கட்டுரைகள்

மாளிகை மட்டுமே வசப்படும்!

இந்தியாவின் முதல் குடிமகனை, குடியரசின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வானது அரசியல்வாதிகளின் அறிக்கைப் போருக்கு மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருப்பது உண்மையிலேயே துரதிருஷ்டத்துக்குரியது. இதே நிலைமையில்

எஸ். ராஜாராம்

இந்தியாவின் முதல் குடிமகனை, குடியரசின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வானது அரசியல்வாதிகளின் அறிக்கைப் போருக்கு மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருப்பது உண்மையிலேயே துரதிருஷ்டத்துக்குரியது.

இதே நிலைமையில் போனால், இந்தத் தேர்தலின் வெற்றி - தோல்வி என்பது காங்கிரஸ், பாஜக இடையிலான வெற்றி, தோல்வியாகவே பார்க்கப்படும் - கிட்டத்தட்ட வரவிருக்கின்ற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்போல்.

மக்கள் பிரதிநிதிகளாக அல்லாமல், முழுக்க முழுக்க அரசியல்வாதிகளே நாட்டை ஆளும் இன்றைய காலச்சூழ்நிலையில் இந்தியாவுக்குத் தேவை அரசியலுக்கு அப்பாற்பட்ட குடியரசுத் தலைவர். ஆனால், அதற்கான வாய்ப்பை திரிணமூல் காங்கிரஸ் தவிர, அத்தனை கட்சிகளும் ஒருசேர திட்டமிட்டு புறந்தள்ளிவிட்டன.

குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆளும்கூட்டணி என்ற வகையில் அறிவிக்கும் காங்கிரஸ், தங்களின் தலைவராக யார் இருக்க வேண்டும் என்று குடிமக்களின் விருப்பத்தை அறிய சிறிதளவும் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து அரசியல் பேரம் நடத்துகிறது.

மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து, குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல் கலாமை தேர்வு செய்த சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம்சிங், கடைசி நேரத்தில் மம்தாவை காலைவாரிவிட்டு காங்கிரஸின் பக்கம் செல்கிறார். மத்திய அமைச்சரவையில் சமாஜவாதியை சேர்க்க வேண்டும் என்ற பேரம் அல்ல இதற்குக் காரணம் என தன்னிலை விளக்கமும் அளிக்கிறார்.

இதற்கு ஒருபடி மேலே போய், குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியிலிருந்து விலக வேண்டும் என சங்மாவை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மிரட்டுகிறார். மீறிப் போட்டியிட்டால் கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என ஊடகங்களை அழைத்து உரக்கச் சொல்கிறார். (குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்மா அவர் வகித்த பதவியை ராஜிநாமா செய்துவிட்டார் என்பது வேறு விஷயம்).

குடியரசுத் தலைவராக விரும்புவதற்கு ஒரு சாமானியனுக்கும் உரிமை உண்டு. அப்படியிருக்கையில், சங்மாவை தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சொல்வதற்கு பவாருக்கு என்ன உரிமை இருக்கிறது?

கடந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, "கூட்டணி தர்மத்தை(!)' மீறி மராத்தி மண்ணின் மைந்தர் என்றுகூறி பிரதிபாவை ஆதரித்த சிவசேனை, இப்போதும் கூட்டணி தர்மத்தை மீறி பிரணாபை ஆதரிக்கிறது. இதன் பின்னணியிலும் ஓர் அரசியல் கணக்கு இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள்.

பிரதான எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியோ, முழுக்க முழுக்க இந்த குடியரசுத் தலைவர் தேர்தலை மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான முன்னோட்டமாகவே பார்க்கிறது. வேட்பாளரை தேர்வு செய்வதில் கூட்டணியின் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடியாததால், பாஜகவுக்கு நிர்வாகத் திறமை இல்லை என இதிலும் "அரசியல்' செய்கிறது காங்கிரஸ். இரண்டுமுறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா, லோக்பால் மசோதா என மக்களுக்குத் தேவையான சட்டத்தை இயற்றுவதற்கு கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் "நிர்வாகத் திறமை' இல்லாத காங்கிரஸýக்கு இப்போது மட்டும் எப்படியோ நிர்வாகத் திறமை வந்துவிடுகிறது.

தன்னை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக மேலிடத் தலைவர்கள் நிறைவேற்றாத ஆற்றாமையை, "குடியரசுத் தலைவராவதற்கு தகுதி வாய்ந்தவர் பிரணாப்தான்' என இப்போது காட்டுகிறார் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.

ஒட்டுமொத்தத்தில் ஒவ்வொரு கட்சியும் ஒரு கணக்கு போட்டு, குடியரசுத் தலைவர் தேர்தலை நகராட்சித் தலைவர் தேர்தல் போல மாற்றிவிட்டன.

120 கோடி பேர் வசிக்கும் இந்த நாட்டில், குடியரசுத் தலைவராக ஓர் அரசியல்வாதிக்குத்தான் தகுதி இருக்கிறது என அரசியல்வாதிகள் நினைக்கலாம்; ஆனால், குடியரசுத் தலைவரை மக்கள் பிரதிநிதிகள்தாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முறையை மாற்றி, ஒட்டுமொத்த இந்திய மக்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டுவந்தால், யாருக்குத் தகுதி இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

கூட்டணிக் கணக்குப் பார்த்து, கூட்டணிப் பேரங்களுக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும்வரை, எப்படி பிரதிபா பாட்டீல் ஒரு குடியரசுத் தலைவராக மக்களின் மனதில் நிற்கவில்லையோ, அதேபோல, பிரணாப் குடியரசுத் தலைவரானால், ஒரு பாரம்பரியமிக்க காங்கிரஸ்காரராகவும், சங்மா குடியரசுத் தலைவரானால் ஒரு தேசியவாத காங்கிரஸ்காரராகவும்தான் அறியப்படுவார்கள். குடியரசுத் தலைவர் மாளிகை வேண்டுமானால், அவர்களுக்கு வசப்படலாம், ஆனால், மக்களின் மன மாளிகையில் என்றுமே இடம் கிடைக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT