நியாயத்தைத் தேடிச் செல்லும் பாதை
ட்ரேவான் மார்ட்டினுக்கு 2012 இல் 17 வயது. ஜிம்மர்மான் என்பவர் அவரை 26 பிப்ரவரி, 2012 அன்று சுட்டுக் கொன்று விட்டார். அந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது. ஜிம்மர்மான் குற்றமுறு எண்ணத்துடன் சுட்டதாக நிரூபணமாகவில்லை என்பது தீர்ப்பு.
ட்ரேவான் மார்ட்டினுக்கு 2012 இல் 17 வயது. ஜிம்மர்மான் என்பவர் அவரை 26 பிப்ரவரி, 2012 அன்று சுட்டுக் கொன்று விட்டார். அந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது. ஜிம்மர்மான் குற்றமுறு எண்ணத்துடன் சுட்டதாக நிரூபணமாகவில்லை என்பது தீர்ப்பு.
இந்தத் தீர்ப்பிற்கு எதிராக பல உரத்த குரல்கள். மார்ட்டின் கையில் ஒரு குளிர்பானமும், ஸ்கிட்டிள்ஸ் என்ற ஒருவகை மிட்டாயும் வைத்திருந்தார். ஜிம்மர்மான் கையில் துப்பாக்கி இருந்தது. மார்ட்டின் தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஜிம்மர்மானுக்கு அவர் நடவடிக்கை சந்தேகத்தைத் தூண்டுவதாக இருந்திருக்கிறது. மார்ட்டினை பின்தொடர்ந்தார். கைகலப்புகூட நடந்திருக்கிறது. இறுதியில் ஜிம்மர்மான் மார்ட்டினை சுட்டுவிட்டார்.
"இனவெறியினால் நிகழ்ந்தது', "இல்லை, இனவெறி அல்ல', "மார்ட்டின் சந்தேகத்தைத் தூண்டும் வண்ணம் சென்று கொண்டிருந்தார்', "வீட்டிற்குதான் சென்று கொண்டிருந்தார்', "ஜிம்மர்மான் தற்காப்பு என்றெண்ணி சுட்டார்', "ஜிம்மர்மான் போலீஸýக்கு போன் செய்தார், போலீஸ் ஒன்றும் செய்யாதே என்று சொல்லியும் சுட்டுவிட்டார்', "மார்ட்டின் கருப்பராக இல்லாதிருந்தால்...?' இப்படி பல குரல்கள். இதற்கெல்லாம் மேலே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா "இனம் சார்ந்த அநீதி இன்னும் அகலவில்லை, 35 வருடத்திற்கு முன் இருந்த நான் இந்த ட்ரேவானாக இருக்கலாம்' என்று சொல்லியுள்ளார்.
Advertisement
÷அவர் வெள்ளையராக இருந்திருந்தால் என்ற கேள்வியை இங்கே நான் எழுப்பவில்லை. வேறு கேள்வி எழுகிறது. மார்ட்டின் வசதி படைத்த இளைஞராக, சூட்டும் டையும் அணிந்து நடந்து போயிருந்தால் ஜிம்மர்மான் சந்தேகப்பட்டிருப்பாரா? இந்த வழக்கைப் பற்றி படித்ததில் மார்ட்டின் பொருளாதார வசதி இல்லாதவர். அவர் தலைமூடி அணிந்திருந்தார் (முகமூடி அல்ல) என்று தெரிகிறது. அவர் உடை அவருடைய சமூக, பொருளாதார அந்தஸ்தை நிச்சயம் தெரிவித்திருக்கும், நிறம் தெரியவில்லை என்று வைத்தாலும்கூட. கைகலப்பு நடந்திருக்கிறது. மார்ட்டின் ஜிம்மர்மானைத் தாக்கினார் என்று கூட சாட்சி இருக்கிறது. ஜிம்மர்மான் காவல் துறையைச் சேர்ந்தவர் அல்ல, தனிப்பட்ட முறையில் காவலுக்கு வேலை செய்பவர்.
கைகலப்பிற்கு முன் ஜிம்மர்மான் சந்தேகத்தின் பேரில் மார்ட்டினைப் பின்தொடர்ந்திருக்காவிட்டால், இந்த மரணம் சம்பவித்திருக்காது. ஒருவரின் சமூக, பொருளாதார பின்புலம் நாம் அவரைப் பார்க்கும் விதத்தை நிர்ணயிக்கிறது. சமூகத்தின் பார்வைதான் காவல் துறை, நீதித் துறை எப்படி செயல்படும் என்பதை தீர்மானிக்கிறது.
÷உச்சநீதிமன்றத்தில் சிறப்பாக பணியாற்றிய பின் ஓய்வு பெற்று அண்மையில் மறைந்த ஜஸ்டிஸ் சின்னப்ப ரெட்டி "நீதிமன்றமும் அரசியலமைப்பு சாஸனமும்' என்ற நூலில் கூறுகிறார், ""குற்றவியல் சட்டம் சமூக அமைப்பின் மாற்றங்களைக் கட்டாயம் எதிரொலிக்கும். ஆகையால்தான் நம் சமூக எண்ணங்களின் பாரமானியாக அது கருதப்படுகிறது''. ஏற்றத்தாழ்வுகள் அமைந்த நம்முலகத்தில் தாழ்வான இடத்தில் இருப்பவர்களை சட்டம் எப்படிப் பார்க்கும்? அவர்களுடைய மனித உரிமைப் பறிப்பு எளிதாக நடைபெறும். அதைத் தடுக்க பொருளாதார பலம் அல்லது அதிகார பலம் அல்லது அரசியல் பலம் அல்லது சாதியமைப்பு பலம் போன்ற கவசங்கள் இருக்க வேண்டும். அப்பொழுது "ஒரு நாள் சிறையிலிருந்தார்', "இரண்டு நாள் சிறையிலிருந்தார்' என்று பத்திரிகைகளில் குறிப்பு எழுதப்படும்.
÷ஆனால் இன்று இந்தியச் சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகள்தான் 65 சதவிகிதத்திற்கு மேல் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நாம் யோசிப்பது கூட இல்லை. யாரையும் சட்டத்திற்குப் புறம்பாக சிறையில் தள்ளக்கூடாது. இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இங்கு குறிப்பிட வேண்டியது என்னவென்றால் இந்த விசாரணைக் கைதிகளில் நிறைய பேருக்கு அவர்கள் செய்ததாக சொல்லப்படும் குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனையே ஆறு மாதம்தான் இருக்கும். ஆனால் வருடக்கணக்கில் உள்ளே இருப்பார்கள். அவர்கள் வழக்கு விசாரணைக்கு வந்து அவர்களுக்கு எதிரே தீர்ப்பு கூறி அவர்களை சிறைக்கு அனுப்பியிருந்தால் கூட, அவர்கள் இந்நேரம் வெளியில் வந்திருப்பார்கள். பிணைத்தொகை அல்லது பிணைமுறி வழங்க முடியாமல் ஜாமீனில் வராமல், வழக்கும் விசாரணைக்கு வராமல் உள்ளே உள்ளார்கள். நான் மேலே சொன்ன பொருளாதார / அதிகார / சாதியமைப்பு / கட்சியமைப்பு பலம் இருந்திருந்தால் அவர்கள் உள்ளே இருக்கமாட்டார்கள். அவர்கள் வெறும் ஏழைகள். அரசியலமைப்பு சாஸனம் ஷரத் 21ஐ விவரிக்கும் பல தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் இதுபோல விசாரணைக் கைதிகளாக நெடுங்காலம் சிறைக்குள்ளே வைத்திருப்பது இந்த ஷரத்துக்கு விரோதம் என்று கூறியிருக்கிறது. இப்பொழுது மத்திய அரசு இது குறித்து ஒரு உத்தரவும் பிறப்பித்திருக்கிறது. இந்த விசாரணைக் கைதிகள் சட்ட உதவி பெற்று வெளியே வர முயற்சி செய்யலாம்.
இலவச சட்ட உதவி பற்றி அரசியலமைப்பு சாஸனம் ஷரத்து 39ஏ கூறுகிறது. பலமில்லாத மக்களின் உரிமை இது. இந்த உரிமை உள்ளது என்பதுகூட பலருக்கு தெரியாது. மேலும் அந்த உதவி முழுமையான உண்மையான உதவியாக இருக்க வேண்டும். அமெரிக்காவில் அமெரிக்க பார் அúஸாசியேஷன் என்ற அமைப்பு உள்ளது. அதன் அங்கத்தினர் ஒவ்வொருவரும் ஒரு வருடத்தில் குறைந்தது 50 மணி நேரமாவது கட்டாயமாக இலவச சட்ட உதவி கொடுக்க வேண்டும். வழக்கில் ஆஜராவது, ஆலோசனை வழங்குவது, ஆவணங்கள் தயாரிப்பது இதுபோல எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கட்டாயம் செய்ய வேண்டும். நம் நாட்டிலும் மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் நேரத்தை இலவச சட்ட உதவிக்கு ஒதுக்கி முன்னுதாரணமாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இலவச சட்ட உதவி உண்மையான உதவியாக விளங்கும்.
÷அவ்வப்பொழுது லோக் அதாலத் என்று மக்கள் நீதிமன்றங்கள் நடக்கும். ஒரே வகையான பல வழக்குகளை வரிசைப்படுத்தி தீர்வு காணப்படும். சில சமயம் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், காசோலை வழக்குகள் இப்படி விசாரணைக்கு வந்து காலங்கடத்தாமல் சமரசமாக முடியலாம். இதுபோல விசாரணைக் கைதிகளுக்குக்கூட ஜெயில் அதாலத் நடந்துள்ளது. இப்படி அவ்வப்பொழுது இல்லாமல் அடிக்கடி செய்யலாம். அந்தந்த மாநிலங்களில் விசாரணைக் கைதிகள் எவ்வளவு பேர் உள்ளார்கள்? அவர்களில் எவ்வளவு பேர் அதிகபட்ச தண்டனைக் காலத்தை சிறையில் கழித்துவிட்டார்கள் என்று கணக்கெடுக்கலாம். இந்தக் கணினி உலகத்தில் இது பெரிய விஷயமல்ல. சம்பந்தப்பட்ட துறைகள் மனம் வைக்கவேண்டும். அவ்வப்பொழுது இதை செய்துவிட்டால் ஷரத்து 21ன் மீறல் நடக்காது.
÷சட்டங்களில் ஆளப்படும் சொற்கள் சற்று கடினமானவை. சாதாரணப்பட்டவர்களுக்கு விளங்காது. நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்துமே சற்று பிரமிப்பையும், அச்சத்தையும் ஊட்டும். தென்னாப்பிரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதி ஆல்பி ஸாக்ஸ், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த பொழுது ""எனக்கே பயமாக இருக்கிறதே, கிராமத்திலிருந்து வரும் படிக்காத ஏழைப் பெண்மணி எப்படி நீதிமன்றத்தை தைரியமாக அணுகுவாள்'' என்றார். ஒரு சம்பவம் கூறுகிறேன். நிஜமாக நடந்ததா என்று தெரியாது. நாம் வழக்கு தாக்கல் செய்தோமானால், எதிரிக்கு அறிவிப்பு அனுப்புக் கட்டணம் கட்ட வேண்டும். அதற்கு படி கட்டுவது என்று சொல்வார்கள். குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த ஒரு பெண்ணிடம் "படி கட்டிவிட்டு வாங்கம்மா' என்றார்களாம். இந்தப் பெண் விழித்திருக்கிறார். பிறகு வக்கீலிடம் "படிக்கட்ட சொல்றாங்களே? படிக்கட்டு ஏறிதானே வந்தேன்' என்றாராம். நீதிமன்ற நடைமுறைகளில் பயன்படுத்தப்படும் சொற்கள் எல்லோருக்கும் புரியாது. படித்தவர்களுக்குக்கூட. ஒரே சொல்லில் பொருளை விளக்க முடியுமானாலும் நீதித்துறையில் ஒன்பது சொற்கள் உபயோகிப்போம்.
காவல்துறையும் எளிதில் அணுகமுடியாமல்தான் உள்ளது. ஒருமுறை தேசிய நீதிமுறை கல்விச் சங்கத்தின் முன்னாள் இயக்குனர் மோகன் கோபால் கூறினார் "நான் அவர்களைக் கேட்டேன், "உங்கள் இடத்தை ஆக்கிரமித்தவுடன் ஏன் காவல் துறையிடம் போய் புகார் கொடுக்கவில்லை? அதற்கு அவர்கள் சொன்ன பதில் போலீஸிடம் யாரும் தாமாக போகமாட்டார்கள். போலீஸ் வந்து இழுத்துச் சென்றால்தான் போவார்கள்!'
காவல்துறைதான் பொதுமக்களுக்கு சட்டத்தின் முதல் முகம். அடுத்ததுதான் நீதித்துறை. பல வருடங்களுக்கு முன் "உங்கள் நண்பன்' என்று ஒரு ஆவணப்படத்தை திரையரங்குகளில் போடுவார்கள். காவல்துறை பொதுமக்களுக்கு உற்ற நண்பன் என்று விவரிக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும்.
ஒன்று செய்யலாம். ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டில் "நம் நண்பனாக' இருக்கும் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரைப் பற்றிக் கூறலாம். நேர்மை, கடமையுணர்ச்சி, உதவும் மனப்பான்மை, பொதுமக்களுடன் சுமூகமான உறவு இப்படி அளவுகோல் வைக்கலாம். மெதுவாக ஒவ்வொருவராக நம் நண்பர்களாக மாறுவார்கள்.
÷அமைப்புசாரா தொழிலாளர்கள் கூடிய பொதுவிசாரணை ஒன்றில் வீட்டு வேலை செய்யும் பெண்மணி ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். "நாங்கள் வேலை செய்யும் வீடுகளில் பொருள் திருடு போனால் உடனே போலீஸ் வருகிறது, எங்கள் எல்லோரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று நாங்கள்தான் குற்றம் செய்தவர் என்று நிரூபணம் ஆனது போல எங்களை நடத்துகிறது.
ஆனால் எங்களிலொருவர் நாங்கள் வேலை செய்யும் வீட்டில் ஒருவர் பாலியல் குற்றம் புரிந்தார் என்று புகார் செய்தோமானால் அந்தப் புகாரை ஏற்றுக் கொள்ளக்கூட மாட்டார்கள். பணக்காரர்கள் நிஜமே பேசுவார்கள், ஏழைகள் பொய்யே சொல்வார்களா?' அவருடைய சீற்றம் நியாயமற்றது என்று சொல்ல முடியுமா?
நீதிமன்றக் கட்டணம், வக்கீல் ஊதியம், சட்டத்தின் எளிமையற்ற சொற்கள், நீதிமன்றங்களின் புரியாத செயல்பாடுகள் எல்லாமும் சேர்ந்து நியாயத்தைத் தேடிப் போகும் பாதையைக் கரடுமுரடாக ஆக்குகின்றன நம் சாலைகளைப் போல. நம் சாலைகளில் பாதசாரிகளுக்கு எங்கே இடம்? ஆகையால் அவர்கள் வாகனங்களுடன் இடத்திற்கு போட்டி போட வேண்டியிருக்கிறது. பிறகு வாகன விபத்துகள் அதிகமாக நிகழ்வதில் வியப்பென்ன? இதுபோலத்தான் நியாயத்தைத் தேடிச் செல்லும் பாதையும்.
÷யார்மேல் சந்தேகம் விழுகிறது, விசாரணைக் கைதியாக சிறைக்குப் போவதில் உள்ள பிரச்னைகள், வழக்கை நல்ல முறையில் நடத்திச் செல்ல திறமையான சட்ட உதவி, வழக்கின் செலவு, இப்படியாக நியாயத்தைத் தேடிப் போகும் சாலையின் பல திருப்பங்களைப் பார்த்தோம். எல்லோரும் சமம் என்பது நடைமுறையில் நடப்பதில்லை என்று தெரிகிறது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஆனால் சட்டத்தின் செயல்பாடு இந்த ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்திச் செல்லவேண்டும். இந்தக் கடமை காவல் துறைக்கும், நீதித் துறைக்கும் உள்ளது. நீதித்துறை என்றால் அதற்குள் நீதிபதிகள் மட்டுமல்லாமல், வழக்குரைஞர்களும் சட்டத்தின் வழிமுறையும் அடக்கம். இன்றும் சாதாரண மக்கள் நீதிமன்றத்திற்குப் போனால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள். அந்த நம்பிக்கையின் மேல்தான் ஜனநாயகம் நிற்கிறது.
கட்டுரையாளர்:
உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு).