மறதிநோயை விரட்டுவோம்!
கமல்ஹாசனின் "உன்னைப்போல் ஒருவன்' படத்தில் "இந்தியாவின் தேசிய வியாதி மறதி' என்ற வசனம் இடம்பெறும். திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த வசனம், நிஜத்தில் மற்றொரு கோணத்தில் உண்மையாகும் வாய்ப்பு மெல்ல மெல்
கமல்ஹாசனின் "உன்னைப்போல் ஒருவன்' படத்தில் "இந்தியாவின் தேசிய வியாதி மறதி' என்ற வசனம் இடம்பெறும். திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த வசனம், நிஜத்தில் மற்றொரு கோணத்தில் உண்மையாகும் வாய்ப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
"டிமென்ஷியா' என அறியப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது, உலகரங்கில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
2020- ம் ஆண்டில் இந்தியாவில் மட்டுமே மறதி நோயால் 37 லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
உலகளவில் ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி 2020-ம் ஆண்டில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியாக உயரும்.
இப்போதைய கணக்கெடுப்பின்படி உலகில் 36 லட்சம் பேர் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிகளவிலான முதியோர்களைக் கொண்டுள்ள பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. முதல் இடத்தில் சீனா உள்ளது.
இந்நோய் 65 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வர வாய்ப்புள்ளது. இதைத் தடுப்பதற்கான மருத்துவ முறைகள் பெரிதளவில் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், இந்த நோய்க்கான மருந்துகள் ஒவ்வொருவரின் மனதிலும், சமுதாயத்தையும் சார்ந்தே உள்ளது.
சமுதாயத்தில் எல்லோருக்கும் பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. அதாவது, முதுமையில் மறதி என்பது இயல்பு. ஆனால், இந்த நோய் முதியோர்களைத் தாக்குவதற்கு நாம் எல்லோரும் பொறுப்பாகிறோம் என்பதே மறைமுக உண்மையாகும்.
இந்நோய்க்கான பொதுவான அறிகுறிகள் என்னவென்றால், நபர்களின் பெயரை மறப்பது, வாழ்விடம் மறந்து போகுதல் ஆகியவையாகும். தொடக்கத்தில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். பின்பு காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும்.
புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலைச் சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும், நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும், அடிக்கடி கோபப்படுவது, பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள், தனிநல சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கத் தவறுதல், புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும்.
முதுமையில் ஏற்படக்கூடிய மறதியின் அறிகுறிகள் மீளக்கூடியவையாக அல்லது மீள இயலாதவையாக வகைப்படுத்தப்படுகின்றன. முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பத்து சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே சிகிச்சையின் மூலமாக சரிசெய்யக்கூடிய காரணிகளைக் கொண்டுள்ளனர்.
காரணிகளில் பல வேறுபட்ட நோய்ச் செயற்பாடுகள் உள்ளன. அதேபோல அறிகுறிகளிலும் பல வேறுபாடுகள் உள்ளன. இளமையில் மன அழுத்தம், மது போன்றவற்றின் தொடர்ச்சியான பயன்பாடு, தொடர்ச்சியான தூக்கமின்மை, புகைப்பழக்கம் ஆகியனவும் முதுமையில் மறதி நோயை அதிகரிக்கும்.
மரபணுக்களும் மறதிநோய் ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், மற்போர் அல்லது தற்காப்புக் கலை போன்றவற்றில் ஈடுபடுவதனால் அடிக்கடி தலையில் காயமடையும் வாய்ப்புள்ளவர்களுக்கும் முதுமையில் மறதிக்கான வாய்ப்புகளும் அதிகம்.
மறதி நோயிலிருந்து நம் முதியோர்களைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாக மாறி வருகிறது. முதியோர்களை மறதிநோய் பாதிப்பதற்கு நம்முடைய பாரம்பரிய குடும்ப அமைப்பு சிதைவதும் ஒரு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்பெல்லாம் பெற்றோர்கள் மகன், மகள், மருமகள், பேரக் குழந்தைகள் என்று தங்களது காலம் முடியும் வரை அவர்களுடன் இணைந்து வாழ்ந்து வந்தனர். அப்படி அவர்கள் தங்கள் வாழும் காலம் முழுவதும் வீட்டில் விசேஷங்கள், துயரச் சம்பவங்கள் அனைத்திலும் இவர்களின் பங்கு தேவைப்படும்.
அப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்து வந்த அவர்கள், இப்போது 60 வயதுக்கு மேல் தனிமையை அனுபவித்து வருகின்றனர். இதில் சில பெற்றோர்கள் தங்கள் முதுமையை ஏதோ ஒரு காப்பகத்தில் தங்கள் இறுதி வரை கழிக்கின்றனர்.
மறதிநோய் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவது பிள்ளைகளின் கடமையாகும். வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பெற்றோரை எப்போதும் நாம் கண்காணிக்க வேண்டும். தகுந்த முறையில் பராமரித்தலும் மிகவும் முக்கியமாகும்.
குறுக்கெழுத்துப் போட்டிகள், சிறிய கணிதச் செயற்பாடுகள், விளையாட்டுகள் போன்றவை நோய் அதிகரிப்பதைத் தடுக்கும் பயனுள்ள செயல்பாடுகளாகும்.
பிள்ளைகள் தங்களது பெற்றோர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு அதிக பொறுப்புகளை வழங்க வேண்டும். அவர்களுக்கு வயதாகிவிட்ட காரணத்தால் குடும்பத்தில் இருந்து ஒதுக்கக்கூடாது.
பேரக்குழந்தைகளைக் கவனிக்கும் பொறுப்புகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும். இப்படியாக சில விஷயங்களை நாம் செய்வதன் மூலம் அவர்களை மறதிநோய் தாக்காதவாறு நாம் காப்பாற்றலாம்.
சிறு பிள்ளையாக இருந்தபோது நம் விரல்களைப் பிடித்து வழிநடக்கக் கற்றுக்கொடுத்த பெற்றோர்களை, முதுமையில் அவர்களைக் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லக் கூடாது.