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

Advertisement

  இந்தியாவில் மேல்தட்டு முதல் அடித்தட்டு மக்கள் வரை இப்போது அதிகம் பயணம் செய்வது ரயில்களில்தான். அந்த ரயில் பயணங்களிலும் அன்றாடம் உயிரை அடகு வைத்துத்தான் பல லட்சம் மக்கள் தங்களையும் அறியாமல் சென்றுகொண்டிருக்கின்றனர்.

   சென்னை அயனாவரத்தில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில், ரயில் பெட்டித் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்பக் கருத்தரங்கம் சமீபத்தில் நடைபெற்றது. அங்கு சில ஆராய்ச்சியாளர்கள் இந்திய ரயில் பெட்டிகள் குறித்தும், தீ விபத்து குறித்தும் சில அதிர்ச்சியான தகவல்களைத் தெரிவித்தனர்.

  இந்திய ரயில்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதைத் தடுப்பது கடினம் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தார். தீ விபத்து ஏற்பட்டால் அதனை முன் கூட்டியே தெரிவிக்கக் கூடிய கருவியைச் சாதாரண ரயில் பெட்டிகளில் பயன்படுத்த முடியாது என்பது முதல் காரணம். தீப்பிடித்திருப்பதை பயணிகள் உணர்ந்து செயல்படுவதற்குள் தீ பரவிவிடும் என்பது அடுத்த காரணம். அப்படியே பயணிகள் கவனித்தாலும் அதை என்ஜின் டிரைவருக்கோ கார்டுக்கோ தெரிவித்து வண்டியை நிறுத்துவதற்குள் அது பல கிலோமீட்டர் சென்றுவிடும் என்பது அதைவிட முக்கியம்.

 ஏ.சி. வகுப்பு பெட்டிகளில் மட்டுமே - தீ பரவுவதை முன்கூட்டிய அறிவிக்கக்கூடிய -  எச்சரிக்கைக் கருவியைப் பொருத்தி கண்காணிக்க முடியும். ஏ.சி. பெட்டிகளில்தான் வெளிக்காற்று உள்ளே புகாமல் கண்ணாடி ஜன்னல்களாலும் கதவுகளாலும் தடுக்க முடிகிறது. எனவே சாதாரண வகுப்புப் பெட்டிகளில் இந்தக் கருவியைப் பயன்படுத்தினாலும் பலன் தராது.

 வெளிநாடுகளில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் வெளிக்காற்று ரயிலின் உள்ளே புகாதவாறு வடிவமைக்கப்பட்டிருக்கும், அல்லது முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்டிருக்கும். இந்திய ரயில்களில் சாதாரண பெட்டிகள் மூடப்படாமல் இருப்பதால் சிறிய தீயும் வேகமாகப் பரவும்.

 ரயில் பெட்டிகளில் தீப்பிடிக்காமல் தடுப்பதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.

 கெரசின், டீசல், பெட்ரோல், பட்டாசு, அமிலங்கள் போன்ற எளிதில் எரியக்கூடியவற்றை ரயில்களில் எடுத்துச்செல்லக்கூடாது.

  சமையல் பாத்திரங்களுடன் அடுப்பெரிக்க கெரசின் ஸ்டவ் கொண்டுசெல்லும் வழக்கம் யாத்ரிகர்களுக்கு உண்டு. எனவே அவர்களுக்கு தீ விபத்து வாய்ப்பு குறித்து எடுத்துக்கூறி எச்சரிக்க வேண்டும்.

 சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களைப் போன்றவர்கள் ரயிலுக்குள்ளேயே பூஜைகள் செய்வதும் சூடம் கொளுத்துவதும் வழக்கம். அவர்களிடமும் அதிலுள்ள ஆபத்தை விளக்க வேண்டும். ரயிலுக்குள் உள்ள கழிவறையில் புகை பிடிப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  ரயிலுக்குள் படுக்கைகளுக்குப் பயன்படுத்தும் ரெக்சின், படுக்கைக்குள் திணிக்கப்படும் கல்நார், உள் அலங்காரத்துக்குப் பயன்படுத்தும் பாலிவினைல் பலகைகள், அழகுக்காக தீட்டப்படும் வண்ணப்பூச்சுகள் ஆகியவற்றின் தீப்பிடிப்பு தன்மை குறித்து நன்கு ஆராய்ந்து எளிதில் தீப்பிடிக்காத சாதனங்களையே பயன்படுத்தவேண்டும்.

 பெட்டிகளில் பொருத்தப்படும் மின்சார விளக்குகள், மின் விசிறிகள் ஆகியவை தரமானவையாக இருக்கவேண்டும். அவற்றின் மின்சார வயர்களும் மின் இணைப்புகளும் நல்ல தரத்தில் இருப்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.

 இவ்வாறெல்லாம் ரயில்வேதுறையும் பயணிகளும் ஒத்துழைத்தால் ரயில்களில் தீ விபத்து நேரிடாமல் தவிர்க்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments