முகப்பு
கட்டுரைகள்

கர்நாடகமும், ஜாதியமும்...

பழங்காலம் தொட்டே ஜாதி கட்டமைப்பு முறை இந்தியாவில் நிலைபெற்று வந்துள்ளது. சமூக அரங்கில் காட்சியளித்த ஜாதி, ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறிய பிறகு, அரசியல் அரங்கையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. தி

Updated On : 19 செப்டம்பர், 2012 at 10:53 PM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:36 PM

பழங்காலம் தொட்டே ஜாதி கட்டமைப்பு முறை இந்தியாவில் நிலைபெற்று வந்துள்ளது. சமூக அரங்கில் காட்சியளித்த ஜாதி, ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறிய பிறகு, அரசியல் அரங்கையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. திரைமறைவில் நடைபெற்று வந்த ஜாதி அரசியல், பின்னாளில் வட இந்தியாவில் பகிரங்கமாக அரங்கேறத் தொடங்கியது.

ஜாதியத்தின் வேர்கள் மிகவும் ஆழமாகப் பதிந்திருப்பதால் வட இந்தியாவில் ஜாதிய உணர்வுகள் மேலோங்கி காணப்படுவதில் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால், ஜாதிய உணர்வுகளுக்கு எதிராகப் பல சமூக சீர்திருத்தவாதிகள் தோன்றிய தென்னிந்தியாவில் ஜாதி அரசியல் காட்சிப் பொருளாகி இருப்பது வேடிக்கையானது.

ஆந்திரம், கேரளம், தமிழகம், கர்நாடகத்தில் நிலைத்திருந்த திரைமறைவு ஜாதி அரசியல் சில நேரங்களில் தோன்றி மறைந்திருக்கிறது.

Advertisement

கல்வி அறிவு பெருகப்பெருக ஜாதிய உணர்வுகள் மங்கத் தொடங்கியுள்ளன. வரலாற்றின் விசித்திரங்களின் ஒரு பகுதியாகக் கர்நாடகத்தில் மட்டும் அண்மைக்காலமாக ஜாதி அரசியல் தூக்கலாகக் காணப்படுகிறது.

கர்நாடகத்தின் சமூகக் கட்டமைப்பில் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். குறிப்பாக வட கர்நாடகத்தில் லிங்காயத்துகளும், தென் கர்நாடகத்தில் ஒக்கலிகர்களும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தைப் பெற்றுவந்துள்ளனர்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மதராஸ், மும்பை ராஜதானிகள், நிஜாம் அரசாட்சி, மைசூர் அரசாட்சி ஆகிய எல்லைக்கோடுகளுக்குள் கன்னடர்கள் அடைபட்டுப் பிரிந்திருந்தனர். 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கன்னடம் பேசும் மக்கள் மைசூர் மாநிலம் என்ற ஒரே குடையின் கீழ் வந்தனர்.

பழைய மைசூர் உடையார் ஆட்சியில் கோலோச்சிய ஒக்கலிகர் சமூகத்தினர், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு 2-ம் இடத்திற்குத் தள்ளப்பட்டனர்.

பூகோள ரீதியாக ஏற்பட்ட இந்த மாற்றம் சமூக ரீதியாக பல விளைவுகளை ஏற்படுத்தியது. சமூக மற்றும் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் சமூகக் குழுக்களாகத் தங்களை மேம்படுத்திக் கொள்ள லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகர்கள் கடும் போட்டியில் ஈடுபடத் தொடங்கினர். சமூக அதிர்வுகள் அரசியலிலும் தென்படத் தொடங்கின.

கர்நாடகத்தில் தோன்றிய காங்கிரஸ், ஜனசங்கம், ஜனதா கட்சி, பாரதிய ஜனதா, ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதாதளம் (மஜத) ஆகிய கட்சிகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகர்களிடையே கடுமையான போட்டி இருந்து கொண்டேயிருந்தது.

1956-ல் மைசூர் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, வட கர்நாடகத்தில் அதிகமாக வாழ்ந்து வந்த லிங்காயத்துகள் அரசியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். இதற்கு மாற்றாக, ஒக்கலிகர்களும் தொடர் போட்டியில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் விளைவாக, லிங்காயத்து சமுதாயத்தில் இருந்து எஸ். நிஜலிங்கப்பா, பி.டி. ஜாத்தி, எஸ்.ஆர். கந்தி, வீரேந்திர பாட்டீல், எஸ்.ஆர். பொம்மை, ஜே.எச். படேல், பி.எஸ். எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய 8 முதல்வர்கள் உருவாகியுள்ளனர்.

இதற்குப் போட்டியாக ஒக்கலிகர் சமுதாயத்தில் இருந்து கெங்கல் ஹனுமந்தையா, கடிதாள் மஞ்சப்பா, எச்.டி. தேவ கெüடா, எஸ்.எம். கிருஷ்ணா, எச்.டி. குமாரசாமி, சதானந்த கெüடா ஆகிய 6 முதல்வர்கள் உருவானார்கள்.

கர்நாடகத்தில் இதுவரை பதவி வகித்த 21 முதல்வர்களில் இந்த இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 14 பேர். மீதமுள்ள 7 பேரில் குண்டு ராவ், ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோர் பிராமணர்கள்.

கே.செங்கல்ராயரெட்டி - ரெட்டியார், எஸ்.பங்காரப்பா - ஈடிகா, எஸ்.தரம்சிங் - ராஜ்புத், வீரப்பமொய்லி - தேவடிகா, தேவராஜ் அரஸ் - அரசு சமூகத்தைச் சேர்ந்தவர். சுதந்திர இந்தியாவில் 65 ஆண்டுக்கால அரசாட்சியில் லிங்காயத்துகள் 26 ஆண்டுகள் கர்நாடகத்தை ஆட்சி செய்துள்ளனர். ஆனால், ஒக்கலிகர்கள் வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியை அனுபவித்துள்ளனர். பிற சமுதாயத்தினர் 24 ஆண்டுகள் பதவி வகித்துள்ளனர்.

கர்நாடக அரசியல் அரங்கில் லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் ஒருவரை ஒருவர் புறம்தள்ளி ஆட்சி நடத்த விரும்புவதால், ஆட்சி அதிகாரத்தில் இயல்பாக நிகழ்ந்திருக்க வேண்டிய சமூக நீதி கனவாகவே நிலைத்துவிட்டது.

கர்நாடகத்தில் நிலவும் இந்த விசித்திர ஜாதி அரசியலே இப்போது பாஜகவை பீடித்துள்ள அதிகாரப் போட்டிக்கும் அடிப்படைக் காரணமாகும். ஆதிக்க ஜாதிகளாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்ள லிங்காயத்துகளும், ஒக்கலிகர்களும் அண்மைக்காலமாகத் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில், எடியூரப்பாவைப் பதவி நீக்கியபோது, லிங்காயத்து மடாதிபதிகள், தொண்டர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அதேபோன்றதொரு நிலை, சதானந்த கெüடாவை நீக்கியபோது ஏற்பட்டுள்ளது.

ஒக்கலிகர் மடாதிபதிகள், ஜாதி சங்கத்தினர் வீதியில் இறங்கிப் போராடி வருகிறார்கள். பாஜகவில் ஏற்பட்டுள்ள ஜாதிச் சண்டையால் சமூகம் இரண்டுபட்டுக் கிடக்கிறது. அழுத்தப்பட்டிருந்த ஜாதிய உணர்வுகள் தட்டி எழுப்பப்பட்டுள்ளன.

இதன் விளைவுகளை இப்போது உணரமுடியாவிட்டாலும், 2013-ல் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பரவலாகக் காண முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

கர்நாடக அரசியல் கட்சிகளை ஆட்கொண்டுள்ள ஜாதி அரசியல், அரசு நிர்வாகத்திலும் படரத் தொடங்கினால், மக்களின் கதி என்னாகும் என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.