மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பார்ப்பதற்கு மிக எளிமையானவர் என்றாலும், தன் மனதில் பட்டதை நேரடியாகச் சொல்லிவிடுபவர். அடிக்கடி தனது எண்ணங்களை மாற்றிக்கொள்பவர்; அதுமட்டுமல்ல எதற்கெடுத்தாலும் ஆவேசப்படும் மனப்பான்மை கொண்டவர். ஆனாலும் அவரை யாரும் ராஜதந்திரி என்று ஏற்றுக்கொள்வதில்லை.
இதற்கு நேர் எதிரானவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மிகவும் மரியாதைக்குரியவர். எதற்கும் அவசரப்படமாட்டார்; அமைதியானவர். அவரின் மனதில் இருப்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஒரு விஷயத்தில் அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எதையும் வெளிப்படையாகப் பேசிவிடமாட்டார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் யாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து விவாதிக்க அண்மையில் இவ்விருவரும் சந்தித்துப் பேசினர். அவர்கள் இருவரும் என்ன பேசியிருப்பார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு ஞானி தேவையில்லை.
மம்தா பானர்ஜியிடம், சோனியா காந்தி என்ன சொல்லியிருப்பார். மம்தாஜி, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிட, உங்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜிதான் என்னுடைய முதல் சாய்ஸ். ஹமீத் ஹன்ஸாரி என்னுடைய இரண்டாவது சாய்ஸ். உங்கள் முடிவு என்ன என்று கேட்டிருப்பார்.
அதாவது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது. பிரணாப், தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கட்சியின் முடிவை மம்தா ஆதரிப்பார். அதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. ஒருவேளை பிரணாபை அவருக்குப் பிடிக்காவிட்டாலும், இரண்டாவது சாய்ஸான ஹமீத் ஹன்ஸாரி பெயரை முஸ்லிம் என்கிற காரணத்தால் அவர் ஒதுக்கிவிடமாட்டார். எப்படியோ நமது வழிக்கு மம்தா வந்துவிடுவார் என்றுதான் சோனியா நினைத்திருந்தார்.
ஆனால், மம்தா ஒன்றும் அப்படிப்பட்டவர் இல்லை. சோனியாவை சந்தித்துவிட்டு வெளியே வந்தவுடனேயே பத்திரிகையாளர்களைச் சந்தித்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் விருப்ப வேட்பாளர்களில் முதலிடம் பிரணாப் முகர்ஜிக்குத்தான். இரண்டாவது இடம்தான் ஹமீத் ஹன்ஸாரிக்கு என்று விஷயத்தை போட்டுடைத்தார். அதுமட்டுமல்ல; இது குறித்து சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்குடன் கலந்து ஆலோசித்துவிட்டு என்னுடைய முடிவைக் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
மம்தாவின் இந்த பரபரப்பான பேட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் விஷயத்தில் நாம் எவ்வளவு ரகசியமாக, ராஜதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறோம். மம்தா இப்படி எல்லாவற்றையும் வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டாரே? பிரணாப்தான் முதல்நிலை வேட்பாளர், அடுத்த இடம்தான் ஹன்ஸாரிக்கு என்று ரகசியமாக வைத்திருந்ததை வெளிப்படுத்தி விட்டாரே? என்று கலங்கிப் போய்விட்டார்.
இது நடந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே முலாயம் சிங்கை சந்திக்கச் சென்றுவிட்டார் மம்தா பானர்ஜி. இருவரும் நீண்ட நேரம் கலந்து ஆலோசித்த பின்னர், குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர்கள் அப்துல் கலாம், மன்மோகன் சிங், சோம்நாத் சாட்டர்ஜி ஆகிய மூன்று பேர்கள்தான். இவர்களில் யாரை வேண்டுமானாலும் களத்தில் நிறுத்தலாம் என்று கூறினர். மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் ஒருவர் பெயர் இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் அவர்கள் சோம்நாத் சாட்டர்ஜி பெயரை தெரிவு செய்திருந்தனர். சோனியாவும், முலாயம் சிங்கும் சேர்ந்துகொண்டு மறைமுகமாக ஏ.கே.அந்தோனியைத் தெரிவு செய்துவிடுவார்களோ என்ற சந்தேகத்தின் பேரில், அதைத் தடுக்கும் வகையில் சொல்லப்பட்ட பெயர்தான் மன்மோகன் சிங். எனினும் உண்மையில் அவர்கள் மனதில் எண்ணியிருந்தது அப்துல் கலாமின் பெயர்தான். ஏனெனில் 2002-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கு அடல் பிகாரி வாஜபேயி, அப்துல் கலாம் பெயரை சிபாரிசு செய்தபோது அதை அப்போது முன்மொழிந்தவர் முலாயம் சிங்.
அப்துல் கலாம் என்ற பெயரைச் சொன்னாலே சோனியா காந்திக்கு கோபம் வரும். இதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் தெரியாது. சமீபத்தில் பிரபு சாவ்லா உடனான பேட்டியில் முலாயம் சிங், குடியரசுத் தலைவர் வேட்பாளர் பதவிக்கு பிரணாப் முகர்ஜியை நிறுத்துவது குறித்து சோனியா எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். நான் மம்தாவுடன் ஆலோசித்த பின் கலாம் உள்ளிட்ட மூவரின் பெயரை அறிவித்தோம். அதன் பின் நான் சோனியா காந்தியை தனியாக சந்தித்தேன்.
இதைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்த சோனியா ஒப்புக்கொண்டார், என்று முலாயம் தெரிவித்துள்ளார். அதாவது மம்தாவும்-முலாயம் சிங்கும் சேர்ந்து கலாம்தான் வேட்பாளர் என்ற குண்டைத் தூக்கிப் போட்டவுடன், ஹன்ஸாரிதான் சரியான நபர் என்று நினைத்திருந்த சோனியா காந்தி, தனது நிலையை மாற்றிக்கொண்டு பிரணாப்தான் வேட்பாளர் என்ற முடிவுக்கு வந்தார்.
இந்த வகையில் முலாயம் சிங் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை வீழ்த்திவிட்டார். அதாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மம்தா சற்றும் பொருத்தமில்லாதவர்; நான் தான் அதற்கு சரியான ஆள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். முலாயம் அத்துடன் நிற்கவில்லை. பிரணாப்தான் எங்களின் வேட்பாளர்; அது சோனியாவின் விருப்பம் இல்லை என்று பேச ஆரம்பித்தார்.
இந்நிலையில் முலாயம், மம்தா இருவரும் ஏற்கெனவே குறிப்பிட்டபடி மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்த முடியாது; அவர் பிரதமர் பதவிக்குத்தான் மிகவும் பொருத்தமானவர் என்று காங்கிரஸ் மறுக்கும்படியாகிவிட்டது.
பிரணாப் முகர்ஜி மீது சோனியா காந்தி எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார் என்பது அரசியலில் ஆழ்ந்த அனுபவம் உள்ள ஒருசிலருக்கு மட்டுமே தெரியும். அதாவது, தனது நம்பிக்கைக்குரிய நபராக பிரணாப் முகர்ஜியை சோனியா கருதவில்லை என்பதுதான் உண்மை. ராஜீவ் காந்தி காலத்திலிருந்தே இது தொடர்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவரது அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்தவர் பிரணாப் முகர்ஜி. அப்போதைய நிலையில் அரசியலமைப்புச் சட்ட மரபுகளின்படி பிரணாப்தான் இடைக்காலப் பிரதமராக பதவியேற்றிருக்க வேண்டும். பண்டித ஜவாஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் மறைந்தபோது, அப்போது ஏற்படுத்தப்பட்ட மரபின்படி குல்ஜாரிலால் நந்தாதான் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், இந்திரா காந்தி படுகொலைக்குப் பின், அப்போது குடியரசுத் தலைவராக இருந்த கியானி ஜைல்சிங், மரபுகளை மீறி, அப்போது காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த ராஜீவ் காந்தியை இடைக்கால பிரதமராகப் பதவியேற்குமாறு அழைத்தார். அப்போது ராஜீவ், மத்திய அமைச்சராகக் கூட இல்லை.
இது பிரணாப் முகர்ஜிக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. உடனே, இப்படிப்பட்ட சூழ்நிலையில் சட்டம் என்ன சொல்கிறது என்று காந்தி குடும்பத்தினரிடம் விளக்கினார். ஆனால், அவர் நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. அதுமுதல் காந்தி குடும்பத்தின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டதுதான் மிச்சம்!
இன்னும் சொல்லப்போனால், முன்னாள் பிரதமர் இந்திராவின் ஆதரவாளர்களான ஆர்.கே.தவான், எம்.எல்.பொடேதார் உள்ளிட்டோர் தீண்டத்தகாதவர்களாகவே கருதப்பட்டனர். அப்போது அருண் சிங், கேப்டன் சர்மா, குவாத்ரோச்சி போன்றவர்கள்தான் காங்கிரஸ் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் பிரணாப் முகர்ஜியும் ஓரங்கட்டப்பட்டார். ஒரு கட்டத்தில் அவர் கட்சியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. அதன் பின் ராஷ்ட்ரீய சமாஜவாதி காங்கிரஸ் என்ற புதிய கட்சியை பிரணாப் தொடங்கினார்.
பின்னர் 1989-ல் போஃபர்ஸ் விவகாரத்தால் நிலைகுலைந்துபோன ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி காலத்தில் அவருக்கு முக்கிய ஆலோசகர்களாக இருந்த ஆர்.கே.தவான், பிரணாப் முகர்ஜி போன்றோரை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வந்தார். இதுதான் பிரணாப் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்த பின்னணி. இருந்தபோதிலும் இன்றளவும், பிரணாப் முகர்ஜியை தங்கள் குடும்பத்தின் விசுவாசியாகவோ, நம்பிக்கைக்குரியவராகவோ சோனியா குடும்பத்தினர் கருதவில்லை.
2004-ம் ஆண்டு சோனியா காந்தியை பிரதமராக்கலாம் என்ற கருத்து நிலவியபோது அதை அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது அந்தப் பதவிக்கு பிரணாப் முகர்ஜியை கொண்டுவரலாம் என்றும் சோனியா நினைக்கவில்லை. அதற்குக் காரணம் பிரணாப், சோனியா குடும்பத்துக்கு விசுவாசியாக இல்லாதது தான். இப்போதும்கூட பிரணாப் குடியரசுத் தலைவர் ஆவதை சோனியா விரும்பவில்லை. அவருக்கு வேண்டியதெல்லாம் பிரதிபா பாட்டீல் போன்ற குடும்ப விசுவாசி ஒருவரைத்தான். எனினும் 2007-ம் ஆண்டில் இருந்த நிலைமை இப்போது (2012-ல்) இல்லை.
அதாவது தனது நம்பிக்கைக்குரியவராக, தனது கட்டளையை ஏற்று செயல்படுத்தக்கூடிய நபராக அவரால் யாரையும் முன்னிறுத்த முடியவில்லை. வேறுவழில்லாமல் பிரணாப் முகர்ஜியின் பெயரை குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளருக்கு சோனியா அறிவித்துள்ளார். அதாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்க வேண்டுமே என்ற வற்புறுத்தலின் பேரில் பிரணாப் பெயரை அவர் பரிந்துரைத்துள்ளார்.
இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கும் சமயத்திலேயே இந்த முறை எப்படியாவது குடியரசுத் தலைவராகிவிட வேண்டும் என்று பிரணாப் மனதில் உறுதிபூண்டுவிட்டார். சோனியா காந்தி விரும்பாவிட்டாலும், அதைப் பற்றி அடிக்கடி பேசிவந்தார். அதுமட்டுமல்ல; மறைமுகமாக அதாவது, எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், சத்தம் இல்லாமல் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்கள் உள்ளிட்டோரிடம் ஆதரவு கேட்டுவந்தார். நீண்டகாலம் அரசியலில் உள்ளவர்களுக்கு பிரணாப், சோனியா காந்தியின் விருப்பமான வேட்பாளர் அல்ல என்பது நன்கு தெரியும்.
ஒரு கட்டத்தில் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடத் தகுதிவாய்ந்த நபர்களில் தானும் ஒருவர் என்று பலரையும் பேசவைத்தார். இதனால், பிரணாபின் பெயரையும் தனது பட்டியலில் சேர்க்கும் நெருக்கடிக்கு சோனியா தள்ளப்பட்டார். இறுதியாக, பிரணாப் முகர்ஜியை விட்டால் வேறு சரியான நபர் இல்லை என்று சொல்லும் நிலையை ஏற்படுத்தினார்.
பிரணாப் முகர்ஜி அரசியலில் சாதாரண நபரா என்ன? அரசியலில் எதிரிகளை எப்படி வீழ்த்த வேண்டும் என்று திட்டம் போட்டு காய் நகர்த்துவதில் வல்லவரான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வழிவந்தவராயிற்றே பிரணாப். நெருக்கடி நிலை காலத்தில் நாட்டை நிர்வகிக்க முக்கிய ஆலோசனை கூறிவந்த நான்கு பேர்களில் ஒருவராக இருந்தவர் பிரணாப். நாட்டின் அரசியலையே நிர்ணயிக்கும் தொழிலதிபர்களில் ஒருவரான அம்பானியின் குடும்பத்துக்கு நெருக்கமாக இருப்பவர். முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போல அம்பானிகளுடன் தனக்கு அவ்வளவு நெருக்கம் கிடையாது என்று அவர் கூறிவந்தாலும், அம்பானிகளுடன் அவருக்கு இருக்கும் நட்பு ஆழமானது. சோனியாவுக்கு கீழ் அவரது கட்டளையை ஏற்றுச் செயல்படுத்தும் நபராக பிரணாபை ஒருபோதும் கருத முடியாது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டுவிட்டார் என்று பத்திரிகைகள் கூறுகின்றன. ஆனால், இந்த விஷயத்தில் சோனியாவைவிட தாம் அதிபுத்திசாலி என்பதை பிரணாப் முகர்ஜி நிரூபித்துவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.