கட்டுரைகள்

வேர்கள் விளம்பரம் தேடலாமா?

ஆலமரம் போன்ற அரசாங்கத்துக்கு வேர்போல இருந்து உதவுபவர்கள் அரசு ஊழியர்களும் அதிகாரிகளும்தான்.  ஜனநாயகத்தில் தேர்தல் எனும் "கோடை'யில் உதிர்ந்து மக்கள் வாக்கு எனும் வசந்தத்தில் புதிதாக முளைத்துவரும் இலை,

ஜெயப்பாண்டி

ஆலமரம் போன்ற அரசாங்கத்துக்கு வேர்போல இருந்து உதவுபவர்கள் அரசு ஊழியர்களும் அதிகாரிகளும்தான்.

 ஜனநாயகத்தில் தேர்தல் எனும் "கோடை'யில் உதிர்ந்து மக்கள் வாக்கு எனும் வசந்தத்தில் புதிதாக முளைத்துவரும் இலை, தழை போன்றவர்கள்தான் அரசியல்வாதிகள்.

 ஜனநாயக மரம் தழைத்தோங்க வேண்டும் எனில், அதற்கு நீர் முதல் உரம் வரை சரியாக அனைத்தையும் வழங்கும் வேர்கள் அதனதன் பணியைச் செம்மையாகச் செய்வது அவசியம். அத்தகைய நல்ல வேர்கள் உள்ள மரமே உறுதியுடன் இருக்கும். ஊருக்கும் பயன்படும்.

 சமீபகாலமாக நம்நாட்டின் வேராக இருக்கவேண்டிய அரசு ஊழியர்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளுக்கு இணையாக ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி விமர்சனத்துக்கு ஆளாகிவரும் போக்கு அதிகரித்து வருகிறது.

 ஊழல் பிரச்னைகளில் எல்லாம் அரசியல்வாதிகளுக்கு நிகராக தற்போது அரசுத் துறை அதிகாரிகளும், ஊழியர்களும் இடம்பெறத் தொடங்கிவிட்டனர்.

 அரசியல்வாதிகள் ஐந்தாண்டு பொறுப்போடு பெரும்பாலும் அகன்று விடுவார்கள். ஆனால், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அப்படிப்பட்டவர்கள் அல்ல..! தங்களது ஓய்வுநிலை வரை அதிகாரத்தில் இருக்கக் கூடியவர்கள். அப்படிப்பட்டவர்கள் பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுவது அவசியமல்லவா?

 பொது வரிப் பணத்தில் தங்களது மாதாந்திர ஊதியத்தை வாங்கும் அரசு ஊழியர்கள், மக்களுக்குச் சேவை செய்வதிலும், அவர்களது எதிர்காலத்துக்கான திட்டங்களைத் தீட்டுவதிலும் கைமாறு கருதாது செயல்படுவதுதானே நியாயம்? ஆனால், அப்படிப்பட்ட மனநிலையிலா இன்றைய அதிகாரிகள் செயல்படுகிறார்கள்..?

 அரசு அதிகாரிகள் கட்சி சார்ந்து செயல்படும் போக்கு ஒருபுறம் இருக்க, மறுபுறம் அரசியல்வாதிகளைப்போல, மக்களிடம் தங்களை விளம்பரப்படுத்தி கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

 தமிழகத்தில் சில மாவட்ட ஆட்சியர்களது செயல்பாடுகள், அரசியல்வாதிகளைவிட அதிகமான விளம்பர நோக்கிலே அமைவதைக் காணும்போது வருத்தமே மேலிடுகிறது.

 மாவட்டத்தில் கல்வி, மருத்துவம், விவசாயம், தொழில் என ஆதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே ஆட்சியர்களது முக்கியப் பணியாகக் கருதப்படுகிறது.

 ஆனால், பெரும்பாலான ஆட்சியர்களோ, வட்டாட்சியர், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்களது பணிகளைத் தாங்களே செயல்படுத்துவதுபோல காட்டிக்கொண்டு, ஊடகங்களில் இடம்பெறவே ஆர்வம் காட்டுகின்றனர் என்பதுதான் வேடிக்கை.

 ஒரு பிரச்னையை வைத்து, தங்களுக்கு அன்றைக்கு விளம்பரம் கிடைக்கிறதா? அது போதும் என்ற மனநிலைக்குக்கூட சில அதிகாரிகள் தள்ளப்பட்டு விட்டனரோ என்ற சந்தேகமும் எழுகிறது.

 அரசின் செயல்பாட்டை, சாதாரண மக்களுக்கு அறிவிக்கும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதாகக் கூறலாம். அப்படிப் பார்த்தாலும் செய்திகளில் அரசுத் திட்டங்களைவிட, அத் திட்டங்களைப் பெற மக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களைவிட, செயல்படுத்தும் அதிகாரிகளின் முகமும், பேச்சும் மட்டுமே முன்னிறுத்தப்படுவதையே காண முடிகிறது.

 ஊடகங்கள் மூலம் தங்களுக்கான புகழைத் தேடிக்கொள்வதுடன், தங்களுக்குப் பிடிக்காத அதிகாரிகளையும் குற்றவாளியாக்கி அவர்களை அச்சுறுத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் சில துறையின் உயரதிகாரிகள்.

 கிராமங்களுக்கான போக்குவரத்து, ஏழை மக்களுக்கான மருத்துவ வசதிகள், அலைச்சல் இல்லாமல் பெற வேண்டிய சான்றிதழ்கள் என மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தி, அதன் மூலம் மக்களின் மனதில் இடம் பெறும் அதிகாரிகளே நாடு எனும் மரத்தின் உண்மையான ஆணிவேர்கள்.

 ஆனால், அத்தகைய அதிகாரிகள் தற்போது அருகிப் போய்விட்டனர் என்பதே உண்மை. விளம்பர வெளிச்சத்தில் தங்களது முகங்களைக் காட்டி புகழ் தேடும் அதிகாரிகள், மக்கள் நலனுக்காக எத்தனை திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம் என தங்கள் மனசாட்சியை கேட்டுக் கொள்வது அவசியம்.

 ஆம்! மரத்தில் வேர்களின் முக்கியத்துவம் விளம்பரத்தால் மட்டும் வருவதல்ல. அவை மண்ணில் மறைந்திருந்தாலும், மரத்துக்கான நீரை வழங்கும் செயல்களால் முக்கியத்துவம் பெறுகின்றன. அதுபோலவே அதிகாரிகளது செயலும் இருக்க வேண்டும்.

 இதைத்தான் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படத்தில், ""தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு, பிறர் தெரிந்துகொள்ளப் படம் பிடித்தால் சுயநலம் உண்டு'' என நாசூக்காகச் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தகைய விளம்பரப் போக்கைக் கைவிட்டு உண்மையான சேவை உள்ளத்துடன் மக்கள் சேவையாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். அப்போதுதான் வறுமையில்லாத, வளமான சமுதாயம் உருவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT