கட்டுரைகள்

வாழ்க்கைத் தரமும், வாழ்வியல் தரமும்...

பொருளாதாரம் சார்ந்த இலக்குகளை எட்டுவதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்பது பலரது நிலைப்பாடாக

சு. வெங்கடேஸ்வரன்

பொருளாதாரம் சார்ந்த இலக்குகளை எட்டுவதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்பது பலரது நிலைப்பாடாக மாறிவிட்டது. வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளும் முயற்சியின் ஒரு படியில் இருந்து அடுத்த படியை எட்டிப் பிடிக்கும் வேகத்தில் சக மனிதர்களை எட்டி உதைத்து கீழே தள்ள யாரும் தயங்குவதில்லை. ஒருவரது வீழ்ச்சிதான் மற்றொருவரின் எழுச்சி என்று இதற்குப் பொருந்தாத விளக்கம் கூறுபவர்களும் உண்டு.

 மக்களின் வாழ்க்கைத் தரம் உயருகிறது என்பது ஓர் அரசின் சாதனையாக அளவிடப்படுகிறது. ஒரு மனிதரின் வாழ்க்கைத் தரம் என்பது அவரது பொருளாதார வசதிகளை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. நேற்றுவரை மின் விசிறியில் காற்று வாங்கிக் கொண்டிருந்தவர், இப்போது வீட்டில் ஏ.சி. வாங்கி மாட்டிக் கொள்ளும் அளவுக்கு வசதி பெற்றுவிட்டால் அவரது வாழ்க்கைத் தரம் சிறப்பாக உயர்ந்துள்ளது என்று அளவிடப்படுகிறது.

 வாழ்க்கைத் தரம் என்பதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் வாழ்வியல் தரம் என்பதற்குக் கொடுக்கப்படாததுதான் சமூகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணம். வாழ்வியல் தரம் என்பது குற்றங்கள் இல்லாத சமூகம், சுமுகமான குடும்ப உறவுகள், நட்பு, பொழுதுபோக்கு சார்ந்த சிறப்பான ரசனைகள், பொது சுகாதாரம் காப்பது, சக மனிதர்களை மதிக்கும் குணம், ஒருவருக்கு ஒருவர் உதவும் பாங்கு, ஒவ்வொரு தனிநபரும் கடமைகளை முறையாகச் செய்தல், அமைதியான வாழ்க்கை உள்ளிட்டவற்றைக் கொண்டு அளவிடப்படுகிறது.

 ஒரு நபர் எந்த அளவுக்கு அதிகமாக பணம் சம்பாதித்து தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்கிறாரோ அதுவே சமூகத்தில் அவரது மதிப்பை நிர்ணயிக்கிறது என்ற சூழ்நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள அக்கறை காட்டுவதைத் தவறு என்று கூற முடியாது.

 அதே நேரத்தில் பணத்தைச் சம்பாதிக்கும் ஓட்டத்தில் அனைவருமே குறுக்கு வழிகளைத் தேட ஆரம்பிக்கும்போது சமூகத்தில் பிரச்னைகளும் தலைதூக்கத் தொடங்கி விடுகின்றன. வாழ்வியல் தரம் என்பது கேள்விக் குறியாகிறது.

 லஞ்சம் வாங்குவதை உரிமையாக்கிக் கொண்டுள்ள அரசுப் பணியாளர்கள், ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள், கலப்படம் செய்யும் வியாபாரிகள், மக்களைச் சுரண்டும் தொழிலதிபர்கள், வரியைக் கட்டாமல் தப்பிக்க வழி தேடுவோர் என சமூகத்தில் கீழ் நிலையிலிருந்து மேல் நிலை வரை அனைத்துத் துறைகளிலும் உள்ளவர்கள் பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு மாட்டிக் கொள்ளாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதை பொதுவான குணமாகக் கொண்டுள்ளனர். எந்த வழியில் சென்றாவது வேகமாக முன்னேறிவிட வேண்டுமென்ற வெறியே இதற்குக் காரணம். யார்தான் இதுபோன்ற தவறுகளைச் செய்யவில்லை என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தங்கள்  மனநிலையைப் பலரும் மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டனர். ஆனால், சிறிய தவறுதானே என்று நாம் ஒவ்வொருவரும் தெரிந்தே செய்யும் தவறுகளின் தொடர் விளைவுகள் ஒன்று கூடி, சமூகத்தில் மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகின்றன.

 பள்ளி, கல்லூரி மாணவர்களே வழிப்பறியில் ஈடுபட்டு சிக்குவதும், வாழ்க்கையை உல்லாசமாக அனுபவிப்பதற்காகவே திருடினோம் என்று அவர்கள் அளிக்கும் வாக்குமூலமும் நமது சமூகம் எந்த அளவுக்கு கீழான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

 நிதி மோசடி, ஊழல், வரி ஏய்ப்பு உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த குற்றங்கள் என்பது தவிர, கொலை, பாலியல் பலாத்தாரம் என சகிக்க முடியாத நிகழ்வுகளும் சமூகத்தில் அதிகரித்தே வருகின்றன.

 வாழ்க்கைத் தரம் உயர்ந்த அளவுக்கு வாழ்வியல் தரம் உயரவில்லை என்பது மட்டுமல்ல, கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது வாழ்வியல் தரம் என்பது வேகமாகக் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதையே சமூகத்தின் அன்றாட நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

 எனவே மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது போலவே வாழ்வியல் தரத்தை உயர்த்தவும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாழ்வியல் தரத்தை பாதிக்கும் முதல் விஷயம் சமூகத்தில் நடைபெறும் குற்றங்கள்தான். சட்டங்களைக் கடுமையாக்குவதன்  மூலம் மட்டுமே குற்றங்களைத் தடுத்துவிட முடியாது. சட்டத்தை மதித்து ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் ஏற்பட வேண்டும். மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தைக் கொண்டுவராமல் குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது.

 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், இணையம், செல்போன், விடியோ கேம்  என இளைய தலைமுறையின் பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்துமே வன்முறையையும்,  கட்டுப்பாடற்ற வாழ்வையும் கற்பிப்பதாகவே இருக்கின்றன.

 வாழ்வியல் தரத்தை மேம்படுத்துவது என்பது ஒரே நாளில் ஏற்படுத்திவிடக் கூடிய மாற்றமல்ல. பல்வேறு தொடர் முயற்சிகள் மூலம்தான் இது சாத்தியமாகும். இதற்கான முயற்சிகள் பள்ளிகளில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். மதிப்பெண்களை எடுக்கும் இயந்திரமாக மாணவர்களை மாற்றுவதில் தீவிரம் காட்டும் பள்ளிகள், அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ள நபர்களாக உருவாக்கவும் அக்கறை செலுத்த வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் எதிர்காலத்தில் நமது சமூகம் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT